Published:Updated:

நீயா...நானா?’-ல பேசினதுக்காக மீம்ஸ் போட்டு வதைப்பீங்களா?!’ - கதறும் ஷாலின் மரிய லாரன்ஸ்

நீயா...நானா?’-ல பேசினதுக்காக மீம்ஸ் போட்டு வதைப்பீங்களா?!’ - கதறும் ஷாலின் மரிய லாரன்ஸ்
நீயா...நானா?’-ல பேசினதுக்காக மீம்ஸ் போட்டு வதைப்பீங்களா?!’ - கதறும் ஷாலின் மரிய லாரன்ஸ்

விஜய் டி.வி, ’நீயா... நானா?’ நிகழ்ச்சியில் பேசிய குற்றத்துக்காக மீம்ஸ் கிரியேட்டர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் சமூக ஆர்வலர் ஷாலின் மரிய லாரன்ஸ். ' அந்த நிகழ்ச்சியில் பேசியவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை மட்டுமே குறிவைத்துத் தாக்குகிறார்கள். அடித்தட்டு மக்களுக்காக நான் செய்கின்ற நல்ல காரியங்கள் அனைத்தும், இந்த மீம்ஸ் கிரியேட்டர்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது' என வேதனைப்படுகிறார் ஷாலின். 

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷாலின் மரிய லாரன்ஸ், பிட்னஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக இருக்கிறேன். இதுதவிர, திருநங்கைகளின் வளர்ச்சி, அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில் நூலகம் அமைப்பது, சமூகநீதி தொடர்பான கட்டுரைகளை எழுதுவது எனப் பரபரப்பாக இயங்கி வருகிறார். கடந்த சில வாரங்களாக மீம்ஸ் கிரியேட்டர்களின் தொல்லைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக, சென்னை காவல்துறை ஆணையாளர் கரன் சின்ஹாவிடம் நாளை புகார் மனு அளிக்க இருக்கிறார். 

' என்னதான் பிரச்னை?' என ஷாலின் மரிய லாரன்ஸிடம் கேட்டோம். " டிசம்பர் மாதத்தில் இருந்தே பிரச்னைதான். அந்த நேரத்தில், 'மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வெர்சஸ் பிளாக்கர்ஸ்' என்ற தலைப்பில் விஜய் டி.வி.யில் 'நீயா... நானா?' நிகழ்ச்சி நடந்தது. நான் பிளாக்கில் எழுதுவதால் என்னைப் பேசுவதற்காக அழைத்தனர். அந்த நிகழ்ச்சியில் நான் பேசும்போது, ' பெண்களை பாலியல்ரீதியாக வகைப்படுத்துவதாக மீம்ஸ் போடுகின்றனர். இது எங்களை மிகவும் கஷ்டப்படுத்துகிறது' எனப் பேசினேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என்னுடைய வேலைகளில் பிஸியாகிவிட்டேன். நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகு, ' உன்னைக் கொலை பண்ணிடுவோம். மீம்ஸ் கிரியேட்டர்ஸ் பத்திப் பேசறதுக்கு நீ யாரு?' என ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்து கொண்டிருந்தன. ஒன்று இரண்டு என்றால்கூட பரவாயில்லை. ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் இன்பாக்ஸில் குவிந்துவிட்டது. என்னுடைய முகத்தை வைத்து எவ்வளவு அவமானமாகப் பதிவு போட முடியுமோ, அவ்வளவு படங்களை மீம்ஸ்களாக வெளியிட்டிருக்கிறார்கள்.

2014-ம் ஆண்டு திருநங்கைகளின் நலனுக்காக பணிபுரிந்ததற்காக விருது கிடைத்தது. முன்பெல்லாம் என் பெயரை கூகுளில் தேடினால், அந்த விருது படம்தான் வரும். இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. என்னை அவமானப்படுத்தி வெளியிட்ட மீம்ஸ்கள்தான் நிறைந்து இருக்கிறது. 'சென்னை மீம்ஸ் தான்' என்ற பெயரில் இயங்குபவர்கள்தான் இத்தனையும் செய்கிறார்கள். என்னுடைய ஃபேஸ்புக்கில் நந்தினி மரணத்தில் இருந்து பெண்களை பாதிக்கும் அனைத்து விவகாரங்களைப் பற்றியும் எழுதி வருகிறேன். இது இந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் இந்தளவுக்குத் தாக்குகிறார்கள். 'ஷாலினி மரிய லாரன்ஸ்' என்று என் பெயரைப் போட்டு, 'இனி இருக்குடி உனக்கு' என விமர்சித்தார்கள். என்னுடைய பதிவுக்குக்கீழ் கெட்ட கெட்ட வார்த்தைகளை  எழுதியுள்ளனர். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உள்ள சாதி அரசியல் பற்றி எழுதியபோது, நாம் தமிழர் கட்சி ஆட்கள் எனக்கு எதிராக எழுதினார்கள். 

