வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (11/04/2017)

கடைசி தொடர்பு:12:51 (15/04/2017)

பூகம்பத்தாலேயே அசைக்க முடியாத வீடு... தமிழர்களின் கட்டடக்கலை அதிசயம்!

கருங்கல் வீடு

“வீட்டை கட்டிப்பாரு, கல்யாணத்தைப் பண்ணிப்பாரு" என்ற வாசகம், காலம்காலமாக நாம் பேசிவரும் ஒன்று. இந்தக் காலத்தில் கல்யாணம் செய்வதுகூட எளிதான ஒன்று. ஆனால், வீடு கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இப்போது மணல், செங்கல், சிமென்ட், ஆள் பற்றாக்குறை, தொழிலாளிகளின் ஊதியம், தரமான கட்டுமானம் என்று வீட்டைக் கட்டி முடிப்பதுக்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதையும் தாண்டி, சிறு வீட்டையோ அல்லது கோடிகளில் மாளிகைகளையோ கட்டுபவர்களும் உண்டு. எவ்வளவு பெரிய கட்டடமாகக் கட்டினாலும், அதன் தரத்தில் சிறு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். பழங்காலத்தில் கருங்கற்களையும் சுண்ணாம்பு, சிமென்ட் ஆகியவற்றைக்கொண்டு கட்டப்படும் கட்டடங்கள், இன்றளவும் உறுதியாக நிற்கின்றன. அவை அனைத்தும் காலம் கடந்து நிற்கும் பொக்கிஷங்கள். இன்றளவும் அந்த வீடுகளைக் கட்டுபவர்களும் இருக்கிறார்கள். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் பின்புறமுள்ள ஆசிரியர் காலனியில் குடியிருப்பவர், நாவள் சரவணன். அவர் கட்டியிருக்கும் வீடுதான், கோட்டை வடிவில் பிரம்மாண்டமாக... முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு, அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

கருங்கற்கள் மற்றும் வீட்டின் முகப்பு

முழுக்க முழுக்க கற்கள், நீர் இறைக்கும் கிணறு, மழை நீர் சேகரிப்புத் திட்டம், காற்றோட்டமும் வெளிச்சமும் வீட்டுக்குள் வர ஏதுவாக  அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திலும் ஒரு சிறப்பம்சம் என, கட்டப்பட்டிருக்கும் இந்த வீடு பற்றி, உரிமையாளர் நாவள் சரவணனிடம் பேசினோம், "ரெயில்வே காண்ட்ராக்டராக இருக்கிறேன். அதனால், எனக்கு கட்டடத் தொழிலில் நீண்ட கால அனுபவம் உண்டு. வித்தியாசமான ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்று எனக்கு எப்போதுமே ஓர் ஆசை உண்டு. அந்த வீடு பல தலைமுறைகளைக் கடந்து கம்பீரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால்தான், எனக்கு கருங்கல்கொண்டு வீடு கட்டும் எண்ணம் வந்தது. நான், வீடு கட்டுவதற்குச் செலவாகும் பணத்தை அம்பானிக்கும், அதானிக்கும் தரவில்லை, சாதாரண தொழிலாளிகளுக்குத் தந்திருக்கிறேன். தரை தளம் உட்பட ஜி + 2 தொழில்நுட்ப முறையில் இந்த வீட்டை கட்டி இருக்கிறேன். காரைக்குடி செட்டி நாட்டு கட்டடங்களும், புதுச்சேரி ஆரோவில் கட்டட வடிவமைப்பும்தான், எனக்கு இப்படி வீடு கட்டும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த வீட்டின் வடிவமைப்பு எப்படி வர வேண்டும் என்று நானும் எனது நண்பர் கிருஷ்ண குமாரும் நீண்ட நாட்கள் யோசித்த பின்பே முடிவெடுத்தோம். இணைய தளங்களில் தகவலைத் திரட்டி, இந்த முறையில் வீடு கட்டுவதென முடிவுசெய்தோம்.

