4.7 லட்சத்துக்குக் களமிறங்கிய டாடாவின் காம்பேக்ட் செடான்- டிகொர்! #TIGORStyleback | Tata launches its new compact sedan, tigor at 4.7 lakhs!

வெளியிடப்பட்ட நேரம்: 21:57 (29/03/2017)

கடைசி தொடர்பு:12:43 (30/03/2017)

4.7 லட்சத்துக்குக் களமிறங்கிய டாடாவின் காம்பேக்ட் செடான்- டிகொர்! #TIGORStyleback

டியாகோவின் வெற்றியைத் தொடர்ந்து, அதனை அடிப்படையாகக் கொண்டு, ஒரு காம்பேக்ட் செடான் காரைத் தயாரித்துள்ளது டாடா. டிகொர் (Tigor: Tee-gor) என அதற்குப் பெயர் சூட்டியுள்ள டாடா, அதனை 4 வேரியன்ட்களில், 4.7 லட்சம் - 7.09 லட்ச ரூபாய்க்குக் (டெல்லி எக்ஸ் ஷோரும் விலை) களமிறக்கியுள்ளது. கடந்த வாரத்திலேயே இதற்கான புக்கிங்கை, டாடா டீலர்கள் ஏற்கனவே துவக்கிவிட்டனர் (புக்கிங் தொகை - 5,000 ரூபாய்). 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கைட் 5 என்ற பெயரில் கான்செப்ட்டாகக் காட்சிபடுத்தப்பட்ட கார்தான், டிகொர் காம்பேக்ட் செடானாக உருமாறியுள்ளது. Notchback/Fastback கார்களைப் போல டிகொர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாணியிலான வடிவமைப்பிற்கு, Styleback எனப் பெயர் சூட்டியுள்ளது டாடா. எனவே B-பில்லர் வரை பார்ப்பதற்கு டியாகோ போலவே இருந்தாலும், அதன் பிறகு கூபே கார்களில் காணப்படும் ரூஃப்லைன் டிஸைனைக் கொண்டிருக்கிறது டிகொர்.

 

டிகொர்

 

246மிமீ அதிக நீளம் மற்றும் 50மிமீ கூடுதல் வீல்பேஸ் இருப்பதால், டியாகோவைவிட அதிக இடவசதியை இங்கே எதிர்பார்க்கலாம். மேலும் டிகோர் காரின் பின்பக்க டெயில் கேட் மற்றும் LED டெயில் லைட், பின்பக்க பம்பர் மற்றும் கதவின் தோற்றம் ஆகியவை, டியாகோவில் இருந்து வித்தியாசப்படுகின்றன. இதனால் காரின் எடையும் டியாகோவைவிட 40 கிலோ அதிகரித்திருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட், ஸ்டைலான 15 இன்ச் அலாய் வீல்கள், Harman டச் ஸ்கிரீன் சிஸ்டம், கப் ஹோல்டர் உடனான பின்பக்க ஆர்ம்ரெஸ்ட், ரிவர்ஸ் கேமரா, கிளைமேட் கன்ட்ரோல் என டியாகோவுடன் ஒப்பிடும்போது, அதிக சிறப்பம்சங்கள் டிகொர் காரில் இடம்பெற்றுள்ளன. காம்பேக்ட் செடான்களிலே, அதிக பூட் ஸ்பேஸைக் (420 லிட்டர்) கொண்டிருக்கும் காராக டிகொர் இருக்கிறது! இன்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, டியாகோவில் இருக்கும் அதே 3 சிலிண்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள்தான் இதிலும்.

 

டிகொர்

 

என்றாலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இருப்பது கவனிக்கத்தக்கது. டியாகோவில் கிடைக்கும் 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனை பின்னாளில் எதிர்பார்க்கலாம். இந்த செக்மென்ட் துவங்குவதற்குக் காரணமாக இருந்த இண்டிகோ eCS காருக்கு மாற்றாகவும், ஜெஸ்ட் காருக்குக் கிழேயும், டிகொர் காரைப் பொசிஷன் செய்துள்ளது டாடா. தவிர போட்டியாளர்களைவிடக் (மாருதி சுஸூகி டிஸையர், ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ, ஃபோர்டு ஆஸ்பயர்) குறைவான விலை இதனை உணர்த்திவிடுகிறது. டிகொர் காருக்குப் போட்டியாக, செவர்லே நிறுவனம் Essentia எனும் காம்பேக்ட் செடானைக் களமிறக்குகிறது. இது முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டுள்ள பீட் ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் நிறுவனமும், விரைவில் எக்ஸென்ட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது. டிகொர் காரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள் பின்வருமாறு;

 

டிகொர்

 

டாடா டிகொர் - 1.2 லிட்டர் பெட்ரோல்

XE - 4.7 லட்சம்    
XT - 5.41 லட்சம்
XZ - 5.9 லட்சம்
XZ(O) - 6.19 லட்சம்

 

டாடா டிகொர் - 1.05 லிட்டர் டீசல்

XE - 5.6 லட்சம்
XT - 6.31 லட்சம்
XZ - 6.8 லட்சம்    
XZ(O) - 7.09 லட்சம்

- ராகுல் சிவகுரு.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்