வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (29/03/2017)

கடைசி தொடர்பு:13:43 (29/03/2017)

எனக்கென்று தனி அடையாளம் வேண்டும்!’ - அலெக்ஸ் பால் மேனனின் மனைவி புதுமுயற்சி

அலெக்ஸ் பால் மேனன்

"பெண்களுக்கு எப்பவுமே கூடுதல் பொறுப்பு இருந்துட்டேதான் இருக்கும். அவங்க அதை  சமாளிக்கற திறமைகளை வளர்த்துட்டே இருப்பாங்க. அதுதான் பெண்கள்கிட்ட இருக்கிற  ஸ்பெஷாலிட்டி!” - ’பளிச்’ என்று பேச்சை ஆரம்பிக்கிறார் ஆஷா. இவர், ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனனின் மனைவி.  தற்போது இவர், குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு... கலை, மொழி, சுயமேம்பாடு ஆகிய பல்வேறு தளங்களில் பயிற்சி அளிக்கும் க்ரியேட்டிவான சுயதொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பெண்ணாக, ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவியாக, சுயமேம்பாட்டு பயிற்சியாளராக  தன்னுடைய சுவாரஸ்யமான வாழ்க்கை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் ஆஷா. அதற்கு முன் அலெக்ஸ் பால் மேனன் பற்றிய குட்டி ஃப்ளாஷ் பேக் இதோ...

2012-ம் ஆண்டில், சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள சுக்மா பகுதியில் கடத்தப்பட்டு, பதிமூன்று நாட்களுக்குபின் விடுவிக்கப்பட்டவர். அப்போது, அவருக்குத் திருமணமாகி  வெறும் ஐந்து மாதங்களே ஆகியிருந்தன. எப்போதுமே ‘செம கெத்தாக’ பார்க்கப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி என்ற பொறுப்பில் இருக்கும் நெருக்கடியை முதன்முறையாக உணர்ந்தார், ஆஷா. அதைப் பற்றி தனக்கே உரிய பாணியில் விவரிக்கிறார்... 

“என் வாழ்க்கையில மிகவும் மோசமான வருஷம் 2012. எங்க அப்பாவை இழந்த வருஷம்; அதே மாதிரி என் அத்தானையும் இழந்துடுவேனோனு பயந்த வருஷம். ஆனா, நான் சோர்ந்து போகவே இல்லை. அழவும் இல்லை! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... அவர் கடத்தப்பட்ட விஷயம் தெரிஞ்சும், வீட்டுக்கு வந்தவங்ககிட்ட இயல்பா பேசிட்டு இருந்தேன். அவர் சீக்கிரம் திரும்பி வந்திடுவார்ங்கிற நினைப்புலதான் இருந்தேன். ஆனா, அவர் கடத்தப்பட்ட  ஐஞ்சாவது நாள், என் எதிர்காலத்தைப் பத்தி பயம் வந்திருச்சு. நான்  அப்போ கர்ப்பமா இருந்தேன். அந்த பயத்துல, திருமணத்துக்கு முன்னால வேலை பார்த்த கம்பெனிக்கு, ’ஒருவேளை அவர் திரும்பி வரலைன்னா, எனக்கு மறுபடியும் வேலை வேணும்'னு லெட்டர்  எழுதி அனுப்பிட்டேன்'' என்று சொல்லி, வெள்ளந்தியாக சிரிக்கிறார்.

ஆஷா - அலெக்ஸ் பால் மேனனின் திருமணமே ஒரு சுவாரஸ்யமான சந்திப்பில்  உறுதியானதுதானாம்... “எங்களோடது அரேஞ்சு மேரேஜ். கல்யாணத்துக்கு முன்னாடி, நாங்க  ரெண்டு பேரும் பலதடவை தனியா சந்திச்சுக்கிட்டோம். எனக்கு நிறைய காதல் தோல்வி இருந்ததுனு அவர்கிட்ட சொன்னவுடனே அவர், ''கல்யாணத்துக்குப்  பிறகு எப்படி இருக்கிறோம் என்கிறதுதான் முக்கியம்'னு சொன்னாரு. அப்போ மனசுல  பதிஞ்சவருதான்!” - வெட்கத்துடன் புன்னகைக்கிறார் ஆஷா. 