கருங்கல்லில் வீடு கட்ட போகிறேன் என்று வீட்டில் சொன்னவுடன் எல்லோரும் சிரித்தார்கள்.  எதற்கு இந்த விஷ பரீச்சை நம்மளும் மத்தவங்க மாறியே வீடு கட்டிட்டு போலாம் என்று என் மனைவி சொன்னார். என் முடிவில் உறுதியாக இருந்தேன். இந்த வீட்டை  இந்தோ - சராசெனிக் முறையில் கட்டி இருக்கிறேன். சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரி, உயர் நீதிமன்றம் இந்த முறையில் தான் கட்டப்பட்டு உள்ளன. கருங்கல்லை போச்சம்பள்ளி அருகே வாங்கினேன். மொத்தம் 70 ஆயிரம் கருங்கல் வாங்கினேன். ஒரு கருங்கலின் விலை பதினான்கு ரூபாய். ஒரு கல் முக்கால் அடி இருக்கும், சிகப்பு கல் ராயக்கோட்டையில் இருந்து வாங்கினேன். அதை கொண்டு வந்து அரை அடி கல்லாக உடைப்பார்கள். அந்த கல்லை வைக்கும் போது ஒரு கல் விலை மொத்த செலவையும் சேர்த்து நூறு ரூபாய் பிடிக்கும். இது எங்களோட பாரம்பர்யமான இடம். அதனால் தான், இந்த இடத்தில் வீடு கட்டும் முடிவை எடுத்தேன். முதல் கல் வைக்கும் போதே வீட்டின் முழு வடிவத்தையும் வடிவமைக்க வேண்டும். எலெக்டீசியன் வேலை ரொம்ப கஷ்டம் முதல் கல் வைக்கும் போதே எந்த எந்த இடத்தில் என்னென்ன வர வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். கருங்கல்லில் வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல, இதற்கு ரொம்ப பொறுமை அவசியம். கல்லுக்கு இடையில் முழுக்க முழுக்க கடுக்காய், மண், சுண்ணாம்பு பிளாக் ஆக்சைடு (சிமென்ட் மாதிரியான கலவை) சிமென்ட் 5 சதவீத அளவு இவை அனைத்தையும் கலவையாக கொண்டுதான் வீட்டை கட்டியிருக்கிறேன்.

வீட்டின் முன்பக்கம்

 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீடு கட்ட ஆரம்பித்தேன். பொதுவாக எல்லோரும் முக்கால் அடியில் தான் சுவர் வைப்பார்கள், ஆனால் இந்த வீட்டிற்கு இரண்டரை அடியில் சுவர் வைத்திருக்கிறேன். அடித்தளம் உயரம் எட்டு அடி. அது பழைய முறையில் கட்டப்பட்டு உள்ளது. கார் பார்க்கிங்க், கிச்சன், மூன்று பெட்ரூம், பூஜை அறை தரை தளத்திலும், அதேபோல தரை தளத்தில் இருக்கும் வடிவமைப்பே முதல் தளத்திலும், இரண்டாம் தளத்திலும் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு வித்தியாசமான முறையில் கல்லை வைத்து கட்டி இருக்கிறோம். வீட்டின் கதவை காரைக்குடியில் 'ராஜநிலவு' என்று சொல்லுவார்கள். ராஜநிலவு கதவுகளை போலத்தான் இந்த வீட்டிற்கும் கதவு செய்திருக்கிறோம். யானை வீரர்கள் போர் புரியும் வகையிலான சிற்பங்கள் கதவில் இருக்கும். பழைய வீட்டில் 100 அடி  கிணறு இருந்தது.  அந்த கிணறை  மூடாமல், வீட்டின் மேல் மழை வந்தாலும் அந்த நீரும் மொத்தமாகவும் கிணற்றுக்குள் சென்று விடும். அதேபோல கிச்சன் கழிவு நீரும், குளியலறை கழிவு நீரும் சுத்திகரித்து அந்த நீர் கிணற்றுக்குள் வரும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் வீட்டு பணிகள் முழுமையாக முடிந்து விடும். இந்த வீட்டின் இன்னொரு சிறப்பு பூகம்பம் வந்தாலும், இந்த கட்டிடம் ஒன்றும் ஆகாது. இந்த கட்டிடம் வரலாற்று சான்றாக இருக்க வேண்டும் அவ்வளவு தான் என் ஆசை" என்றார்.

காலம் கடந்து நிற்கும் கட்டிடங்களின் வரிசையில் சரவணன் கட்டி இருக்கும் கருங்கல் கோட்டை வடிவிலான வீடு கண்டிப்பாக ஒரு பொக்கிஷம் தான்...

- அ.பா.சரவணக்குமார்,
(மாணவப் பத்திரிகையாளர்.)


டிரெண்டிங் @ விகடன்