வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (10/04/2017)

கடைசி தொடர்பு:18:45 (22/04/2017)

ஹெல்த் பாலிசிக்கு திட்டமிட்டு இருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை, இவைதான்! #MustRead

புதிய நிதி ஆண்டு 2017-2018 பிறந்து விட்டது. இந்த நிதி ஆண்டில் என்னென்ன வகையில் சிக்கனமாக செலவு செய்வது, வருமான வரிக்கு எங்கு எல்லாம் முதலீடு செய்வது என யோசிக்கும் நேரம். முதலீட்டை யோசிக்கும் போது கூடவே உடல்நலத்தையும் காக்க வேண்டும். உங்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்குச் செல்லும் போது நம்மிடம் உள்ள பெரும் தொகை செலவு வைத்து விடுகிறது. குறைவான வருமானம் கொண்டவராக இருந்தாலும் எதிர்பாராமல் வரும் செலவினை தவிர்க்கவும், நம்மைப் பாதுகாப்பாக இருக்க உதவுபவை ஹெல்த் பாலிசிகள். 

ஹெல்த் பாலிசி

மருத்துவமனையில் ஏதேனும் காயம் காரணமாகச் சிகிச்சை மேற்கொள்ளலாம். உடல்நலக் குறைவு காரணமாகவோ அல்லது நோய் தொற்றுக்காரணமாகவோ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறலாம்.  ஏதேனும் அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். மிகப்பெரிய அளவில் நோய்த்தாக்கத்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கலாம். இவை அனைத்திற்கும் உங்களுக்குப் பாதுகாப்பினை ஏற்படுத்தும் ஹெல்த் பாலிசி. இந்த பாலிசி எடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பார்க்க வேண்டும். 

பாலிசி அவசியம்: இப்போது சின்ன பெட்டிக்கடையிலும் ஹெல்த் பாலிசி கிடைக்கிறது. இந்த பாலிசி மூலம் எங்கிருந்தாலும், சில குறிப்பிட்ட நோய்களுக்கும், உடல்நிலை பாதிப்புகளுக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். தற்போது பாலிசி வயது வரம்பு இல்லாமல் அனைத்து வயதினரும் எடுக்கும் வகையில் இருக்கிறது. புதியதாக வேலையில் சேர்ந்த பணியாளராக இருந்தாலும் சரி, ஓய்வு பெறும் போது நிலையில் இருந்தாலும் சரி, திருமணம் ஆன புதுமண தம்பதியாக இருந்தாலும் சரி ஹெல்த் பாலிசி என்பது அவசியம். 

திட்டத்தைக் கவனிக்கவும்: பொதுவாக ஹெல்த் பாலிசிதாரர்கள் மருத்துவமனையில் குறைந்தது 24 மணி நேரம் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே க்ளைம் செய்ய முடியும் என்று வைத்திருக்கிறார்கள். இதனை ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ளுங்கள். தற்போது சில பாலிசிகள் மருத்துவமனையில் தங்காமல் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் க்ளைம் பெறலாம் என்று அறிவித்து இருக்கின்றன. பாலிசி எடுக்கும் போது எவ்வளவு பிரிமியம் தொகை, அதில் என்னென்ன சிறப்பு சலுகைகள் இருக்கின்றன என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். இணையத்தில் ஹெல்த் பாலிசி திட்டத்தை தேர்வு செய்யும் போது, ஒவ்வொரு பாலிசி திட்டத்தையும் மற்ற திட்டங்களுடன் ஒப்பிட்டு, வசதி வாய்ப்புகள், பாலிசி பிரிமீயம் தொகை, கவரேஜ் போன்றவற்றை எல்லாம் பார்த்து தேர்வு செய்யலாம். 

