‘சாம்பாரும், சட்னியும் உங்களை மன்னிக்காது ராம்சே’ - வடை ரசிகர்களின் ஓர் ஆதங்கக் கடிதம்! | A satirical article on ramsay's tweet against vada

வெளியிடப்பட்ட நேரம்: 19:22 (07/04/2017)

கடைசி தொடர்பு:19:54 (07/04/2017)

‘சாம்பாரும், சட்னியும் உங்களை மன்னிக்காது ராம்சே’ - வடை ரசிகர்களின் ஓர் ஆதங்கக் கடிதம்!

ட்விட்டர்ல அடிக்கடி எதாச்சும் சர்ச்சைகள் நடக்குறது சகஜம். அப்படித்தான் பிரிட்டனின் பிரபல சமையல் நிபுணரான கார்டன் ராம்சே ஒரு ட்வீட்டில் வடையை வம்பிக்கிழுக்க ஆளாளுக்கு அதுபத்தி கருத்து சொல்லிட்டு இருக்காங்க. நாம் மட்டும் சும்மா இருக்கலாமா அதான் வடை பிரியர்கள் சார்பாக ஒரு மினி கடிதம்...

மிஸ்டர் ராம்சே, மெதுவடை வித் சட்னியுடன் ஆசை ஆசையாகப் போட்ட ட்வீட்டை ஜெயில்ல இருந்து எப்படி உங்களால ட்வீட் போட முடியுதுனு எங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கும் வடையை பங்கமாகக் கலாய்த்து இருக்கிறீர்கள். வடையின் வாழ்வியல் பற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா மிஸ்டர் ராம்சே?

சட்னி

இலக்கிய வடை :

ஹாலிவுட் டைரக்டர்களுக்கே திரைக்கதையில் இதைச் சேர்த்திருக்கலாம் அதைச் சேர்த்திருக்கலாம்னு ஐடியா கொடுக்கிற அளவுக்கு தமிழ்நாட்டு மக்கள் வளர்ந்துட்டாங்க. ஆனாலும் அவங்க எல்லோருக்கும் தாய்க்கதை என்பதே பாட்டி வடை சுட்ட கதைதான். பாட்டி வடை சுட்டுச்சா பாட்டி சுட்ட வடையை காக்கா சுட்டுச்சா இல்லை காக்கா சுட்ட வடையை நரி சுட்டுச்சாங்கிறதெல்லாம் இன்னும் ஆராய்ச்சியிலே இருந்தாலும் பல பேர் கேட்டு வளர்ந்த கதைங்கிறதே இந்தப் பாட்டி வடை சுட்ட கதைதான். பல பேர் இந்தக் கதையை மையமா வெச்சு கதைகதையா எழுதியதெல்லாம் தெரியுமா மிஸ்டர் ராம்சே? பாட்டி சுடாத வடை என்றே ஒரு புத்தகம் இருக்கிறதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியப்போகிறது மிஸ்டர் ராம்சே?

அறிவியல் வடை :

இலக்கியத்துல மட்டும்தான் வடை இருக்கா? அதுதான் இல்லை. நிலாவுக்கு மனுஷங்க போறதுக்கு முன்னாடியே நிலாவுல பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருக்குனு சொன்ன சமூகம் இது. நிலாவுக்கு மனுசங்க போக முடியும்கிற விஷயமே நாசூக்கா நாங்க சொன்னதுக்குப் பிறகுதான் மத்தவங்களுக்கே தெரியும்கிறதெல்லாம் உங்களுக்கு ரிப்ளை கமென்ட் போட்டுச் சொன்னாலும் புரியாது.

வடை

சினிமா வடை : 

உளுந்தவடையில் ஓட்டை போடணும்; பருப்பு வடையில ஏன் ஓட்டை போடக் கூடாதுனு முற்போக்குக் கேள்விகளைலாம் முன் வெச்சதுல இருந்து விழுந்த வடையா, உளுந்த வடையானு மொக்கை காமெடிகள் வந்தது வரைக்கும் பல சம்பவங்களுக்கு முன் உதாரணமா இருந்ததே இந்த வடைதான்னு உங்களுக்குத் தெரியுமா? 'வடை போச்சே'னு  எப்பவோ விஜய் நடிச்ச 'போக்கிரி'யில் வடிவேலு சொன்னதை விஜய் 61 காலத்திலேயும் மைண்ட்ல வெச்சு அந்தச் சாதாரண வடையை பல பேர் சொல்ற  நவீன சொலவடையாகவே ஆக்கியிருக்கோமே... இதெல்லாம் தெரிஞ்சிருந்தா அப்படி ஒரு ட்வீட்டைப் போட்டிருப்பீங்களா நீங்க?

சொலவடை :

எத்தனையோ சொலவடை வந்தாலும் வாயிலேயே வடை சுடுகிற சொலவடையை இன்னமும் டாப்புல வெச்சிருக்கோம். அவ்வளவு ஏன் சொலவடைங்கிற பேர்லேயே பாதி வடையைத்தான் வெச்சிருக்கோம். இப்படி மாவும் எண்ணையுமா பின்னிப் பிணைஞ்சிருக்கிற இந்த வடையை ஜெயில் உணவுனு சொல்லி இப்படி 'செஞ்சு'ட்டீங்களே ராம்சே. காக்காவும் நரியும் பாட்டியும் கண்டுக்கலைனாலும் அந்த சாம்பாரும் சட்னியும் உங்களை மன்னிக்காது மிஸ்டர் ராம்சே!

- ஜெ.வி.பிரவீன்குமார்


டிரெண்டிங் @ விகடன்