வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (12/04/2017)

கடைசி தொடர்பு:16:15 (12/04/2017)

'புல்லட் பாண்டி வரும்போது குறுக்க நிக்கிற..?' - மதுரை இளைஞரின் ரவுசு!

''நான் பொறக்குறதுக்கு எட்டு வருஷத்துக்கு முன்னால இருந்து இந்த வண்டி எங்க வீட்டுல இருக்கு, எங்க வீட்டுல மொத்தம் அஞ்சு பேரு. இந்த புல்லட்டையும் சேர்த்து ஆறு பேரு. கிட்டத்தட்ட எனக்கு அண்ணன் மாதிரி இந்த வண்டி. நாற்பது வருஷமா எங்க வீட்டுல இருக்கான்'' பெட்ரோல் டேங்கைத் தடவிக்கொண்டே பேசுகிறார் கார்த்திக் சாரதி. நாற்பது வருஷமாக ஒரே ஆள் ஒரு வண்டியை வைத்திருப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வம். 1978 முதல் தற்போதுவரை போருக்குப் போகும் ஒரு யானையைப் போல மதுரை ஆத்திகுளம் ஏரியாவில் தோரணையாக வலம் வந்துகொண்டிருக்கும் புல்லட் வண்டியின் சொந்தக்காரர்.

புல்லட்

''அப்பாவுக்கு முதல் வண்டி ஜாவா. அதுக்குப் பிறகு ராஜ்தூத் வாங்கினாங்க. அப்பா வாங்கின மூணாவது வண்டிதான் இந்த புல்லட். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து இந்த வண்டியைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆறாவது ஏழாவது படிக்கிறப்போலாம் காலையில எழுந்திரிச்சதும் வண்டியைத் துடைக்கச் சொல்வாங்க. அப்போ எல்லாம் ரொம்ப எரிச்சலா இருக்கும், என்னடா இது வண்டியைத் துடைக்க விட்டுக்கிட்டு இருக்காரேன்னு. ஒருநாள் சாவியைக் கொடுத்து இந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணுன்னு சொன்னாங்க, நானும் 'ஆடுகளம்' படத்து தனுஷ் மாதிரி கிக்கர் மேல ஏறி நிற்கிறேன். ஸ்டார்ட் பண்ண முடியலை. அப்போதான் இந்த வண்டி மேல எனக்கு ஒருவிதமான ஈர்ப்பு வர ஆரம்பிச்சுது. ஏன்னா அந்த டைம்ல எல்லா வண்டியையும் ஈசியா ஸ்டார்ட் பண்ணிடலாம். ஆனா புல்லட்ல அந்த ஆம்ப் சரியா செட் பண்ணி ஸ்டார்ட் பண்ணலைன்னா கால் போயிடும். இதை ஸ்டார்ட் பண்றதுக்கே ஒரு வருஷம் பழகினேன். அப்படியே மெதுமெதுவா வீட்டுக்குத் தெரியாம மாமாகூட போய் பைக் ஓட்டக் கத்துக்கிட்டேன்.

பத்தாவது படிக்கிறப்போ இந்த வண்டியை ஓட்ட ஆரம்பிச்சேன். இப்போவரைக்கும் புல்லட் ஓட்டுறப்போ மட்டும் என்னை அறியாமலே ஒரு கெத்து வர்ற மாதிரி தோணும். ஏரியாவுக்குள்ள வண்டியை எடுத்துட்டுப் போனா புல்லட் சவுண்டுக்காகவே டீக்கடையில் ஒரு செகண்ட் நம்மை உத்துப் பார்ப்பாங்க; எவன்டா வர்றதுன்னு. அந்த போதை எனக்கு பிடிச்சுருந்துச்சு. இப்போ ஏகப்பட்ட வண்டியெல்லாம் வந்துருச்சு. ஆனா இந்த புல்லட் அளவுக்கு மனசு திருப்தி வரலை. பழைய வண்டியில இடப்பக்கம் பிரேக்கும் வலப்பக்கம் கியரும் இருக்கும். வருஷம் ஆக ஆக வண்டியைக் கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்கலாம்னு அப்பாகிட்ட போய் நின்னேன். வெளிப்புறத்தைத் தவிர வேற எதுவும் பண்ணக் கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. சக்கரம் மட்டும் அலாய் பண்ணலாம்னு யோசனை; இதுக்காகவே சென்னையில் புதுப்பேட்டைக்குப் போய் ஆல்ட்ரேஷன் பண்ணிட்டு வந்தேன். அதுக்குப் பிறகு 2014-ல் சின்னச் சின்ன ஆல்ட்ரேஷன் பண்ணினேன். இப்போவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாம வண்டி ஓடிட்டு இருக்கு.

