வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (06/04/2017)

கடைசி தொடர்பு:12:55 (15/04/2017)

தனிநபர் அந்தரங்க வீடியோக்கள், படங்களை கட்டுப்படுத்த ஃபேஸ்புக்கின் அதிரடி! #RevengePorn

ர் ஆணும், பெண்ணும் உடலளவில் நெருக்கமாக இருக்கிறார்கள். அந்தப் பெண் அதை சில காரணங்களுக்காகப் படம்பிடித்து வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த ஆணைப் பழிவாங்கும் எண்ணத்தோடு, அவருக்கே தெரியாமல் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றுகிறார். அது வெகு விரைவில் லட்சக்கணக்கில் பகிரப்படுகிறது. தன் உடல் இப்படி பலரின் பார்வைக்கு வைக்கப்பட்டதை எண்ணி, மனமுடைந்து அந்த ஆண் தற்கொலை செய்து கொள்கிறார். இப்படி ஒரு செய்தியை நான் எழுதியதுமில்லை, படித்ததுமில்லை. அதே சமயம் இது போன்ற நிகழ்வில் பெண்கள் பாதிக்கப்படுவது, உயிர் இழப்பது என்பது உலகம் முழுக்க தினமும் நடந்து கொண்டேதானிருக்கின்றன. இதைத் தடுக்கும் முயற்சியாய், முதற்படியை எடுத்துவைத்திருக்கிறது ஃபேஸ்புக். 

ஃபேஸ்புக் பாலியல் காட்சிகள் பகிர்வதைத் தடுத்துள்ளது

ஆங்கிலத்தில் இதை "ரெவெஞ்ச் பார்ன்" (Revenge Porn)  என்று சொல்கிறார்கள். அதாவது, ஒருவருக்குத் தெரியாமல் அவர் இடம்பெற்றிருக்கும் "உடல் நெருக்கக் காட்சிகளை" பொதுப் பார்வைக்கு, சமூக வலைதளங்களின் மூலம் வைக்கப்படுவது. இது இன்றைய இணைய உலகின், இளைய சமுதாயத்தின் ஆகப் பெரும் பிரச்னையாக இருக்கிறது. பெண்களுக்கு இது பெரும்பாலும் மரண தண்டனையாக இருக்கிறது. இதுபோன்ற பிறரின் அந்தரங்கக் காட்சிகளை மீள் பதிவு (Re Post)  செய்வதையும், பகிர்வதையும் ( Share ) தடுக்க உலகம் முழுக்க இயங்கும் 150 பெண்கள் பாதுகாப்பு இயக்கங்களோடு இணைந்து சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளது ஃபேஸ்புக்.

ஒருவருக்குத் தெரியாமல் அவர் குறித்த ஆபாசக் காட்சி பதிவேற்றப்பட்டால், அதை அதில் இடம்பெற்றிருக்கும் நபரோ, வேறொருவரோ ஃபேஸ்புக்கின் "ரிப்போர்ட் டூல்" ( Report Tool ) மூலம் புகார் அளிக்கலாம். இந்தப் புகார்களின் அடிப்படையில் அந்தப் படத்தையோ, காட்சியையோ பரிசீலிக்க " தனி நிபுணர் குழு" ஒன்றை அமைத்துள்ளது ஃபேஸ்புக். அவர்கள் அதைப் பரிசீலித்து, அது தவறாக இருப்பின், " புகைப்பட கண்டறிதல் மென்பொருளை" (Photo Recognition Software) கொண்டு  அது மீள் பதிவு செய்யப்படுவது மற்றும் பகிரப்படுவதைத் தடுக்கிறார்கள். மேலும், எந்த ஃபேஸ்புக் கணக்கிலிருந்து அது பதிவேற்றப்படுகிறதோ, அந்தக் கணக்கு உடனடியாக முடக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஃபேஸ்புக்கில் பெண்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.  அதே சமயம், இது முழுமையான பாதுகாப்பும் கிடையாது. பதிவேற்றப்படும் படம் ஃபேஸ்புக் அல்லாத வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டால் அதைத் தடுக்க முடியாது. இருந்தாலும், பெண்களுக்கு எதிரான "இணையப் பாலியல் வன்முறைகளை" தடுக்கும் முதற்படியாக இது இருக்கும். 

பார்ன் காட்சிகளை தடுத்தது ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் மட்டுமல்லாது மெஸெஞ்சர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகதளங்களிலும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பில் " என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன்" (End to End Encryption)  தொழில்நுட்பம் இருப்பதால் (அதாவது ஒருவர், மற்றொருவருக்கு அனுப்பும் செய்தி முற்றிலும் மறைக்கப்பட்டதாக இருக்கும். அதாவது, ராமு, சோமுவுக்கு செய்தி அனுப்புகிறார் என்பது மட்டுமே இடையிலிருக்கும் சர்வருக்கும், ஃபேஸ்புக்கிற்கும் தெரியும். அது என்ன செய்தி என்பதை யாராலும் படிக்க முடியாது), அதில் இந்த செயல்பாட்டை தற்போதைக்கு கொண்டு வர முடியவில்லை என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. 

ஃபேஸ்புக் நடவடிக்கை பெண்களுக்கு பாதுகாப்பு

ஏற்கெனவே, இணையத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தும் பாலியல் காட்சிகளைத் தடுக்க இதுபோன்ற முறையே பயன்படுத்தப்படுகிறது. இருந்தும், இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்துமே மீள் பதிவுகளையும், பகிர்தலையும் மட்டுமே தடுக்கிறதே அன்றி பதிவேற்றம் செய்வதைத் தடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை. அது செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே இணையத்தில் பெண்களின் பாதுகாப்பு முழுமையடையும். அது இல்லாமலும் கூட, இப்போதே இணையத்தில் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்கிட முடியும். அதற்குத் தேவை புதியதோர் தொழில்நுட்பம் அல்ல... பெண்களை சக மனிதர்களாகப் பார்க்கும், அவர்களை மதிக்கும், நியாயமான ஒரு "ஆண்களின் மனநுட்பம்" மட்டுமே... 

- இரா. கலைச் செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்