வசதி வாய்ப்புகள் தீர விசாரியுங்கள்: ஹெல்த் பாலிசி தேர்வு செய்யும் போது என்னென்ன உடல் உபாதைகளுக்கும், என்னென்ன நோய்களுக்கும், என்னென்ன அறுவை சிகிச்சைக்கும் பயன்படுத்த முடியும் என்பதையும், எவ்வளவு சதவீதம் க்ளைம் தருவார்கள் என்பதையும் முன்னரே விசாரித்துக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் குறிப்பிட்ட அறுவை சிகிச்சைக்கு 100% க்ளைம் கிடைக்கும். சில அறுவை சிகிச்சைகளுக்கு 70% மட்டுமே க்ளைம் தருவார்கள். பொதுவாக, ஹெல்த் பாலிசியில் எங்கெல்லாம் சிக்கல்கள் வரும் என்பதையும் முன்னரே அறிந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே, குடும்பத்தில் உள்ள முன்னோர்களுக்கு சில நோய்கள் இருந்து இருக்கும். அதன் தாக்கம் உங்களுக்கும் வர வாய்ப்பு இருக்கிறது. அது போன்ற சமயங்களில், இதற்குச் சேர்த்து பாலிசி பயன்படும் வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

கூடுதல் வசதியினை பயன்படுத்துங்கள் : சில திட்டங்களில் அடிப்படை திட்டங்களுடன் சில நூறு ரூபாய்க்கு நிறையச் சிகிச்சைகளுக்கு மருத்துவ வசதியினை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பாலிசியினை வடிவமைத்து இருப்பார்கள். இதுபோன்ற வசதிகள் கொண்ட பாலிசியினை வாங்கும் போது கூடுதல் வசதிகளையும் பயன்படுத்துங்கள். இதைப்போலவே, தனிநபருக்கு மட்டும் பாலிசியினை எடுக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஹெல்த் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. 

க்ளைம் எப்படிப் பெறுவது என அறிந்திருங்கள்: ஹெல்த் பாலிசிகளில் சிலவற்றில் பணமில்லாமல் சிகிச்சையும் (cashless), சிகிச்சைக்கு பணம் செலுத்தி பின்பு பணம் திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியும் (reimbursement) இருக்கிறது. பணமில்லாமல் சிகிச்சை (cashless treatment) என்பது குறிப்பிட்ட, பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது நீங்கள் சிகிச்சைக்கான கட்டணத்தைச் செலுத்தி விட்டு பின்னர் சிகிச்சைக்கான கட்டணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் க்ளைம் செய்துகொள்ளலாம். ஒரு சில நேரங்களில் நீங்கள் க்ளைம் செய்யும் போது தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் புறக்கணிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து க்ளைம் செய்துகொள்ளலாம். 

பெரிய அறுவை சிகிச்சைக்கும், உடனடி அவசர சிகிச்சை தவிர, இதர சமயங்களில் குறுகிய காலத்தில் பெரும் தொகையினைக் க்ளைம் பெற விண்ணப்பித்தால் விசாரிப்பார்கள். ஆகையால், தினசரி மருத்துவ செலவுகள் உங்களுடைய கவரேஜ்ஜில் 1 முதல் 2 சதவீதம் என்ற வகையில் க்ளைம் பெற விண்ணப்பிக்கும் போது சிக்கல் இருக்காது. 

கேஸ்லெஸ் க்ளைம் என்பது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாமல் உடனுக்குடன் விரைவாக முடிக்கும் வகையிலும் சில மணி நேரத்திலேயே க்ளைம் செய்துகொள்ள முடியும். மருத்துவமனையில் சேர்ந்ததும், தொடர்ந்து உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு நீங்கள் மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்ந்த விவரத்தையும், நீங்கள் எப்போது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்புகிறீர்கள் என்ற தகவலையும் உடனுக்குடன் தெரிவியுங்கள். இது போல் செய்யும் போது க்ளைம் கிடைப்பது எளிதாகும். 

ஒதுக்கீட்டை அறிந்திருங்கள்: இப்போது ஒவ்வொரு பிரிவுக்கும் இவ்வளவு ஒதுக்கீடு என்று பிரித்தும் பாலிசியினை தருகிறார்கள். 100% மருத்துவ செலவினம் என்று சொன்னால் இதர சிகிச்சைகள் பெறும் போது பணம் கிடைக்காது. பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யும் போது அதிகளவில் பயனடையலாம். உதாரணத்துக்கு 5 லட்ச ரூபாய்க்கான பாலிசியில் மருத்துவமனை செலவினம் 20% என்றும், மீதமுள்ளவை அறுவை சிகிச்சைக்கும், அவசர நோய் தாக்கத்திற்கான சிகிச்சை போன்றவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். 