`குடும்பமா... வேலையா?' என  எப்போதுமே பெண்களுக்கு எழும் கேள்வி ஆஷாவுக்கும் வந்தது. ``ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவினு எனக்கு எந்தச் சலுகையும் கிடைச்சதில்லை; நானும் அதை எதிர்பார்க்கலை. அதுக்குப் பதிலா, நான் என்னோட கேரியரை கொஞ்ச நாள் தள்ளிவெச்சுட்டு,  அவருக்கு எங்க எல்லாம் மாற்றல் வருதோ, அங்கே எல்லாம் நானும் போக வேண்டிய நிலை. ஆனா, இதை நான் பின்னடைவா பார்க்கல. ஒரு பெண்ணோட வாழ்க்கையில  இதுவும் ஒரு பகுதினு  நினைக்கிறேன்” என்று தெளிவாக கூறுகிறார்.
ஒரு வருடத்துக்கு முன், தனது கேரியர் மீது அக்கறைக்கொண்டு, இண்டிபெண்டன்ட் கன்சல்டன்ஸி  (independent consultancy) ஒன்றை ஆரம்பித்தார் ஆஷா. ``குழந்தைகள் சம்பந்தமா ஏதாவது பண்ணணும்னு நான் ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன். அதுமட்டுமில்லாம, நான் எனக்கு கிடைக்கிற நேரத்தை  சரியா பயன்படுத்திக்கணும்னு நினைச்சு ஆரம்பிச்சது இந்தப் புதுமுயற்சி. குழந்தைகளுக்கு பயிற்சிக் கொடுக்கறதோட  நிறுத்திக்காம, ஆசிரியர்களுக்கும் ‘க்ரியேட்டிவா’ கத்துக்கொடுக்கலாம்னு, பயிற்சி முகாம்கள் நடத்திட்டு வர்றேன்'' என்பவர், தொடர்ந்து பேசினார்...

``சின்ன வயசுல, எங்க  அப்பா எனக்கு ஒரு அட்வைஸ் பண்ணாரு... `ஒரு எக்ஸாம் எழுதப்போறேனா, ரொம்ப கஷ்டமான  கேள்விக்குப்  பதில் எழுத தயாரா போ! அப்போதான் எக்ஸாம் ஈஸியா இருக்கும்'னு! இந்த வார்த்தைகள்தான் என்னோட வாழ்க்கை முழுக்க நிறைஞ்சிருக்கும். ஆனா, “இன்னிக்கு... இந்த நிமிஷம் வாழற சந்தோஷத்தை நாம அனுபவிக்கணும். நாளைக்கு நம்ம வாழ்க்கையைத் திரும்பி பார்க்கப்போ, அது நிறைய அழகான நினைவுகளோட நிறைஞ்சிருக்கணும்'னு சொல்லிக்கொடுத்தது என் அத்தான் அலெக்ஸ்தான்!

அப்புறம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான மனநிலை இருக்கும். உதாரணமா, நமக்கு  நெருக்கமானவங்களோட பிறந்தநாளுக்கு கிஃப்ட் வாங்கி கொடுக்கணும்னாகூட, பெண்கள்  ரொம்ப யோசிச்சு, ரொம்ப மெனக்கிட்டு, அதைச் செய்வாங்க. ஆனா, ஆண்கள் சட்டுனு ஒரு கிஃப்ட்டை  வாங்கிட்டு வந்து நம்ம கையில் கொடுப்பாங்க. அந்த வகையில், பெண்கள் இயல்பாகவே சிறந்த கற்பனை வளமிக்கவர்கள்னு நான் சொல்லுவேன். அவங்க எங்கே போனாலும் பொழைச்சுப்பாங்க... என்னை மாதிரி!” என்று  அழகாக சிரித்து முடிக்கிறார் ஆஷா.                                                                                                                                                                                                                

 - ஷோபனா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்