வெளியிடப்பட்ட நேரம்: 13:51 (04/04/2017)

கடைசி தொடர்பு:13:01 (15/04/2017)

கால் இழந்த நாய்... விபத்தில் சிக்கிய மனிதர்... நம்பிக்கை விதைத்த செயல்!

நாய் கால்

சார்லி டிஸ்ராச்சர்ஸ்... சில காலம் முன்பு ஒரு கார் விபத்தில் காயம்பட்டவர். அப்போது தலையில் அடிபட்டு, பின் சரியானது. ஆனால் அதைவிட மோசமான விஷயம், விபத்துக்கு பின்னால் அவருக்கு வந்த post-concussion symptoms. கன்கஷன் என்றால், தலையில் விழுந்த வேகமான அடி என சொல்லலாம். தலையில் அடிப்பட்டு மயக்க நிலைக்கு சென்றவருக்கு, அதன் பின் சில மாதங்கள் வரை தலைவலி, மயக்கம் போன்ற பிரச்னைகள் தொடரலாம். அதைத்தான் post-concussion symptoms என்பார்கள். சார்லிக்கு அந்த பிரச்னைதான்.

சார்லிக்கும், அவரது கேர்ள் ஃப்ரெண்டுக்கும் நாய்கள் என்றால் அலாதி பிரியம். அதனால், புதிதாக ஒரு நாயை வாங்கி வளர்க்கலாம்; அது சார்லிக்கு ஒரு மாற்றாக அமையும் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அந்த நாய்க்குட்டி சாதாரண ஒன்றாக இல்லாமல், அதுவும் விபத்தில் சிக்கியதாக இருந்தால் நல்லது என்ற முடிவுக்கு வந்தார்கள். பல நாள் தேடலில் அவர்களுக்கு கிடைத்தவன் தான் பிராட்லி.
பிராட்லிக்கு தெருக்கள் தான் வீடு. ஒருநாள் அவன் தெருவுக்கு வந்த விருந்தாளி ஒருவன் தனது காரினால் பிராட்லியை இடித்துவிட்டு சென்றுவிட்டான். பிராட்லியின் காலில் நல்ல அடி. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கால் அழுக ஆரம்பித்தது. ஆனால், அதனுடன் தான் பிராட்லி வாழ்ந்து வந்தான். இந்தச் சூழலில் தான் சார்லியின் கண்களில் பிராட்லி பட்டான். உடனே மருத்துவமனைக்கு பிராட்லி அழைத்துச் செல்லப்பட்டாலும், அந்தக் காலை அகற்ற வேண்டியதாகிவிட்டது. 

அடிப்பட்ட காலுடனே வாழ்ந்த பிராட்லிக்கு, கால் இல்லாமல் வாழ்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. சார்லி போல இல்லாமல், நொடிப்பொழுதில் இந்த வாழ்க்கைக்கு பிராட்லி தயாராகிவிட்டான். அவன் பிரச்னை எல்லாம் புதிய வீடும், புதிய நண்பர்களும் தான். தெரு சைஸ் வீட்டில் இருந்தவனுக்கு சார்லி வீடு சிறியதாக தெரிந்திருக்கலாம். ஆனால், இங்கே அவன் பாதுகாப்பாக உணர்ந்தான். காரில் இடித்துவிட்டு ஒரு சாரி கூட சொல்லாமல் செல்லும் விருந்தாளிகள் இந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது அவனுக்கு ஆசுவாசமாக இருந்திருக்கும்.

பிராட்லியின் வலி சார்லிக்கு புரிந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், விரைவிலே சார்லியின் வலியை பிராட்லி புரிந்துகொண்டான். அவனது கதகதப்பான அன்பு, சார்லிக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. சார்லி மற்றும் அவரது தோழிக்கு இதுவரை பல நாய்கள் பரிச்சயம். ஆனால், அவை எதுவுமே பிராட்லிக்கு நிகர் இல்லை. கால் இழந்த பிராட்லி, நிம்மதி இழந்த சார்லி, அதனால் சந்தோஷம் இழந்த சார்லியின் தோழி... மூவருமே புதிதாய் பிறந்ததாய் உணர்ந்தார்கள்.

இந்த சந்தோஷத்தை உலகுக்கு தெரிவிக்க விரும்பினார் சார்லி. அதே சமயம் பிராட்லிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த விஷயம்... அவ்வளவு அழகு.

பிராட்லி நாய்

மேலும் படங்களுக்கு

சார்லியும், அவரது தோழியும் அடிக்கடி ஜோக்ஸ் சொல்லி மகிழும் ஹாஸ்ய தம்பதிகள். அப்படி அவர்கள் பேசும்போது, பிராட்லியும் பேசுவதாக கற்பனை செய்துகொள்வார்கள். கற்பனைதானே.. அதனால் பிராட்லிக்கு டப்பிங் கொடுத்தது மிக்கி மவுஸ். இந்த பிராட்லி - மிக்கி கூட்டணியை விஷுவலாக கொண்டு வர விரும்பினார் சார்லி. பிராட்லியை விதவிதமாக படம் பிடித்து, கை இல்லாத பகுதியில், மிக்கியின் கைகளை வரைந்து ஏதாவது ஒரு செயலை செய்துகொண்டு இருப்பது போல ஆக்கினார்.

பார்க்க அழகாகவும், பிராட்லி முழுமையாகவும் இருப்பதாக உணர்ந்தார் சார்லி. இந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய, அன்பாலான மனிதர்கள் அழுதே விட்டார்கள். தெறி வைரல் ஆனான் பிராட்லி.

பாஸ்கட் பால் விளையாடினான்... பிரீஃப்கேஸுடன் அலுவலகம் கிளம்பினான். போக்கர் விளையாடினான். பிராட்லி இன்னும் என்னனென்னவோ செய்தான். 

சார்லியின் செயல் முதலில் பிராட்லிக்கு வாழ்க்கை தந்தது. பின் சார்லிக்கே நிம்மதியை தந்தது. சார்லியின் தோழிக்கு சந்தோஷம் தந்தது. இப்போது ஒட்டு மொத்த உலகுக்கும் நம்பிக்கையை தந்திருக்கிறது.

லவ் யூ சார்லி...பிராட்லி!


-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்