Published:Updated:

'ரகசியமாக தாக்கல் செய்யப்பட்ட  சென்னை மாநகராட்சி பட்ஜெட்!'  - கொதிக்கும் சட்டபஞ்சாயத்து இயக்கம் 

எஸ்.மகேஷ்
'ரகசியமாக தாக்கல் செய்யப்பட்ட  சென்னை மாநகராட்சி பட்ஜெட்!'   - கொதிக்கும் சட்டபஞ்சாயத்து  இயக்கம் 
'ரகசியமாக தாக்கல் செய்யப்பட்ட  சென்னை மாநகராட்சி பட்ஜெட்!'  - கொதிக்கும் சட்டபஞ்சாயத்து இயக்கம் 

சென்னை மாநகராட்சியின் நிதிநிலை பட்ஜெட், ரகசியமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் எவ்வளவு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் தெரியவில்லை.  

சென்னை பெருநகர மாநகராட்சியில் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியில் (மார்ச் மாதம்) கூட்டம் நடத்தி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும். மாநகராட்சி நிதித் துறை நிலைக்குழுத் தலைவர் பட்ஜெட் உரையை வாசிப்பார். தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் பிரநிதிகளான மேயர், கவுன்சிலர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் தனி அலுவலர் மூலம் மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, தனிஅலுவலரான கமிஷனர் கார்த்திகேயன் மூலம் மாநகராட்சி நிர்வாகம் நடந்து வருகிறது.

 இந்த நிதியாண்டின் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம், சென்னை மாநகராட்சிக்கு ஏற்பட்டதால் கமிஷனர் கார்த்திகேயன், நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். ஆனால் பட்ஜெட் குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ரகசியமாகவே பட்ஜெட் விவரங்கள் இருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

"கமிஷனர் கார்த்திகேயன், அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் நடப்பு நிதியாண்டுக்கான  வரவு-செலவு விபரங்களையும், வரும் நிதியாண்டுக்கான வருவாய் மற்றும் செலவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி ஆகிய விபரங்களையும் பெற்றார். இதன் அடிப்படையில், மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக பட்ஜெட் விவரங்கள் வெளியிடப்படவில்லை" என்று கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. 

இது குறித்து, மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், "தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, பட்ஜெட் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்தவிதிப்படி எந்த ஒரு புதிய அறிவிப்பையும் வெளியிடக் கூடாது. மேயர் இல்லாத சூழ்நிலையில் எந்த அறிவிப்பையும், சிறப்பு அதிகாரியான கமிஷனரால் வெளியிடவும் வாய்ப்பில்லை. கடந்த பட்ஜெட்டில் மாநகராட்சியின் செலவு, வரவு விவரங்கள், ஒதுக்கப்பட்ட நிதி ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டது. ஆனால், இந்த நிதி ஆண்டுக்குரிய பட்ஜெட் விவரங்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதோடு நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறவும் வாய்ப்புள்ளது" என்றனர். 

இந்தச்சூழ்நிலையில் சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த பட்ஜெட் எங்கே என்று கேள்வியை எழுப்பி உள்ளது சட்டபஞ்சாயத்து இயக்கம். அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் கூறுகையில், "சென்னை மாநகராட்சியில் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த பட்ஜெட் விவரம் வெளியிடப்படாமல் ரகசியமாக இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தேர்தல் நடத்தை விதி காரணமாக பட்ஜெட் விவரத்தை வெளியிடவில்லை என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் கமிஷனர் ராஜேஷ் லக்கானியிடம் விளக்கம் கேட்டு மனு கொடுத்துள்ளோம். அதுபோல சென்னை மாநகராட்சி கமிஷனரிடமும் மனு கொடுத்துள்ளோம். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை"என்றார். 

தமிழக சட்டசபையில்கூட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது. ஆனால், சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகும் அதை வெளியிடாததற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

- எஸ்.மகேஷ்