Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனிதனை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு... காடுகளை அழித்ததுதான் காரணமா?

தன் மனைவி முனு மற்றும் இரண்டு குழந்தைகளை அவரின் அம்மா வீட்டுக்கு வழியனுப்பிவிட்டு வீடு திரும்புகிறார் அக்பர் சலுபிரோ (வயது 25). இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுப் பகுதி. மாலை இருட்டும் நேரத்தில், பாமாயில் எடுப்பதற்காகப் போடப்பட்டிருக்கும் தன் பனந்தோப்பிற்குக் கிளம்பிப் போகிறார் அக்பர். அமைதியாக, தனியாக நடந்துக் கொண்டு தன் மரங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் ஆள் நடமாட்டமே இல்லை. தனக்குப் பின்னால், ஏதோ வருவது போல் அவருக்கு உணர்வு ஏற்படுகிறது. திரும்பிப் பார்க்கலாமா?, வேண்டாமா? என்று சில நொடிகள் யோசிக்கிறார். ஆனால், அவர் யோசித்து முடிவெடுப்பதற்குள்... அந்தக் கூர்மையான பற்கள் அவரின் முதுகைத் துளையிடுகின்றன. அவர் சுதாரிப்பதற்குள் அந்த மலைப்பாம்பு அவரை உயிரோடு விழுங்குகிறது.

 

 

 

மலைப்பாம்பின் வாய்க்குள் கொஞ்சம் கொஞ்சமாக அவர் உள்ளே போக... எட்டுத்திக்கும் கேட்கும் அளவிற்கு மரண ஓலமிடுகிறார். 
இரண்டு நாட்களாக அக்பரைக் காணவில்லையே என்று ஊர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அப்போது அக்பர் தோட்டத்தை ஒட்டியிருக்கும் ஒரு சாக்கடையில் 23 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பு, வயிறு புடைத்த நிலையில் அசைவற்றுக் கிடக்கிறது. அதிலிருந்து சில அடி தூரத்தில் அக்பரின் ஒரு கால் பூட்ஸ் மட்டும் தனியே கிடக்கிறது. ஊர் மக்கள் கூடுகிறார்கள். பேசுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் மலைப்பாம்புகளை மிகப் புனிதமானதாக கருதுபவர்கள். இறுதியாக, மலைப்பாம்பை எடுத்துப் புரட்டிப் போடுகிறார்கள். அதன் புடைத்த வயிற்றில் ஒரு பெரிய உருவம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அது அக்பர் தான் என்று பலரும் சொல்கிறார்கள். 

இந்தோனேசியாவில் மலைப் பாம்பு விழுங்கிய அக்பர்இறுதியாக 18 இன்ச் நீளமான வேட்டைக் கத்தியைக் கொண்டு அதன் வயிற்றைக் கிழிக்கத் தொடங்குகிறார்கள். புடைத்திருக்கும் அந்த வயிற்றில் மெல்லிய கீறல் போட்டவுடனேயே, அது கிழியத் தொடங்குகிறது. அந்த ஒற்றைக் கால் பூட்ஸைப் பார்த்த உடனேயே, அது அக்பர் என்பதை உறுதி செய்கிறார்கள். கொஞ்சம், கொஞ்சமாக அந்த வயிற்றைக் கிழித்து பிணமாகிப் போயிருக்கும் அக்பரை வெளியில் எடுக்கிறார்கள்.

ஹாலிவுட் படக்காட்சியை விஞ்சும் அளவிற்கு சில தினங்களுக்கு முன்பு நடந்தேறிய இந்த சம்பவம் உலகம் முழுக்கவே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இது போன்ற மலைப்பாம்புகள் தன்னுடைய கூர்மையான பற்களைக் கொண்டு இரையைக் கடிக்கும். பின்னர், அந்த இரையை கடுமையாக நெருக்கி, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி... அந்த இரை இறந்தபின் அதை விழுங்குவது தான் வழக்கம் என்று நம்பப்பட்டது. 2015ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கூட, மலைப்பாம்பு, போயஸ் (Boas), அனகோண்டா போன்ற பாம்புகள் இரையை நெருக்குவதில்லை, மாறாக ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி இரையைக் கொல்வதாக சொல்லப்பட்டது. ஆனால், உயிரோடு ஒரு இரையை மலைப்பாம்புகள் விழுங்குவது என்பது அரிதிலும் அரிதாக நடக்கக் கூடியது. இது இதுவரை அறியப்பட்ட இயற்கைக்கு எதிராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