சென்னை மீம்ஸ் அட்மின் கௌதம் என்னுடைய இன்பாக்ஸில் வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். 'பெண்களை இப்படியெல்லாம் அவமதிப்பது எந்த வகையில் சரி? எனக் கேள்வி எழுப்பினேன். உடனே, இந்தப் பையன் என்னுடைய போட்டோவைப் போட்டு, ' இவள என்ன பண்ண முடியுமோ, பண்ணுங்க' என எழுதியிருந்தான். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மக்களுக்கான பணியில் நான் வேற லெவலில் சென்றுகொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் வரதட்சணை தொடர்பாக பேசுவதற்காக 'நீயா...நானா?' கோபிநாத் அழைத்தார். சொத்து விவகாரத்தில் சம உரிமை குறித்தெல்லாம் எனக்கு ஒரு பார்வை இருக்கிறது. 'நீங்கள் வரதட்சணை வாங்கும்போது கஷ்டமாகத் தெரியவில்லை. இந்தப் பெண்களை எப்படி இவ்வாறு பேசலாம்?' என சத்தம் போட்டுக் கத்திப் பேசினேன். இந்த நிகழ்ச்சி வெளியில் வந்ததும், எனக்கு எதிராக மீம்ஸ் வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் பேசிய மற்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை மட்டுமே டார்கெட் பண்ணத் தொடங்கிவிட்டார்கள். ஒரு கட்டத்தில், ' இவள ஓட ஓட வெட்டிக் கொல்லனும்' என விதம்விதமான படங்களை போட்டு வெளியிட ஆரம்பித்தார்கள். ஒரு பெண்ணை எந்தளவுக்கு அசிங்கமாக விமர்சிக்க முடியுமோ, அந்த எல்லைகளை எல்லாம் தாண்டி விமர்சிக்கிறார்கள். இதைப் பற்றி கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப் போகிறேன் என்றதும், 'புகார் கொடுத்து கிழிச்சிருவியா நீ' எனப் பதில் கொடுக்கிறார்கள். என் பெயரை ஃபேஸ்புக்கில் எழுதினாலே, அசிங்கமான படங்கள்தான் வருகிறது. பொதுவெளியில்  கருத்தியல்ரீதியாக இயங்கி வருகிறேன். நான் தலித் சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர் என்பதால்தான் இவ்வளவு தூரம் தாக்குதலை நடத்துகிறார்கள். ரோட்டில் போகின்றவர்களைக் கிண்டல் செய்தாலே ஈவ் டீசிங் வழக்கில் கைது செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணிக்குப் பிரச்னை வந்தபோது, அரசியல்ரீதியாகவும் அவருக்கு ஆதரவுக்கரம் நீண்டது. என்னுடைய விவகாரத்தில் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை" என்றார் குமுறலுடன். 

ஷாலின் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். " இணையதளத்தில் எந்த எல்லைகளும் இல்லாமல் தாக்குதல் நடத்துகின்றனர். 'ஒரு பெண் எப்படிப் பேசலாம்' என்பதுதான் இவர்களின் நோக்கமாக இருக்கிறது. 'ஒரு பெண்ணைப் போல் நடந்துகொண்டால் எங்களுக்குக் கவலையில்லை' என ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார்கள். சாதிக் கொடுமை, வரதட்சணை ஆகியவற்றை எதிர்த்துப் பேசினால், இதுபோன்ற ஆட்களுக்குப் பிடிப்பதில்லை. எல்லை மீறிய ஆபாசமாக எழுதுகின்றனர். ஒருவரின் தோற்றத்தை வைத்து, சாதியை வைத்து வன்மத்தை அரங்கேற்றுவது என்பது கண்டிக்கத்தக்கது. ஷாலினுக்கு நடக்கும் இதே கொடுமைதான், பத்திரிகையாளர் கவின்மலர், காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி உள்ளிட்டவர்கள் மீதும் நடந்தது. மேட்டுக்குடி பெண்கள் புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கக் கூடிய அரசாங்கம், அட்டவணை சமூகத்துப் பெண்கள் புகார் கொடுத்தால் மட்டும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இணைய சுதந்திரம் என்ற பெயரில் தனிமனித தாக்குதலைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காகத்தான் சைபர் கிரைம் இயங்குகிறது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை. ஷாலின் மீதான இணையதள தாக்குதலுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்கான சட்டப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறோம்" என்றார் கொந்தளிப்புடன். 

இதுகுறித்து சென்னை மீம்ஸ் கிரியேட்டர்ஸின் விளக்கம் அறிய, அவர்களைத் தொடர்பு கொண்டோம். "ஷாலின் மரிய லாரன்ஸ் என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் குழுவில் கௌதம் என்ற பெயரில் யாரும் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டனர். 

-ஆ.விஜயானந்த்