புல்லட்

இந்த வண்டிக்குப் பின்னால நிறைய மலரும் நினைவுகள் இருக்கு. எனக்கு நண்பர்கள் வட்டத்துல புல்லட் சாரதின்னு பேரே வெச்சாங்க, என்னை ரொம்ப வருஷத்துக்குப் பிறகு பார்க்கிற யாருமே என்னை நல்லா இருக்கியான்னு கேட்கிறதை விட புல்லட் எப்படி இருக்குன்னுதான் முதல்ல கேட்பாங்க. என்னோட காலேஜ் நாட்கள்ல பல காமெடிச் சம்பவங்களும் நடந்திருக்கு. ஒருநாள் நைட் ஸ்டடி முடிச்சுட்டு சாப்பிட ஹோட்டலுக்குப் போனோம். ஒரு மணி ஆகிடுச்சுன்னு பாத்திரத்தை எல்லாம் கழுவி வெச்சுட்டாங்க. நான் வண்டியை ஸ்டாண்ட் போட்டுட்டு உட்கார்ந்துட்டேன். என்ஃப்ரெண்ட்தான் ஹோட்டலுக்குள்ள போனான். பத்து நிமிஷத்துல சாப்பாட்டு பார்சலோட வந்தான். எப்படிடான்னு கேட்டா  'வண்டியில ஏட்டையா உட்கார்ந்துருக்காருன்னு சொன்னேன். உன்னை எட்டிப் பார்த்துட்டு பார்சல் குடுத்தாங்க'ன்னு சொன்னான்.

இன்னொருமுறை கோரிப்பாளையத்துக்கிட்ட ஒரு சம்பவம் நடந்துச்சு. எங்களுக்கு முன்னால ஸ்கூட்டியில ஒரு பொண்ணு போய்க்கிட்டு இருந்துச்சு. என் பின்னால உட்கார்ந்த பையன் அந்த வண்டியை ஓவர் டேக் பண்ணச் சொன்னான், இது பழைய வண்டி, மைலேஜ் எல்லாம் இருக்காதுன்னு எவ்வளோ எடுத்துச்சொல்லியும் அவன் கேட்கலை. சரின்னு விரட்டிட்டுப் போய் அந்த ஸ்கூட்டியை ஓவர் டேக் பண்ணி கை காமிச்ச அடுத்த நிமிஷம் வண்டி பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சு. அந்தப் பொண்ணு எங்களை ஓவர்டேக் பண்ணி டாட்டா காட்டிட்டுப் போயிடுச்சு. செம்ம பல்பு ஆகிடுச்சு. இப்படி பல மெமரீஸ் இந்த வண்டியோட கலந்துருக்கு. அப்பா இறந்து ஒரு வருஷம் ஆச்சு. அப்பா இந்த வண்டியை வாங்கும்போது இந்த வண்டியோட விலை எட்டாயிரம் ரூபாய். இது மூணு தலைமுறை பார்த்த வண்டி. அப்பா ஓட்டினாங்க. நான் ஓட்டினேன். இப்போ என் அக்கா பையன் ஓட்ட ஆரம்பிச்சுட்டான். இது எங்க குடும்பத்துல ஓர் ஆள் மாதிரி. அதனால விற்கணும்னு நான் நெனச்சுக்கூட பார்க்கலை. இது இன்னும் பல தலைமுறைகள் பார்க்கும்னு நம்புறேன்'' என்று முடித்தார்.

- ந.புஹாரி ராஜா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்