வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (04/04/2017)

கடைசி தொடர்பு:21:16 (04/04/2017)

விஷாலை கூகுளில் தேடும் தினகரன்! - ஆர்.கே நகர் அரசியலிஸம்

நிற்கிற எல்லாத் தேர்தலிலும் ஜெயிச்சுக்கிட்டு இருக்கிற விஷாலை அனல் பறக்கிற ஆர்.கே நகர் தேர்தல்ல அவங்கவங்க கட்சிக்காக சப்போர்ட் பண்ண வெச்சா எப்படி இருக்கும்னு சும்மா ஒரு கற்பனை.

யதார்த்தமாக அந்த ஏரியாவுக்கு 'மதகஜராஜா பார்ட் 2'-வுக்கு ஷூட்டிங் போன விஷாலை முதல் ஆளா அள்ளிப் போட்டுக்கொண்டு போகிறார் ஓ.பி.எஸ். 'மாண்புமிகு இதயதெய்வம் தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மாவின் ஆசி பெற்ற இந்தக் கட்சிக்கு தம்பி விஷாலின் பங்கு எப்போதுமே இருக்கிறது. எதிரிகள் அவர்களது கட்சியை அ.தி.மு.க அம்மா என்றுதான் வைத்திருக்கிறார்கள் ஆனால் நாங்கள் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா என வைத்திருக்கிறோம். ஏன் இதைச் சொல்றோம்னா இயல்பிலேயே தம்பி விஷாலுக்கு இருக்கிற பட்டப்பெயர் புரட்சித்தளபதி. ஆக அந்தப் புரட்சி இருப்பது எங்களின் கட்சியில்தான். ஒரு முன்னாள் நிதியமைச்சராகச் சொல்கிறேன் கூட்டிக்கழிச்சுப் பாருங்க மக்களே... விஷால் நமது அணிக்குத்தான் சொந்தம்' என பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்கள் ஏரியாவுக்கு இழுத்துப்போகிறார் தீபா.

விஷால்

'ஓ.பி.எஸ் தங்களது கட்சியில்தான் புரட்சி இருக்கிறது என்கிறார். எங்கள் கட்சியில் மட்டும் என்ன புளியங்காயா காய்த்துத் தொங்குகிறது. நாங்களும் பரட்டைதான் சீப்பும் வெச்சுருக்கோம். பிழைப்புக்காக கட்சியிலே புரட்சியை வைத்திருப்பவர்கள் அவர்கள். கட்சி பிறந்ததிலிருந்தே புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி என இரண்டு பேரையும் கட்சியிலே வைத்திருப்பவர்கள் நாங்கள்; எனவே, விஷால் நமது அணிக்குத்தான் சொந்தம் என்கிற ஒரு நல்ல முடிவை மக்களாகிய நீங்கள்தான் கூறவேண்டும்' எனச் சொல்லிவிட்டு பால்கனிக்கு பறந்துசெல்கிறார்.

 'தம்பி அப்படியே இந்தப் பக்கம் ஒரு ரவுண்ட் வர்ரது' என அடுத்த ரவுண்டுக்குக் கூப்பிட்டு இத்துடன் முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சுட்டு இருந்த விஷாலின் எண்ணத்தை  சட்டசபையில் கிழிந்த சட்டைபோல கிழித்துத் தொங்கவிடுகிறார் ஸ்டாலின். ஆளாளுக்கு இவரை வெச்சுப் பேசிட்டாங்க... நாம் எப்படி ஆரம்பிக்கிறது என ரொம்ப நேரம் யோசித்துவிட்டு, விஷாலின் கலரை வைத்து பிரசாரத்தில் பெயின்ட் அடிக்க ஆரம்பிக்கிறார். 'அவரு கண்ணைப் பாருங்கய்யா... அவரு கலரைப் பாருங்கய்யா... ஜினல் ஜினல் ஒரிஜினல் திராவிட நிறம். அவர் கண்டிப்பாக தி.மு.க-வோட ஆதரவாளர்னு சொல்லித் தெரியணுமா கேட்டு நீங்க தெரிஞ்சிக்கணுமா அவர் சொல்லித்தான் நம்பணுமா' என அல்ஜீப்ரா கணக்கில் அடுக்கிக்கொண்டேபோக விஷாலை அடுத்த ஷிஃப்ட்டுக்கு அள்ளிப்போட்டுக்கொண்டு போகிறது தினகரன் டீம்.

'விஷால் எத்தனையோ படங்களை நடித்திருக்கிறார். ஆனால் அவரது ஃபேமிலி அரசியலில் ஜெயிக்க அவர் அணிலாக இருந்து உதவிய படமென்றால் அது 'ஆம்பள'தான். ஆம்பள படத்தில் அவரது டீம் எப்படி வெற்றிபெற்றார்கள் என நினைத்துக்கொண்டிருக்கும்போதுதான் கூகுளில் 'ஆம்பள மூவி ஸ்டில்ஸ்' என சர்ச் செய்தேன். வந்து விழுந்த போட்டோக்களைக் கண்டு அதிர்ச்சியில் விழுந்தேன். ஏனென்றால் பல போட்டோக்களில் விஷால் ஹன்சிகாவுடன் இருந்தார். அது மேட்டர் இல்லை; ஆனால் அதிலெல்லாம் விஷால் நமது வெற்றிச்சின்னமாம் சின்னம்மாவின் சின்னமாம் நாளைய தமிழகத்தின் வண்ணமாம் தொண்டர்களின் எண்ணமாம் தொப்பியுடன் இருந்தார். ஆகவே அப்போதே நமது கட்சிக்கு தனது ஆதரவைக் குறியீடாகச் சொல்லித்தான் இருக்கிறார். எனவே ஆம்பள படம் போல ஆர்கே நகரிலும் நாம் வெற்றி பெறுவோம்' என சூளுரைக்கிறார் தினகரன். எல்லாரும் பேசியதைப் பார்த்து தமிழிசையும் தன் பங்குக்கு விஷாலை வைத்து மசால் தடவுகிறார்.

தினகரன்

'ஏன் எதற்கென்று காரணம் எல்லாம் கேட்கக் கூடாது. விஷால் பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவிப்பார். எங்களிடம் எந்தக்காரணமுமே இல்லைதான் ஒத்துக்கொள்கிறோம். அதுக்காக காரணம் இருந்தால்தான் விஷால் எங்களது கட்சி எனச் சொல்லவேண்டுமா' எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டதோடு இல்லாமல் 'ஆந்தை என்றால் இரவிலே அலறும்.. சிலரும் என்பதற்கு ஆப்போசிட் பலரும். தாமரையே கண்டிப்பாக மலரும் மலரும் மலரும்' எனக் கூவுகிறார் தமிழிசை. இதுவரைக்கும் பேசுனவங்களோட பேச்சுலயாச்சும் கொஞ்சம் லாஜிக் இருந்துச்சு. இந்த டயலாக்லாம் என்ன வகைனே தெரியலையே ஆத்தீ... என பாதியிலேயே பிரசார மேடையின் பின்புறமாகத் தெறித்து ஓடுகிறார் விஷால்.

- ஜெ.வி.பிரவீன்குமார்


டிரெண்டிங் @ விகடன்