வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (01/04/2017)

கடைசி தொடர்பு:15:38 (01/04/2017)

ஃபேஸ்புக் தலைமையகத்தின் அருகே வீடற்றவர்கள்... சிலிக்கான் பள்ளத்தாக்கின் வறுமைக் கதை!

இதை யோசித்துப் பாருங்கள். மாலை நேரம் வீட்டிலிருந்து நடக்கத் தொடங்குங்கள். கைகளில் பணம் மற்றும் செல்போனை எடுத்துக் கொள்ளாதீர்கள். தூரம்...தூரம் நடந்து கொண்டே இருக்கிறீர்கள். ஊர் அடங்கிப் போய் விடுகிறது. கால்கள் சோர்ந்து போய்விடுகின்றன. தூக்கம் வருகிறது. பசி எடுக்கிறது. அந்த இரவை எங்கு, எப்படி கழிப்பீர்கள்?. வெட்ட வெளியில் படுக்க முடியாது, கொசுக் கடிக்கும், குளிரடிக்கும். காவல்துறை கேள்வி கேட்கும். திடீரென யார் வீட்டிலும் தங்க அனுமதி கேட்டிட முடியாது. கேட்டாலும் அது அத்தனை எளிதில் கிடைத்துவிடாது.  பரந்து, விரிந்து கிடக்கும் இந்த நிலப்பரப்பில் உங்களால், உங்களுக்கு சொந்தமான ஒரு கூரையில்லாமல் இருக்க முடியாது. அந்த ஓர் இரவு உங்களுக்கு நரகமாய் இருக்கலாம். நினைவில் கொள்ளுங்கள்,  உலகில் உள்ள கோடானுகோடி மக்கள் அந்த நரகத்தை ஒரு நாள் அல்ல... ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை இங்கு, இப்போது சொல்வதற்கும் பேஸ்புக் நிறுவனத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 

ஃபேஸ்புக்

சிலிகான் பள்ளத்தாக்கில் இருக்கும் மென்லோ பார்க்கில் இருக்கிறது பேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகம். உலகின் சொர்க்க பூமி. இங்கில்லாத வசதிகளே இல்லை என்று சொல்லலாம். அதன் நுழைவுவாயிலிருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் ஒரு பழுதடைந்து போன ரயில் தண்டவாளம் இருக்கிறது. நீண்ட நாள் உபயோகப்படுத்தப்படாததால், அது முழுக்கவே புதர் மண்டிக் கிடக்கிறது. அதன் இரு பக்கங்களிலும் அரசு மற்றும் தனியாரின் இடங்கள் இருக்கின்றன. காடாக உருமாறிப் போயிருக்கும் அந்தப் புதர் நிலத்தில் ஆங்காங்கே கிழிந்த தார்பாய்களைக் கட்டிக் கொண்டு ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பேஸ்புக் தலைமையகத்தை ஒட்டியிருக்கும் இந்தச் சூழலை மாற்ற பேஸ்புக் நிறுவனம் சரியான முயற்சிகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பேஸ்புக் நிறுவனம் அமைந்திருக்கும் கலிபோர்னியா மாகாணம், அமெரிக்காவிலேயே அதிக வீடற்றவர்கள் இருக்கும் பகுதியாக அறியப்படுகிறது. அமெரிக்காவின் வீடற்றவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் இங்கு தான் இருக்கின்றனர். உலகில் அதிகம் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இருக்கும் இந்த சிலிகான் பள்ளத்தாக்கின் மறுபக்கம்... பசியும், பட்டினியும், வறுமையும் சூழ்ந்த ஒரு கூட்டம் இருப்பது தான் கேப்பிடலிச பொருளாதாரத்தின் யதார்த்தம், இயற்கையின் முரண். 