நீண்ட கால அடிப்படையில் பாலிசியை தேர்ந்தெடுங்கள்: பாலிசி வாங்கும் போதே ஒவ்வொரு ஆண்டுக்கும் புதிய பாலிசி வாங்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு என்ற வகையில் வாங்குங்கள். இவ்வாறு பாலிசியினை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம். இப்போது பல பாலிசிகளில் ஒவ்வொரு ஆண்டுக்கும் புதுப்பிக்கும் போது பாலிசியினை பயன்படுத்தாமல் இருந்தால் புதுப்பிக்கும் போது 50% மட்டும் செலுத்தினால் போதும் என்ற வகையில் போனஸ் வழங்குகிறார்கள். மேலும், பாலிசி எடுக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் பாலிசி தொகை மாறும் வகையில் இருக்கிறதா அல்லது தொகை மாறாமல் ஒரே தொகையாக இருக்குமா என்பனவற்றைப்  பார்த்து வாங்குங்கள். 

ஹெல்த் பாலிசி

பாலிசியினை புதுப்பித்தல் குறித்து அறிந்திருங்கள்: சில குறிப்பிட்ட பாலிசியில் நீங்கள் குறிப்பிட்ட தொகையினை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றால் பாலிசியினை ரீசார்ஜ் செய்துகொள்ளும் வசதியினை வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள பாலிசிக்கான காலமோ அல்லது க்ளைம் செய்வதோ முடிந்திருந்தால் அதனை ரீபில் செய்துகொள்ளலாம். இதற்கான வசதியை சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த வசதியினையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

2013-ம் ஆண்டில் இருந்து இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற சிகிச்சை முறைகளுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறது. நீங்கள் எடுக்கும் பாலிசியில் இந்த வசதியினை சேர்த்து இருக்கிறார்களா என்பதைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். கூடுதலாக, ஒருவர் நோய்த் தாக்குதலுக்கு உள்ளானாலும் அல்லது காயம் காரணமாகச் சிகிச்சை பெற்றிருந்தாலும், மருத்துவமனையில் இடம் இல்லாத சூழ்நிலையில், வீட்டில் இருந்தே சிகிச்சை மேற்கொள்ளலாம். இதற்கும் க்ளைம் பெற்றுக்கொள்வதற்கான வசதியினையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். 

சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவ சிகிச்சை பெறும் போது, மருத்துவம் அல்லாத செலவுகளுக்காக தினசரி உதவித்தொகையாகக் குறிப்பிட்ட தொகையை வழங்குகிறார்கள். இந்தத் தொகையை போக்குவரத்து, இதர பொருட்கள் வாங்குவது போன்ற செலவினங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

திருமணமான இளம்தம்பதிகளுக்கு மகப்பேறு செலவுகளுக்கு என்று தனியே ஹெல்த் பாலிசி வைத்திருக்கிறார்கள். இதில் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மகப்பேற்றுக்கு முந்திய சோதனைகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும், மகப்பேற்றுக்கான செலவுகள், மகப்பேறு பிந்திய செலவினங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் பாலிசியினை வடிவமைத்து இருக்கிறார்கள். இதில் குழந்தை பிறந்து 90 நாட்கள் வரை அனைத்து அனைத்துச் செலவினங்களையும் உள்ளடக்கிய வகையிலும் இருக்கிறார்கள். ஆனால், இந்த வகையான பாலிசிகளுக்கு ஒன்பது மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்பது தான். 

பாலிசி எடுப்பதற்கு முன்பு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏற்கெனவே ஏதேனும் நோய்த் தாக்குதல் இருக்கிறதா என்பதும், வயது சார்ந்த பிரச்னைகள் இருக்கிறதா என்பதையும் அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் பாலிசி தருகிறார்கள். சில பாலிசி நிறுவனங்கள் எவ்வளவு வயதானாலும், எல்லா வகையான பாலிசிக்கும் முன்னரே சோதனை செய்யத் தேவையில்லை என்கிறார்கள். ஆகையால், நீங்கள் எந்த இன்ஷூரன்ஸ் பாலிசி நிறுவனத்தை அணுகுகிறீர்கள் என்பதைப் பொறுத்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள். 

ஹெல்த் பாலிசி மூலம் மருத்துவ செலவினைக் குறைக்கவும், பாதுகாப்பான வாழ்க்கைக்கும் வழிகள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொண்டு  சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 
-ஞா. சக்திவேல் முருகன்


டிரெண்டிங் @ விகடன்