Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தண்ணியில்லா காடுகளால் 46 யானைகளுக்கு என்ன நடந்தது தெரியுமா?!

காடு வறண்டு கிடக்கிறது . கொளுத்தும் வெயிலைத் தடுக்க மரங்களில் இலைகள் இல்லை. பச்சையைப் பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த காய்ந்த நிறம் கடுமையாக இருக்கிறது. ஆ... அதோ தெரிகிறது கொஞ்சம் பச்சை... வேகமாக நடக்க ஆசை தான். ஆனால், உடலின் பலம் மொத்தமாய் உறியப்பட்டிருந்தது. மெதுவாக நடந்து போகிறது அந்த நாட்டு மாடு. அந்த இனத்திற்கு செம்மறை என்ற பெயர் உண்டு. சத்தியமங்கலம் அருகே இருக்கும் பர்கூர் மலைப்பகுதியை பூர்வீகமாகக் கொண்ட செம்மறைக்கு என ஒரு தனி வரலாறு உண்டு. வறண்டு போயிருக்கும் செடிகளின் கிளைகள்... கூர்மையாக இருக்கின்றன. அதிலிருந்து ஒதுங்கி நடக்க தெம்பில்லாத மாடுகள், அதை உரசியபடியே நடக்கின்றன. தடினமான அந்த மாட்டுத் தோலை கொஞ்சம், கொஞ்சமாக பதம் பார்க்கிறது காய்ந்த கிளைகள். உடலைக் கிழித்து ரத்தம் வெளியேறுகிறது. அடிக்கும் வெயிலில், கிழிந்த தோளில், ஒழுகும் ரத்தம் கொடுக்கும் எரிச்சலோடு அந்த பச்சையை நெருங்குகிறது. அது சீமைக்கருவேலம். வேறு வழியில்லை. சாப்பிடுகிறது. 

செம்மறை மாடுகள் பர்கூர், யானைகள் இறக்கின்றன

கருவேலத்தில் இருக்கும் வேதிப்பொருளான டனின் ( Tanin ) கடுமையான தொண்டை வறட்சியைக் கொடுத்து, அதீதமான தாகத்தை ஏற்படுத்துகிறது. தண்ணீருக்காக அலைகிறது அந்த மாடு. எங்குத் தேடியும் இல்லை. காய்ந்துக் கிடக்கும் புற்களை சாப்பிட முயற்சிக்கிறது. சொரசொரப்பான அந்தக் காய்ந்த புல் அதன் வாயைக் கிழிக்கிறது. தாகத்தில் தவிக்கும் மாடு... வழியும் தன் ரத்தத்தையே குடிக்கிறது... கொஞ்ச நேரம். உடலின் மொத்த நீர்ச்சத்தையும் இழந்து, பட்டுப்போன அந்த மரத்தின் மடியில் அப்படியே சாய்கிறது. உயிர் மடிகிறது. உடலிலும், வாயிலும் வழிந்த ரத்தம் காய்ந்துப் போகிறது. எறும்புகளும், பூச்சிகளும் மொய்க்க ஆரம்பிக்கின்றன. 

செம்மறை மாடுகள் மட்டுமல்ல, பல யானைகளுக்கும், மான்களுக்கும், முயல்களுக்கும், பாம்புகளுக்கும், புழுக்களுக்கும் கூட இதே நிலைதான் இன்று நம் காடுகளில்... வெப்பத்தை தாங்க முடியாத ஊர்வனைகள் பொசுங்கிச் சாகின்றன. காய்ந்த புற்களின் கூர்மைகளில் ஊறும் போது  உடல் கிழிந்து செத்து விழுகின்றன. 

வறட்சியின் காரணமாக 50 யானைகள் இறப்பு

கடுமையான வறட்சியின் காரணமாக தமிழக - கேரள எல்லைக் காடுகளில் 50 யானைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான வனவிலங்குகள் செத்து மடிந்துள்ளன. கடந்த 3 மாதங்களில் மட்டும் முதுமலை, சத்தியமங்கலம், கோவைக் காடுகளில் 46 யானைகள் இறந்துள்ளன. சில மாத குட்டிகளில் தொடங்கி, 30 வயதான யானைகள் வரை இறந்துப் போயுள்ளன. இந்த இறப்புகளுக்கெல்லாம் முதன்மையான காரணமாக வறட்சி இருக்கிறது. தமிழக வனங்களை அச்சுறுத்தும் இந்த வறட்சி மரணங்கள் குறித்து சூழலியல் செயற்பாட்டாளர் "ஓசை" காளிதாஸைத் தொடர்புக் கொண்டோம்,

யானைகளுக்காக நீர்த் தொட்டி

" தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழக வனங்கள் கடுமையான வறட்சியில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை வற்றாமலிருந்த பல ஓடைகள் வற்றிப் போயிருக்கின்றன. தண்ணீரின்மை விலங்களுக்கான தாகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மிகப் பெரிய அளவிலான உணவுத் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. யானைக்கு ஒரு நாளைக்கு 250கிலோ வரையிலான உணவு வேண்டும். அது செறிக்கும் அளவிற்கான நீர் வேண்டும். ஆனால், சரியான உணவுகள் கிடைக்காததால், வன விலங்குகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. யானைகளின் உணவில் 60% புற்கள் தான். மான்களுக்கு புற்கள் 100% உணவு. ஆனால், காடுகளில் இன்று புற்களையே காண முடியவில்லை. எல்லாம் முற்றிலும் காய்ந்துப் போய் கிடக்கின்றன. 

