Published:Updated:

‘சொல்லாதே செய்!' - விவசாயிகளுக்காகக் கண் கலங்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

‘சொல்லாதே செய்!' - விவசாயிகளுக்காகக் கண் கலங்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்
‘சொல்லாதே செய்!' - விவசாயிகளுக்காகக் கண் கலங்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

‘சொல்லாதே செய்!' - விவசாயிகளுக்காகக் கண் கலங்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

தமிழ்த் திரைப்பட உலகில் இன்று முன்னணி நடிகராக வலம் நடிகர் ராகவா லாரன்ஸ், சமீபமாக  தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலிருந்து ஒரு தொகையை ஒதுக்கி சமூகப்பணி செய்து வருகிறார்.  தற்போது விவசாயிகளுக்காக களம் இறங்கியிருக்கும் அவர், தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில் வறட்சியால் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன மூன்று விவசாய குடும்பங்களை பார்வையிட நேற்று வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், " 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் மூலமாக ஒரு கோடிரூபாய் கொடுத்திருந்தேன்.  இப்போது, 'சிவலிங்கா' படம் முடிஞ்சிருக்கு. அதன் மூலமா விவசாயிகளுக்கு உதவலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். எவ்வளவு தொகை என்பதை, சில காரணங்களால் சொல்ல விரும்பவில்லை. முதற்கட்டமாக 25 குடும்பங்களைத் தேர்வு செய்து, அந்த 25 குடும்பங்களுக்கும், இரண்டு மாடுகள், இரண்டு கன்றுகள், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் எல்லாம் நேற்றுதான் கொடுத்தேன். விவசாயிகளின் நிலையை நினைத்து மனசுக்கு ஒரு பக்கம் கஷ்டமாக இருந்தாலும், என் செய்யும் இந்த உதவி, என் மனதுக்குச் சந்தோஷத்தை தருகிறது. நான் கிராமத்து பக்கமெல்லாம் போய் பழக்கமே இல்லை. இப்போதுதான், கிராமங்களுக்குள் சென்று பார்க்கத் தொடங்கியிருக்கிறேன். நாட்டுக்கே சோறு போடும் விவசாயிகள் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். தாலியை அடகு வைத்துவிட்டு மீட்க முடியாத அளவுக்கு வறுமையில் தவிக்கிறார்கள். அவர்களை வீடு வீடாகச் சென்று பார்த்துப் பேசி வருவதுடன், அவர்களுக்குத் தேவையான என்னால் முடிந்த சில உதவிகளையும் செய்தது மனசுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைத் தருகிறது" என்று கண் கலங்கினார்.

" 'பல வீடுகளில், விவசாயிகள் பொண்டாட்டி தாலியை அடகு வைத்துவிட்டு மீட்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால், வீட்டுப் பெண்கள் எல்லாம், கழுத்தை மறைத்துக்கொண்டு விசேசங்களுக்கு சென்று வருவதைப் பார்க்கும்போது, மனம் பாரமாக ஆவதை உணர்கிறேன். தாலியைக் கூட மீட்டுக்கொடுக்க முடியாதா என்று வீட்டில், கணவன் மனைவிக்குள் சண்டை நடக்கிறது. அந்தத் துயரம் தாங்காமல் நிறையபேர் இறந்து போகிறார்கள்' என்று தெய்வ சிகாமணி ஐயா என்னிடம் சொன்னார். அதில் 50 குடும்பங்களைத் தேர்வு செய்து அவர்களின் கடனை அடைத்து, அடகு கடையில் உள்ள அவர்களுடைய 'தாலியை' மீட்டுக்கும் முயற்சியில் இருக்கிறேன்.

ஈரோட்டில் நேற்று இரண்டு குடும்பத்தினருக்கு தாலியை மீட்டுக்கொடுத்தோம். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் இதை எந்த உள்நோக்கத்துடனும் செய்யவில்லை. எனக்கு அரசியல் பிடிக்காது. அரசியல் தெரியாது. தர்மம் பிடிக்கும். உயிர் உள்ளாவரைக்கும் தர்மம் பண்ணலாமென்று ஆசைப்படுறேன். மாணவர்களுக்காக ஜல்லிக்கட்டுக்காகச் சின்ன உதவி செய்தேன். இப்போது விவசாயிகளுக்காக இறங்கியிருக்கிறேன். உங்கள் எல்லாருடைய ஆசீர்வாதமும் எனக்கு மட்டும் இல்லை, பாதிக்கப்பட்ட அத்தனை விவசாயிகளுக்கும் தேவை.

விவசாயிகள் வாங்கி உள்ள கடன்களையெல்லாம், அரசாங்கம் தள்ளுபடி செய்கிறதோ இல்லையோ, முதற்கட்டமாக நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும். ஒரு நாள் சினிமா பார்க்கிற காசை மிச்சம் பண்ணி ஒன்று சேர்த்தோமென்றால், ஒரு விவசாயி குடும்பத்தை காப்பாற்ற முடியும். நான் தனி ஒரு ஆளா ஐம்பது விவசயாயிகளுடைய கடனைத் தீர்க்க முடியும். 25 பேருக்கு மாடு வாங்கித்தர முடியும். ஆனாலும், நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி, வறட்சியில் இறந்துபோன 271 விவாசிகளுடைய குடும்பங்களுக்கும் உதவலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நீங்களும் உங்களது ஆடம்பர செலவுகளை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி, உங்களுக்கு பக்கத்தில் கஷ்டப்படுற விவசாயிகளுக்கு உதவுங்கள். விவசாயிகள், அவுங்களுடைய பிரச்னைக்காக பேராடுறாங்கனு நீங்க நெனச்சிகிட்டு இருக்கீங்க. அது தவறு. நம்ம அன்றாடம் சாப்பிட வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

நமக்கும் தண்ணீர் தேவை. நமக்கும் உணவு தேவை என விவசாயிகள் நமக்காகத்தான் போராடுகிறார்கள். விவசாயிகளின் ஒவ்வொரு போராட்டத்தையும் கவனித்தால், இது புரியும். என்னைப் பொறுத்தவரைக்கும் விவசாயிகள்தான் கடவுள். அவுங்க தொழிலே மத்தவங்களுக்கு சாப்பாடு போடுகிறதுதான். சாப்பாடு போடுற எல்லாருமே கடவுள்தான். தற்போது ‘சொல்லாதே செய்’ என்ற திட்டத்தை ஆரம்பிச்சிருக்கோம். அதன் மூலம் செயலில் இறங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். நீங்களும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்” என்று கேட்டுகொண்டார்.

- செய்தி மற்றும் படங்கள்: எம்.புண்ணியமூர்த்தி
 

அடுத்த கட்டுரைக்கு