நட்பில் நீங்கள் எப்படி? #Friendship | Are you a good friend?

வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (09/04/2017)

கடைசி தொடர்பு:18:46 (22/04/2017)

நட்பில் நீங்கள் எப்படி? #Friendship

நண்பன்

நண்பன் என்றாலே நல்லவன் தான். இதில் என்ன நல்லவன் கெட்டவன் என்கிறீர்களா? அட கோச்சுகாதீங்க பாஸ். எல்லாம் ஒரு காரணமாகத்தான். ஏனெனில் இவன் கூட சேராதே; அவன் கூட போகாதே என  நம் பெற்றோர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா! எனவே அதற்கெல்லாம் ஒரே வழி நல்ல நண்பனாக இருந்து நல்ல நண்பர்களை வளர்த்துக் கொள்வது. நண்பன் இல்லாத மனிதன் ஆடை இல்லாதவன் நண்பர்களே! அப்ப எப்படித்தான் இருக்கணும் என்கிறீர்களா. தொடர்ந்து படியுங்கள்.

 

• நண்பன் என்ன செய்தாலும் கூடவே இருக்க வேண்டும். சந்தானம் மாதிரி எந்நேரமும் கேலி செய்து கொண்டே இருந்தாலும் விவேக் மாதிரி அப்பப்ப கருத்தாகப் பேசவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கென நீங்கள் ஒன்றும் சாக்ரடீஸ் புத்தகத்தை எல்லாம் வாங்கிப் படிக்க வேண்டாம். ஜஸ்ட், பேச்சோடு பேச்சாக கமென்ட் அடிக்கத் தெரிந்திருந்தால்போதும்!

• உங்களுடைய நண்பர்கள் எதையாவது சீரியஸாக பேசிக் கொண்டிருந்தால் சிரிப்பு வரும் தான்.இருந்தாலும் கொஞ்சம் கன்ட்ரோல் செய்து கொண்டு சீரியஸாக கவனியுங்கள்.இல்லையேல் பார்வதிக்கு சிவன் கொடுத்தது போன்ற தண்டனை தான்.

நண்பனை யாரேனும் தவறாக பேசிவிட்டால் நமக்கெல்லாம் கோபம் கரைபுரண்டு ஓடும். நியாயமானது தான். அதற்காக அவர்களைப் போய் சீண்டக் கூடாது. அந்தக் கோபத்தைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு தவறாகப் பேசிய வாயைச் சரியாகப் பேச வைக்க ப்ளான் பண்ணுங்க. சில்வற்றைச் சொல்லி சரிசெய்வதைவிட, நடத்திக் காட்டி சரி செய்யலாம்!  

• கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இதெல்லாம் நட்பிற்கும் ரொம்ப முக்கியம் தான். ஆகையால் அதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏமாற்றம் என்ற பேச்சிற்கே இடமிருக்கக் கூடாது.சோ, பீ கேர்ஃபுல்!

• நம்முடைய நட்பினால் நம் நண்பர்களது வயிறும் அவர்களது நட்பினால் நமது வயிறும் மட்டும் பெரியதானால் போதாது. வாழ்க்கைத் தரம் என்பது இருக்கிறதல்லவா? அதுவும் உயர வேண்டும். வறுமையிலிருந்து பணக்காரன் ஆவது பெரிய மாற்றமல்ல. மதிப்பும் மரியாதையும் உயர்வதுதான் கவனிக்கப்படும்.

• எதிலும் ஒளிவு மறைவு என்பது வேண்டாமே! என்ன பிடிக்கவில்லையோ அதை அவர்களிடம் நேரடியாகச் சொல்லி விடுங்கள். அதெதற்கு மன சங்கடம்? 

• துவண்டு போன நேரத்தில் சிரிப்பார்கள் நண்பர்கள். அதைக் கேலியாக அல்ல உங்களைச் சிரிக்க வைப்பதற்காக செய்வார்கள் என்று நீங்கள் புரிந்து கொண்டால் எதிரி என்ற பேச்சுக்கே இடமற்று போகும்.

• நீங்கள் எதிர்பார்த்த ஒன்று உங்களுக்குக் கிடைக்காமல் நண்பனுக்குக் கிடைத்து விட்டதா? .கவலையை விடுங்கள். நல்லது யாருக்கு நடந்தால் என்ன?. அதையும் சந்தோசமாகக் கொண்டாடப் பழகுங்கள்! 

• உங்களுடைய நண்பர் பொறாமைக் குணம் கொண்டவரா?  இருக்கட்டுமே!   . உங்களுடைய நட்பின் வழி  அந்த எண்ணத்தைத் தூக்கி போடுங்க.மேட்டர் ஓவர்.!!!

• உங்க நண்பன் ஒரு விஷயத்துல வெற்றியடைஞ்சா டிரீட் கேளுங்க. அதுவே தோல்வியடைந்திருந்தால் தயங்காம தோள் கொடுங்க! 

இதெல்லாம் செய்தால் தான் நல்ல நண்பன் என்று அர்த்தமா என்று கேட்கிறீர்களா. அப்படி இல்லைங்க. இதையும் தாண்டிப் புனிதமானதுதான் நட்பு. இருப்பினும், இவற்றையும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளலாம்தானே?  

சரி.., நீங்க எப்படி???

   - பா.பிரியதர்ஷினி

(மாணவப் பத்திரிகையாளர்)


டிரெண்டிங் @ விகடன்