Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எப்படி இருந்த புதுச்சேரி பல்கலைக்கழகம்... ஏன் இப்படி ஆனது?

'தரமான கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்காகத் தேசிய அளவில் பேசப்பட்டப் புதுச்சேரி பல்கலைக்கழகம், தற்போது முறையற்ற நிர்வாகத்தால் குற்றுயிரும் குலை உயிருமாக மரணப் படுக்கையில் கிடக்கிறது' என்கிறார்கள் இங்கு பணியாற்றும் பேராசிரியர்களும், மாணவர்களும். 

புதுச்சேரி பல்கலைக்கழகம்

உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறியப் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்குள் ஒரு விசிட் அடித்தோம்.

புதுச்சேரி காலாப்பட்டில் சுமார் 780 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவருகிறது மத்தியப் பல்கலைக்கழகம். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேரடியாகப் படிக்கிறார்கள். அதுதவிர, உறுப்புக் கல்லூரிகள், தொலைதூரக்கல்வி என மொத்தமாக 68 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 

சிறப்பான செயல்பாடுகளுக்காக கடந்த 2012-ம் ஆண்டு ஜனாதிபதியிடமிருந்து விருது பெற்ற இந்தப் பல்கலைக்கழகம்தான், சில நாட்களுக்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருந்த தரவரிசைப்பட்டியலில் 59-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு அறிக்கையில், இந்தப் பல்கலைக்கழகத்தை செயல்படாத பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பட்டியல் இட்டிருக்கிறது மனித வளத்துறை. இந்தப் பின்னடைவு குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவையும் அமைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் சிறப்பாக செயல்படும் பட்டியலில் இருந்த இந்தப் பல்கலைக்கழகம் ஒரே வருடத்தில் தரமிழந்து நிற்க என்ன காரணம்?

"மாணவர்களை வழிநடத்த வேண்டிய பேராசிரியர்கள் பதவி மோகத்தில் பல்வேறு அணியாகப் பிரிந்து கிடப்பதால் இரு தரப்பினருக்குமான இடைவெளி அதிகரித்திருக்கிறது. விளைவு, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் படிப்புக்குரல் ஓய்ந்து போராட்டக்குரல் ஓங்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் போலி சான்றிதழ் முறைகேட்டில் அப்போதைய துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட அனீஷா பஷீர்கான்தான் இப்போதுவரை தொடர்கிறார். 

இப்படி துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர் தொடங்கி தொலைதூரக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட உயர்பதவிகள் அனைத்தும் தற்காலிக பொறுப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டிருப்பதுதான் அவலத்தின் உச்சம். இதனால் நிரந்தர முடிவுகள் எதையும் எடுக்க முடியாமல் ஒட்டுநர் இல்லாத வாகனமாகத் தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். தமிழ்நாட்டில் திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம் அமைந்து 7 வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் அந்த மாணவர்கள், நிலவில் உயிரினம் வளருமா? என்பதை ஆராய்ச்சி செய்வதற்கான அதிநவீனக் கருவியை இஸ்ரோவிற்கு செய்து கொடுத்துவிட்டார்கள். ஆனால் இங்கு 32 ஆண்டுகள் ஆகியும் சொல்லிக்கொள்ளும்படி எந்த வளர்ச்சியையும் இல்லை. மாணவர்கள் தேர்ச்சி வீழ்ச்சியடைந்திருப்பதோடு ஆராய்ச்சிக் கூடங்கள் செயல்பாடற்றுக் கிடக்கின்றன" என்கிறார்கள். 

"தற்காலிகக் பொறுப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும் அதற்குத் தகுதியானவர்களை நியமிப்பதில்லை. பொறுப்புள்ள தலைமைப் பதவிகள் கூடத் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படுவதில்லை. தலைமைக்கு ஜால்ரா அடிக்கத் தெரிந்திருந்தால் போதும் என்று பதவிகள் நிரப்பப்படுவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கின்றன. இவர்களின் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வழக்கு செலவுக்கென்று லட்சக்கணக்கில் பல்கலைக்கழக பணத்தை வாரி இறைக்கிறார்கள். விதிமுறைகளை சரியாகக் கையாளவில்லை என்று சொல்லி, 2016-17-ம் ஆண்டுக்கான திட்டமில்லா செலவினங்களுக்கான நிதியில் சுமார் 2 கோடி அளவிற்குக் குறைத்து குட்டு வைத்திருக்கிறது பல்கலைக்கழக மானியக் குழு. அதைக் குறைக்கக்கூடாது என்று கடிதம் எழுதக்கூட இங்கு யாரும் இல்லை என்பதுதான் உண்மை” என்று கொதிக்கின்றனர் பல்கலை ஊழியர்கள். 

"சென்ற வருடத்தின் முனைவர் ஆய்வு படிப்புக்கான சேர்க்கையை இன்னும் முடிக்காதது, புதுவை மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த முடியாதது என அனைத்திலும் தேக்கமான நிலை நிலவுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் வரலாறு காணாத தாமதம். நவம்பர் மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.  லட்சக்கணக்கான மாணவர்களைக் கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மறு கூட்டல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு அடுத்த தேர்வுக்கான அறிவிப்பே வந்துவிட்டது. ஆனால் 91 உறுப்புக் கல்லூரிகளை மட்டுமே கொண்டிருக்கும் புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளைக் கூட அறிவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது" என்கிறார்கள் பேராசிரியர்கள். 

நிர்வாக சீர்கேட்டினால் திசை தெரியாமல் நிற்பது பல்கலைக்கழகம் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும்தான். மத்திய அரசு மனிதவளத்துறை புதுச்சேரி பல்கலைக்கழகத்தை எப்படி சீர் செய்யப்போகிறதோ தெரியவில்லை. விரைவில் புதுச்சேரி பல்கலைக்கழகம் சீர்திருத்தத்தில் இறங்கி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு! 

-ஜெ.முருகன் 
படம்: அ.குரூஸ்தனம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close