வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (28/03/2017)

கடைசி தொடர்பு:12:14 (28/03/2017)

இல்லுமினாட்டி ஆவது எப்படி? அட இப்படிதான் பாஸ்!

இல்லுமினாட்டி, தமிழ்நாட்டுல கடந்த 5000 வருஷமா அதிகமா உச்சரிக்கப்படுற வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு எல்லாத்துக்குப் பின்னாடியும் இல்லுமினாட்டிதான் இருக்காங்கன்னு நிறைய பேர் நினைச்சிக்கிட்டு இருக்காங்க. மீம்களும் தூள் பறக்குது. இந்த இல்லுமினாட்டினா யாரு, எப்படி இருப்பாங்க, அவங்களுக்கு என்னதான் வேலைன்னு யாருக்குமே தெரியாது. வாட்ஸ்அப்ல வீடியோ ஸ்டேட்டஸ் வந்ததுக்குப் பின்னாடிகூட `அவங்க`தான் இருக்காங்கன்னு பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில இருக்கு. சரி சந்தேகங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். அந்த மாதிரி இல்லுமினாட்டி ஆக என்ன பண்ணணும்னு தெரியுமா? இதோ இல்லுமினாட்டி ஆக சில வழிகள்.

இல்லுமினாட்டி

* இல்லுமினாட்டி ஆக மிக முக்கியமான தகுதி எல்லா விஷயத்துக்கும் ரெடியா `எனக்கு அப்பவே தெரியும்னு` பதில் சொல்றதுதான். யார் என்ன சொன்னாலும் `இதெல்லாம் சிம்பிள் ப்ரோ, எனக்கு இதைப்பற்றி அப்பவே தெரியும்னு சொல்லிடணும் அவ்ளோதான். உதாரணமா ஆர்.கே.நகர் எலெக்‌ஷன்ல யார் ஜெயிப்பாங்கன்னு யாருக்குமே தெரியாது, ஆனா ரிசல்ட் வந்த பிறகு `எனக்கு அப்பவே தெரியும் இவர்தான் ஜெயிப்பாங்க'ன்னு கதை கட்டி பெயர், புகழ், ஈசிஆர்ல வீடு எல்லாம் வாங்கிக்கலாம். மொத்தத்துல உங்களுக்கு ஒரு விஷயம் பற்றி கொஞ்சம்கூட தெரியவே இல்லைனாலும் அதைத் தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கணும் பாஸ்.

* இதே மாதிரி இன்னொரு விஷயம்தான் `நான்தான் அப்பவே சொன்னேன்ல` விஷயம். இது ரொம்ப சிம்பிள். என்ன நடந்தாலும் நான் அப்பவே சொன்னேன் அதே மாதிரி நடந்துடுச்சின்னு சொல்லி சமாளிச்சிடணும். ஆகவே இதுக்கு முக்கியமா நீங்க பண்ண வேண்டிய விஷயம் ஏதாவது நடந்தா அதுக்கு ஆதரவாகவும் பேசணும், எதிராகவும் பேசணும். இப்படி கலந்துகட்டி பேசி வெச்சாதான் எதிர்காலத்துல என்ன நடந்தாலும் `நான் அப்பவே சொன்னேன்ல` அப்படின்னு சொல்ல முடியும். ஸோ எல்லாத்துக்கும் கருத்து சொல்லிக்கிட்டே இருங்க பாஸ். பிகாஸ் பேசுறது இஸ் எ வேர்ட், கருத்து சுதந்திரம் இஸ் அன் எமோஷன்.