2005ல் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இதே போன்ற ஒரு மலைப்பாம்பு, ஒரு பெரிய முதலையை உயிரோடு விழுங்க முயன்றது. ஆனால், சில நிமிட போராட்டத்திலேயே வயிறு வெடித்து அந்தப் பாம்பும், முதலையும் ஒரு சேர இறந்துவிட்டன. இந்த சம்பவத்தில் அந்த மலைப்பாம்பு அக்பரை முதுகுப் புறத்திலிருந்து தாக்கியிருக்கிறது. மனிதனின் தோள்பட்டைகளை நொறுக்குவது என்பது, பாம்புகளுக்கு மிகக் கடினமான ஒன்று. இருந்தும், இந்த மலைப்பாம்பு பின்னாலிருந்து அவரை விழுங்கியிருப்பது ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து, அந்தப் பகுதி விவசாயிகள் தோட்டத்திற்கும், தோப்புகளுக்கும் போக பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். 

பாம்புகள் மனிதர்களை அழிக்க காரணம் காடுகள் அழிப்பு இந்தோனேசியா

இந்தோனேசியாவின் பிரபல கல்லூரி பேராசிரியர் ரஹ்மான், பாம்பின் இந்த செயலுக்குக் காரணம் காடுகள் அழிப்பு தான் என்ற கண்ணோட்டத்தை முன்வைக்கிறார். பாமாயில் பயன்பாட்டிற்காக அதிகப்படியான காடுகள் அழிக்கப்பட்டது, பாம்புகளுக்கான இரைகளை அழித்துவிட்டது. காடுகள் அழிந்து தோப்புகளும், தோட்டங்களும் உருவாக்கிய காரணத்தால் அங்கு பல்லுயிர்ப் பெருக்கம் என்பது முற்றிலும் முடங்கிப் போனது. பூச்சிகள், ஊர்வனைகளில் தொடங்கி பல மிருகங்களுக்கும் உணவுச் சங்கிலியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் தான் இப்படியான திடீர் மனித - மிருக தாக்குதல்கள் நடப்பதற்கான காரணங்களாக இருக்கின்றன. ஏற்கனவே, இந்தோனேசியாவின் பொர்னியோ காடுகளில் இருந்த உராங்குட்டன்கள் அழிய முக்கிய காரணமாக இருந்தது காடுகள் அழிப்பு தான். காடுகள் அழிய, மரங்கள் அழியும். மரங்கள் அழிய மிருகங்கள் அழியும். எல்லாம் அழியும் போது... எல்லாவற்றையும் அழித்து முடிக்கும் போது மனித இனமும் அழிந்து போகும். 

 

மலைப்பாம்பு சில துளிகள்...

- உலகிலேயே நீளமாக வளரக்கூடிய பாம்பு வகை இது. 

- அதிகபட்சமாக 32 அடி நீளம் வரை வளரக்கூடியவை.

- ஆஸ்திரேலியா, இந்தியா, நேபால், இலங்கை, பர்மா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த வகைப் பாம்புகள் காணப்படுகின்றன. 

பாம்புகள் மனிதர்களை விழுங்கிய சில சம்பவங்கள்...

- 2013ல் கனடாவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை பக்கத்திலிருந்த ஒரு கடையின் கூண்டிலிருந்து தப்பித்த ராக் பைத்தான் ( Rock Python) வகைப் பாம்பு கொன்று விழுங்கியது. 

- ஃப்ளோரிடாவில் வீட்டில் பர்மீய பாம்பை வளர்த்து வந்தார் ஒருவர். ஒரு இரவு அவரின் குழந்தையையே அந்தப் பாம்பு விழுங்கிவிட்டது. 

- வெனிசுலாவின் ஒரு மிருகக்காட்சி சாலையில் இரவுப் பணியிலிருந்த கண்காணிப்பாளரை விழுங்கியது ஒரு பர்மீய மலைப்பாம்பு. 

 

- இரா. கலைச் செல்வன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close