Published:Updated:

தாமரைக் குளத்தில் ஆகாயத் தாமரை! - ரெய்டில் சிக்கிய நட்சத்திரத்தின் கதை

தாமரைக் குளத்தில் ஆகாயத் தாமரை! - ரெய்டில் சிக்கிய நட்சத்திரத்தின் கதை
தாமரைக் குளத்தில் ஆகாயத் தாமரை! - ரெய்டில் சிக்கிய நட்சத்திரத்தின் கதை

நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் மிகுந்த சுறுசுறுப்புடன் வலம் வருகின்றனர். ஆளும்கட்சி அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள் என்றால், அதற்கொரு காரணம் இருக்கிறது. 'இவர் வீட்டில் ஏன் இந்தளவுக்கு குடைகிறார்கள்?' என அரசியல் நட்சத்திரத்தை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். இந்தக் கேள்விக்கான பதில் யாருக்கும் கிடைக்கவில்லை. 

'தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஒருநாள் ஏற்க வேண்டும்' என்ற எண்ணத்தில்தான், அரசியல் கட்சியை அவர் துவக்கினார். 'உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்' என்ற பாடலை இவர் பாடாத மேடைகள் குறைவு என்று சொல்லும் அளவுக்கு, எம்.ஜி.ஆர். பக்தனாகவே வலம் வரும் நட்சத்திரம் அவர். அரசியல் வானில் பிரகாசமாக ஜொலிக்க வேண்டிய இந்த நட்சத்திரம், ஓரிரு இடங்களுக்காக மாறி மாறி கூட்டணி அமைத்தது. அரசியல் கட்சியை நடத்துவதைவிடவும், எந்தநேரமும் அவரை வாட்டி வதைக்கும் ஒரே விஷயம் பணம். 'எந்தெந்த வழிகளில் பணம் வரும்?' என்பதுதான் அவருடைய முழு நேர சிந்தனையாக இருக்கும் என அவரை விட்டு விலகிய நிர்வாகிகளே நேரடியாகப் பேட்டி கொடுத்தனர். இந்த சிந்தனை தீவிரமடைந்ததால், அவரை நம்பி வந்த சொந்த சமூகத்து தொழிலதிபர்களே, மீண்டும் தங்கள் தொழிலைக் கவனிக்கச் சென்றுவிட்டனர். கட்சிப் பதவி பெற்றவர்களுக்கு காரை பரிசாகக் கொடுத்தார் நட்சத்திரம். அந்த காருக்கு ட்யூ கட்டாததால், பல நிர்வாகிகள் நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்டனர். தற்போது இருக்கும் சிலரை மட்டும் வைத்துக் கொண்டு கட்சி நடத்தினாலும், பழையபடி எதுவும் வந்து சேரவில்லை. கூடவே, தொடர் தோல்விகளும் வந்து சேர்ந்தது. இதை மறக்கடிக்க வேறு சில சர்ச்சைகளிலும் சிக்கினார். 'நான் நன்றாக இருக்கிறேன்' என ஜிம்முக்கு வந்து அவர் வொர்க் அவுட் செய்த காட்சிகளைப் பார்த்த பிறகுதான், சமூகத்து மக்களே நம்பினார்கள். இந்நிலையில், மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், மேற்படி நட்சத்திரத்தை நேரில் சந்தித்துப் பேசினார்கள். 

‘உங்கள் ஆட்களோடு தாமரையில் ஐக்கியமாகிவிடுங்கள்' எனச் சொல்ல, 'டெல்லி செல்வாக்கோடு மீண்டும் வலம் வரலாம்' என நிர்வாகிகளையும் நம்ப வைத்தார். இதுகுறித்து டெல்லியை ஆளும் ஷாவிடமும் தெரிவித்துவிட்டார் தமிழக பிரமுகர் ஒருவர். இணைப்பு விழாவுக்கான முகூர்த்தத் தேதியைக் குறிக்கும் நேரத்தில், தாமரையின் தூதுவரை சந்தித்தார் நட்சத்திரம். 'இணைப்பு விழா நடத்துவதில் எந்தத் தயக்கமும் இல்லை. தற்போது நெருக்கடியில் இருப்பதால், பெரிய பத்து ஒன்றை வாங்கிக் கொடுங்கள்' என மழுப்பலாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்து போன தூதுவர், 'நாட்டையே ஆளும் கட்சிக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால், இதைப் பற்றி ஷாவிடம் எப்படிச் சொல்வது?' எனத் தயக்கத்திலேயே இருந்துவிட்டார். தண்ணீரில் தாமரை ஒட்டாததால், பொறுத்துப் பார்த்த நட்சத்திரம், முக்கிய நபருக்கு தொழிலதிபர் மூலம் தூது அனுப்பியிருக்கிறார். 'தொகுதிக்குள் இருக்கும் கணிசமான எங்கள் சமூகத்து மக்கள் உங்களை ஆதரிப்பார்கள். அதற்கு இவர் இருந்தால் போதும்' எனக் கரைய வைத்திருக்கிறார். டெல்லி ஷாவிடம் எதிர்பார்த்ததை, சற்றும் தாமதிக்காமல் வாரி வழங்கியிருக்கிறார் முக்கியமானவர். இப்படியொரு சந்திப்பு காட்சிகள் வெளியானதை அதிர்ச்சியோடு கவனித்தது டெல்லி. 'குளத்தில் தாமரை மட்டும்தான் மலர வேண்டும். ஆகாயத் தாமரையைப் படர விடுவது நல்லதல்ல' என கறார் காட்ட, 'நம்பிக்கை துரோகத்துக்கு இப்படிப்பட்ட பரிசுதான் கிடைக்கும்' என ரெய்டு காட்சிகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். ' தாமரையைக் குளிர்விக்க என்ன செய்வது?' என படபடத்தபடியே ஆலோசித்து வருகிறாராம் நட்சத்திரம். 

-ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு