விண்வெளி வீரர்களுக்கு வர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் பயிற்சி... இது “நாசா” டெக்னிக்..!

தொழில்நுட்ப உலகில் புதுவரவான மெய்நிகர் யதார்த்தம் எனப்படும் வர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் திரையரங்கில் படம் பார்ப்பது என்ற அனுபவத்தை மொபைலிலேயே தரமுடியும். எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்பதால் மொபைல் உற்பத்தி நிறுவனங்களும், கேம்ஸ் நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தில் கோடிக்கணக்கில் முதலீட்டைக் கொட்டி வருகின்றனர். புதுமைகளைப் புகுத்துவதில் பெயர் போன அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய நிறுவனமான 'நாசா', இந்த தொழில்நுட்பத்தை விரைவில் பயன்படுத்தவிருக்கிறது.

வர்ச்சுவல் ரியாலிட்டி

சமீப காலமாகவே வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் நாசா பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான Oculus வர்ச்சுவல் ரியாலிட்டி நிறுவனத்துடன் இணைந்து, வர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வசதியை நாசா அறிமுகப்படுத்தியது.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆய்வுக்கு, அமெரிக்காவின் செனட் சபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. Orion என்ற விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு வருகிறது. இந்த விண்கலம் தான் நாசாவின் அதிநவீன வசதிகள் கொண்ட விண்கலமாக இருக்கும். இது தவிர்த்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் விண்வெளி வீரர்களை அவ்வப்போது நாசா அனுப்பிவருகிறது. விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை விரைவில் நாசா பயன்படுத்தவிருக்கிறது.

நாசா வெளியிட்ட வர்ச்சுவல் ரியாலிட்டி செய்முறைப் படம்

விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்துவது அவசியம். இதற்காக அவர்களுக்குப் பலதரப்பட்ட பயிற்சிகள் தரப்படுகின்றன. விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை கிடையாது என்பதால், அந்த சூழ்நிலையில் பணிபுரியும் விதமாக விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். ஜீரோ கிராவிட்டி பயிற்சியைப் போல், நியூட்ரல் பயான்சி லேப்பிலும் பயிற்சி அளிக்கப்படும். 6.2 மில்லியன் கேலன்கள் நீர் நிறைந்த இந்த பிரமாண்ட நீச்சல் குளத்தின் அடியில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் மாதிரியில் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

வர்ச்சுவல் ரியாலிட்டி முறையிலும் நாசா இனி விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவிருக்கிறது. இதற்காக வீடியோ கேம்களை வடிவமைக்கும் அன்ரியல் எஞ்சின் நிறுவனத்துடன் நாசா கை கோர்த்துள்ளது. 3டி தொழில்நுட்ப உதவியுடன் வர்ச்சுவல் ரியாலிட்டியில் விண்வெளியும், சர்வதேச விண்வெளி நிலையத்தின் மாதிரியும் வடிவமைக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி தரப்படவிருக்கிறது. வர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்துகொண்டால் விண்வெளியில் இருப்பதுபோன்ற யதார்த்த உணர்வு ஏற்படும். இதன் மூலம் விண்வெளியில் செயல்படவும், விண்கலத்தில் உள்ள கருவிகளைக் கட்டுப்படுத்தவும் பயிற்சி அளிப்பது எளிது. ரோபோட்டிக் கிரேனின் உதவியுடன் விண்வெளி வீரர்கள் ஜீரோ கிராவிட்டியில் மிதக்கவிடப்படுவார்கள். அதன் பின், வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீரர்களுக்கு விண்கலத்தில் உள்ளது போன்ற யதார்த்த உணர்வு ஏற்படுத்தப்படும்.

 

 

இந்த வசதியை சமீபத்தில் ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகள், துல்லியமான கிராஃபிக்ஸ் மூலம் விண்வெளியில் இருப்பது போன்ற யதார்த்த உணர்வு ஏற்படும் என்பதால் விரைவில் இதன் மூலம் விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். மெய்நிகர் யதார்த்த உணர்வு கொண்ட பயிற்சியின் மூலம், இக்கட்டான சந்தர்ப்பங்களில் விண்வெளியில் விரைந்து செயல்பட முடியும். வர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் பயிற்சி அளிக்கும் போது வேலை நேரமும் பெரிதளவில் குறையும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட்போனில் கேம்ஸ் விளையாடவும், வீடியோக்களைப் பார்க்கவுமே வர்ச்சுவல் ரியாலிட்டி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை நாசா பயன்படுத்தவிருப்பது, இதில் புதுவிதப் பாய்ச்சலை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!