வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (31/03/2017)

கடைசி தொடர்பு:14:15 (31/03/2017)

இன்னைக்கு மறக்க முடியாத நாள்... ஜியோ ஆஃபர் முடியப் போகிற நாள்

 ஜியோ ஆஃபரின் கடைசி நாள் இன்று... எந்தப் பிரச்னை வந்தாலும் சும்மா கல்லு மாதிரி நின்ன பசங்க ஜியோ ஆஃபர் முடியப்போகுதுன்னு தெரிஞ்சதும் கண்ணுல தண்ணி விட்டாங்க... அப்படி என்னதான் பண்ணுச்சு இந்த ஜியோ?

ஜியோ

* எந்த இடத்துக்குப் போனாலும் அங்க நாமதான் ராஜா. நம்மளோட தனிமையை போக்கியதற்கு ஜியோவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. காசு கொடுத்து ரீசார்ஜ் பண்ணாத பசங்களுக்கு ஃப்ரீயா கால், மெசேஜ், இன்டர்நெட்னு எல்லாமே கொடுத்தா அல்வாவோடு சேர்த்து மிக்ஸரையும் கொடுத்த மாதிரி. அப்படி சந்தோஷம் கொடுத்ததுதான் இந்த ஜியோ. 

* நம்ம மட்டும் வாழ்ந்தா போதாது. மத்தவங்களையும் சந்தோஷப்படுத்தி நமக்குள்ள இருந்த நல்லவனை சுண்டி எழுப்பிவிட்டதும் இந்த ஜியோதான். நம் நண்பர்கள் எத்தனைப் பேர் இருந்தாலும் எல்லோருக்கும் ஹாட்ஸ்பாட் போட்டு இன்டர்நெட்டை அள்ளி வழங்கியதில் நம்ம பசங்க கர்ணனை மிஞ்சி விட்டார்கள். ஏன்னா ஜியோ 4ஜி-யில் மட்டும்தான் யூஸ் பண்ண முடியும்... 3ஜி மக்கள் எல்லாம் பாவம்தானே. இதுதான் மகிழ்வித்து மகிழோ?

ஜியோ

* காசு கொடுத்து தியேட்டரில் படம் பார்க்கப் போவதற்கு ரத்தக்கண்ணீர் வடித்தவனில் நானும் ஒருவன். பெரிய தலைங்க படங்களைத் தவிர எந்தப் படமும் தியேட்டருக்குப் போய் பார்க்காமல் இருந்தவனில் நானும் ஒருவன். ஆனால் அதையெல்லாம் மாற்றியமைத்து இந்த ஜியோ. சின்ன பட்ஜெட் படங்களைக்கூட நல்ல ப்ரின்ட் வந்தவுடன் டவுன்லோட் செய்து... இனிமேல் பார்க்க முடியாதே கோபால்!

* முக்கால்வாசிப் பசங்களுக்கு யூ டியூப் என்றாலே என்னன்னுகூட தெரியாது. ஆனால் ஜியோ வந்த பிறகு யூ டியூபைப் பற்றித் தெரியாதவனே இருக்க முடியாது. ஒரு பாடலை மறுபடி மறுபடி கேட்பது இயல்பு. அதை ஒருமுறை டேட்டா செலவிட்டு டவுன்லேட் செய்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம், பார்க்கலாம். ஆனால் இந்த ஜியோ வந்த பிறகு எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் யூ டியூப் தளத்திற்கு சென்றுதான் பார்ப்போம். டவுன்லோட் செய்தால் கௌரவக் குறைச்சல் ஏற்பட்டுவிடுமே. 

ஜியோ

* தொடர்ந்து நாட்டில் பல பிரச்னைகள். டீமானிடைஷேசனிலிருந்து ஹைட்ரோ கார்பன் வரை பல பிரச்னைகளில் யாருக்குப் பயனிருந்ததோ இல்லையோ இந்த மீம் க்ரியேட்டர்ஸ்களுக்கு ஜியோதான் மிகப் பெரிய வரப்பிரசாதம். ஏதாவது டெம்ப்லேட் வேண்டுமென்றால் உடனடியாக யூ டியூபில் வீடியோவைப் போட்டு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மீம் போட உதவியது இந்த ஜியோ. ஒரு சில வீடியோக்கள் யூ டியூபில் இல்லையென்றால் வேறு வெப்சைட்டில் ஒட்டுமொத்தப் படத்தையும் டவுன்லோட் செய்து அதிலிருந்து எடுக்க உதவியதும் இந்த ஜியோதான். 

* இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் எங்கு பார்த்தாலும் லைவ்தான். அந்த லைவைத் திட்டிக்கொட்டியவர்களே ஜியோ வந்தவுடன் லைவில் வரத் தொடங்கிவிட்டார்கள். அந்த அளவிற்கு ஜியோ மக்களோடு இணைய வைத்திருக்கிறது. ஆனால் நாளை முதல் ஜியோ இல்லை என்று தெரிந்த மக்கள் கண்ணில் ஜலம் வெச்சுண்டார். கவலைப்படாதீங்க பாஸ். அம்பானி நம்மை அவ்வளவு சீக்கிரம் கைவிட மாட்டார். 

* இப்போ ரிலீஸ் ஆகும் டீசர், ட்ரெயிலர் எல்லாமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வியூவ்ஸ் வருவதற்குக் காரணம் என்ன? கொஞ்சம்கூட லேட் ஆகாமல் பார்க்கக் காரணமாக இருக்கும் இந்த ஜியோதான். அதில் தல ரசிகர்களில் ஆரம்பித்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள்வரை ஜியோ யூசர்ஸ்தான். ஒரு ஆளே 100 முறை பார்த்து டீசர் ட்ரெயிலர்களின் மகத்தான வெற்றிக்கு பெரும் பங்குவகிக்கின்றனர். ஹேட்ஸ் ஆஃப் ஃபேன்ஸ்!

ஆக... ஜியோ யூஸ் பண்ண, இனிமேல் யூஸ் பண்ண முடியாத காலகட்டத்தை எதிர்கொள்ளப் போகிற நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்! கவலைப்படாதீங்க பாஸ்... அடுத்து மியோன்னு ஏதாவது சிம் வராமலா போகுது? நம்பிக்கை அதானே எல்லாம்.

 

- தார்மிக் லீ


டிரெண்டிங் @ விகடன்