 

சிலிகான் பள்ளத்தாக்கில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் வேலை வாய்ப்புகள், அங்கு மனிதக் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இது அந்தப் பகுதியில் சாமானியர்கள் வாழ்வதற்கான சாத்தியங்களை சாகடித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில், சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் அங்கு வேலை செய்பவர்களுக்காக கூடுதலாக 22 ஆயிரம் வீடுகள் வரை தேவைப்படுகின்றன. இதைப் பூர்த்தி செய்ய நிறுவனங்கள் அந்தப் பகுதிகளில் தொடர்ந்து வீடுகளைக் கட்டி வருகின்றன. ஆனால், அதில் 26% வீடுகளில் மட்டுமே குறைந்த வருமானம் பெறுபவர்களால் குடியேற முடியும். அதாவது, பெரும் பணம் படைத்தவர்களால் மட்டுமே இந்தப் பகுதியில் வாழ முடியும். சிலிகான் பள்ளத்தாக்கில் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குறைந்த வருமானம் பெறுபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே தினமும் நூறு மைல்களுக்கு அப்பாலிருந்து பயணித்து வந்து வேலை செய்கிறார்கள். சிலிகான் பள்ளத்தாக்கின் வருமான ஏற்றத்தாழ்வுகளுக்கு பேஸ்புக் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. 

கூகுளையோ, ஆப்பிளையோ கேட்காத கேள்வியை பேஸ்புக்கிடம் கேட்க ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. சமீபத்தில் பேஸ்புக் தன் அலுவலகத்தை விரிவாக்கம் செய்தது. இதற்காக 1,26,000 சதுர அடி நிலம் வாங்கியது. கூடுதலாக, 6,500 புதிய ஊழியர்களை பணிக்கமர்த்தியுள்ளது. சட்ட ரீதியிலேயே, கார்ப்பரேட் சமூக பங்களிப்பாக பேஸ்புக் நிறுவனம் 6.3 மில்லியன் டாலர்களை செலவிட வேண்டும். அதோடு கூடுதலாக கொஞ்சம் பணத்தைச் சேர்த்து, சாமானியர்களுக்கு ஏற்ற வகையில் 20 மில்லியன் டாலர்கள் செலவில் வீடுகள் கட்டப்படும் என்று கடந்த டிசம்பரில் பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. ஆனால், அதற்கான முன்னெடுப்புகளை நிறுவனம் சரிவர செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது குறித்து சில அமெரிக்க நாளிதழ்கள் பேஸ்புக்கைத் தொடர்பு கொண்டபோது, நிறுவனம் பேச மறுத்துள்ளது. 

ஃபேஸ்புக்

(Courtesy of the Menlo Park Fire Protection District)

கிழிந்த தார்பாய்களைக் கட்டிக் கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இவர்களில் நிறைய பேர் போதைக்கு அடிமையானவர்கள் என்று அரசுத் தரப்பு சொல்கிறது. கடந்த வருடம், திறந்தவெளியில் சமைக்கும் போது காய்ந்திருந்த புற்களில் தீப்பற்றி இரண்டு ஏக்கர் அளவிற்கு தீப்பற்றி எரிந்தது. இந்த வீடற்றவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது, அவர்கள் போக்கிடமில்லாமல் மீண்டும் அங்கு குடியேறுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. கார்ப்பரேட் பொருளாதாரத்தில் இந்த ஏற்றத் தாழ்வு மிக யதார்த்தம் தான். ஆனால், உலகின் பெரும் வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா... இன்றைய உலகப் பொருளாதாரத்தை ஆளும் சிலிகான் பள்ளத்தாக்கு... இதன் அருகில் இந்த நிலை ஏற்பட்டிருப்பது நிச்சயம் சாமானியருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம் தான். 

" உணவின்மை, உடையின்மை, வீடின்மை தான் வறுமை என்று நினைக்கிறோம். ஆனால், அன்பின்மை, பாதுகாப்பின்மை, புறக்கணிப்பு ஆகியவை தான் மிகக் கொடிய வறுமை"

 - அன்னை தெரசா.

ஆனால், உலகின் வல்லரசான அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் இருப்பவர்களோ இவை அனைத்தையுமே அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா பணக்கார நாடு தான். ஆம், அது பணக்காரர்களுக்கான நாடு!

- இரா. கலைச் செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்