* அடுத்து அவசியமான விஷயம் எல்லாத்துக்கும் பின்னாடி இல்லுமினாட்டிதான் இருக்காங்கன்னு மக்களை நம்ப வைக்கணும். சரியா சொல்லணும்னா தீபாவுக்கு படகு சின்னம் கிடைச்சதுக்கு, தினகரனுக்கும் தொப்பி சின்னம் கிடைச்சதுக்கும் பின்னாடிகூட அதே இல்லுமினாட்டிகள்தான் இருக்காங்கன்னு சொல்லிச் சொல்லி மக்களை நம்ப வைக்கணும். உங்க வீட்டுக்கு பேப்பர் லேட்டா வந்தாகூட அதுக்குப் பின்னாடி இல்லுமினாட்டிதான் இருக்காங்கன்னு எல்லோரையும் நம்ப வெச்சு இப்பவே ட்ரெய்னிங் எடுங்க பாஸ். ஏன்னா ஒருந்தங்களை ஏமாத்தணும்னா அவங்களை நம்ப வைக்கணும்.

* ஒருமாதிரி புதிராகவே பேசுறதுதான் இல்லுமினாட்டி ஆக மிக முக்கியமான விஷயம். இவன் என்ன பேசுறான்னு புரியாத அளவுக்கு புதிராவும், மார்க்கமாவும் பேசணும். என்ன விஷயம் நடந்தாலும் அதுக்கு கருத்து சொல்ற பழைய தமிழ் எழுத்தாளர்கள் மாதிரி நீங்களும் கருத்து சொல்லணும். இதுல மிக முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் நீங்க என்ன சொன்னாலும் அதை கமல் மாதிரி புரியாத மாதிரியே சொல்லணும். ஏன்னா நம்ம தமிழ்நாட்டுல கமல்தான் பாஸ் நல்லதோர் இல்லுமினாட்டி.

* அடுத்தபடியா நாம கத்துக்க வேண்டிய விஷயம்தான் `நான் பாத்துக்குறேன்`னு சொல்லி சமாளிக்கிறது. யாருக்காவது ஏதாவது பிரச்னை நடந்தா உடனே `அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை ப்ரோ, நான் பாத்துக்குறேன்'னு சொல்லி சீன் போடணும். உங்களால எதுமே பண்ண முடியலைனாலும் இந்த டயலாக்கை மட்டும் சொல்லாம இருக்கவே கூடாது. ஏன்னா உங்களால முடியும், தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் நூல் அளவுதான் வித்தியாசம்னு நம்ம ஏர்வாய்ஸ் மொபைல் கம்பெனி ஓனர் சஞ்சய் ராமசாமி சொல்லி இருக்கார்.

* நீங்க யாரு என்ன பண்றீங்கன்னு யாருக்குமே தெரியக் கூடாது. உங்களுக்கே தெரியக் கூடாது. ஆமாங்க நான் என்ன பண்றேன் எங்க இருக்கேன்னு எல்லோரும் ஹாஸ்பிட்டல்ல கேட்பாங்கள்ல அவங்ககூட இல்லுமினாட்டிதான். ஆனா முக்கியமா உங்களை யாருன்னு உங்களுக்கே தெரியக் கூடாதுன்னாலும் மத்தவங்களுக்கு நீங்க செஞ்சது தெரிஞ்சு இருக்கணும். ஆகவே உங்களைப்பற்றி உங்களுக்கே தெரியலைனாலும் மத்தவங்களுக்குத் தெரியவைங்க.

* இல்லுமினாட்டி ஆக மிக முக்கியமான, கடைசி விஷயம் வரலாற்றை தெரிஞ்சிக்கிறது. வரலாற்றுல என்னலாம் நடந்து இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டா போதும் ஈசியா இல்லுமினாட்டி ஆகிடலாம். வரலாறைத் தெரிஞ்சிக்கிட்டு எல்லாத்துக்குப் பின்னாடியும் இல்லுமினாட்டிதான் இருக்காங்குன்னு கதை விடுங்க பாஸ் அதுபோதும். ஏன்னா வரலாறு முக்கியம் அமைச்சரே!
கடைசியா இந்த ஆர்டிக்களை எழுதியதே ஒரு இல்லுமினாட்டிதான் என்பது நம்மில் கித்னா பேருக்குத் தெரியும்?

-இப்படிக்கு...
இல்லுமினாட்டி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்