வறட்சியின் பிடியில் யானை உட்பட வனவிலங்குகள்

காடுகளில் மற்றுமொரு முக்கியப் பிரச்னையாக களைச் செடியான "உண்ணிச் செடி" உருவெடுத்திருக்கிறது. விலங்குகள் இதை உண்ண ஓசை காளிதாஸ் - யானை இறக்கிறதுமுடியாது. பிற தாவரங்களின் வளர்ச்சிக்கும் இது பெரும் கேடுகளை விளைவிக்கிறது. இதை நீக்குவதற்கான தொடர் முயற்சிகளும், நிதியும் அவசியப்படுகின்றன. தண்ணீர்ப் பிரச்னையைப் போக்க வனங்களில் 4 கிமீ தூரத்திற்கு ஒன்றாக தொட்டிகள் கட்டப்பட்டு, அதில் நீர் நிரப்பப்படுகின்றன. ஆனால், இது எல்லாமே நிரந்தரத் தீர்வுகளைத் தந்துவிடாது. தெரிந்தோ, தெரியாமலோ நம் காடுகளுக்கு நாம் பெரிய கேடுகளை ஏற்படுத்திவிட்டோம்.

தாகத்திற்காகவும், உணவில்லாததாலும் யானைகள் காட்டை ஒட்டிய கிராமங்களுக்குள் புகும் வாய்ப்புகள் இருக்கின்றன. மனிதர்கள் அதன் மீது பெரும் கோபம் கொள்வதைத் தவிர்த்து, அதைப் புரிந்துக் கொள்ள முயல வேண்டும். இதையெல்லாம் தாண்டி, யானைகளின் உயிரிழப்புகளை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரேயொரு நல்ல விஷயம் ஒவ்வொரு யானைகளின் கூட்டத்திலும் குட்டி யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அந்தக் குட்டிகளுக்கு வறட்சியை சமாளிக்கும் தெம்பு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. இதெற்கெல்லாம் ஒரே தீர்வு இருக்கும் காடுகளைக் காப்பதும், பசுமைப் பரப்பை அதிகப்படுத்துவதும் தான்..." என்று சொல்லி முடிக்கிறார். 

வனத்தில் வாழும் விலங்குகள் அல்லாமல், வனங்களை ஒட்டி இருக்கும் பழங்குடி கிராமங்களிலும் கூட மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நடராஜன் - சுடர் - யானைகள் இறக்கின்றன

"பர்கூர் மலையில் இருக்கும் சோளகணை கிராமத்தில் சோளகர் எனப்படும் பழங்குடியினம் வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம்.சிறு சுணைகளில் ஒழுகும் நீரைப் பிடித்துக் கொண்டு, மலைப்பாதையில் குடங்களை சுமந்து கொண்டு போகிறார்கள் பெண்கள். நீரை உறிஞ்சி எடுக்கும் நகரங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், நீரை உற்பத்தி பண்ணும் காடுகளில் வாழும் பழங்குடிகளுக்கு தண்ணீர் இல்லை. 

கடந்த வருடம் பர்கூரின் அரிய வகை மாடான 'செம்மறை' இனம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அதை இனவிருத்தி செய்யவும் 'கால்நடை ஆராய்ச்சி மையம்' ஒன்று தொடங்கப்பட்டது. ஆனால், தண்ணீர் இல்லாமல் மாடுகள் செத்து விழுகின்றன. பல மாடுகளை மலையை விட்டு கிழே கொண்டு போய் அடிமாட்டு விலைக்கு விற்கவும் தொடங்கிவிட்டார்கள். மிகக் கொடுமையான காலகட்டத்தில் இருக்கிறோம்..." என்று உணர்ச்சிப் பொங்கச் சொல்கிறார்  சத்தியில் இயங்கும் "சுடர்" அமைப்பைச் சேர்ந்த நடராஜன். 

யானைகள் மட்டுமல்ல பழங்குடிகளுக்கும் தண்ணீர் இல்லை

 "  நாம் வாழும் பூமி நம் மூதாதையர்களின் சொத்தல்ல, 
    அது எதிர்கால சந்ததியிடமிருந்து பெறப்பட்டிருக்கும் கடன்..."

நம் எதிர்கால சந்ததிக்கு எப்படி இந்தக் கடனை அடைக்கப் போகிறோம் என்பது தான் தெரியவில்லை... ஒரு வேளை எதிர்கால சந்ததிகளின் கடனை வட்டியும், முதலுமாய் அவர்களுக்கான மரணத்தின் மூலம் அடைக்கப்போகிறோமோ என்ற பயம் மட்டுமே எஞ்சி நிற்கிறது...

- இரா. கலைச் செல்வன்.

படங்கள் : தா. ஶ்ரீனிவாசன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close