வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (12/04/2017)

கடைசி தொடர்பு:17:05 (14/04/2017)

வைர வளையல், 110 பவுன் தங்கம், 57 விலை உயர்ந்த புடவைகள் - மகள்களின் திருமண ஆசையும், அம்மாக்கள் கொடுத்தவையும்! #VikatanExclusive

பெற்றோர்களிடம் பெண்கள் சீர் கேட்பதெல்லாம் இந்தக்காலம். தன் பெண் வாழப்போகிற இடத்தில் பிறந்த வீட்டைப் போல சொகுசாக வாழ வேண்டுமே என்கிற அன்பு, அக்கறை காரணமாக அம்மாக்கள் கொடுக்கும் சீர் என்னவெல்லாம் தெரியுமா? அம்மாக்களிடம் பேசினோம்.

மதுரை கே.கே நகர் குல்சம் ஹுசைன்:

அம்மாக்களின் சீர் பற்றி

''என் மக ஜாப்ரின் கல்யாணத்துக்கு ஒரு கிலோக்கு தங்கம் வைரம் பதிச்ச காஸ்ட்லி நகைகள் போட்டோம். அதெல்லாம் கண்ணைப் பறிக்கிற மாதிரி அத்தனை அழகா இருக்கும்.

அதிக விலைகொண்ட சுத்தமான பட்டுப் புடவைகள் 60 கொடுத்தோம். அவள் வீட்டு உபயோகத்துக்கு என்று 50க்கும் மேற்பட்ட மென்மையான துணிகளாலான உடைகள் கொடுத்தோம். அவையெல்லாம் வெயில் காலத்தின்போது அணிய வேண்டிய இதமான உடைகள். அவளுக்காகப் பார்த்து பார்த்து, அவளுடைய ஆசைகளை கேட்டு அதன்படி வெளியூரில் ஆர்டர் செய்து வாங்கிகொடுத்தோம். என் பொண்ணு பூவிதழ் டிசைன்ல வைரங்கள் பதிச்ச வளையல்கள் வேணும்னு கேட்டா. ஆர்டர் பண்ணி பல செட் வளையல் வாங்கி கொடுத்தோம். 60 பட்டுபுடவை வேணும்னு அது எப்படி இருக்கணும்னு சாய்ஸ் கொடுத்தா.

விலை உயர்ந்த டிவி, ஏசி அன்றாடத் தேவைக்கான அத்தனை பொருட்களையும் காஸ்ட்லியானதாக பார்த்து வாங்கி கொடுத்தோம். அதே போல மரத்தாலான அதிக வேலைப்பாடுகள் நிறைஞ்ச பொருட்களை அவள் புகுந்த வீட்டில் அடுக்கினோம். அவளுக்காக ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு இடத்தில் இருந்து வரவழைத்தோம். கல்யாணத்துக்கு மட்டும் 6 லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சு கிராண்டா நடத்திக் காட்டினோம். இதெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கேட்கலைனாலும், எங்க மக போற இடத்துல வசதியா நல்லா இருக்கணும்ங்கிறதுனால நாங்களா விரும்பி கொடுத்தோம். அதுல ஒரு மனசு நிறைவு கிடைக்குது.’’

சரஸ்வதி அசோகன், கரூர்:

சரஸ்வதி அசோகன்

"எங்க சமூகத்துல பெரும்பாலும் மாப்பிள்ளை வீடுகள்ல,'பொண்ணுக்கு இவ்வளவு வரதட்சணை கொடுங்க'ன்னு கேட்க மாடாட்டாங்க. ஆனால்,பொண்ணைப் பெத்த நாங்க, கைநிறைய வரதட்சணைக் கொடுத்து, தடபுடலா திருமணம் செய்ஞ்சு கொடுத்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவோம்.

எங்களுக்கு ஒரே பெண் சிவசக்தி. அவளை சாஃப்ட்வேர் இன்ஜினியர் படிக்க வச்சோம். எங்க ஆஸ்தி எல்லாம் அவளுக்குதான் என்பதால், அவள் திருமணத்தை படுகிராண்டாக பண்ண நினைச்சோம். முதல் நாள் மதியம் ஆரம்பிச்ச பந்தி, கல்யாணம் அன்னைக்கு மதியம் தான் நிறுத்தினோம். திருமண செலவு நாலு லட்சம், நூறு பவுன் நகை (ரூமி, எமிரால்ட் பதிச்ச வைர நகை என் பொண்ணு ஆசையா கேட்டது... 12 பவுன்), மாப்பிள்ளைக்கு பத்து பவுன் நகை, ஹூண்டாய் வெர்னா கார், பொண்ணும்,மாப்பிள்ளையும் தனிக்குடித்தனம் போறதுக்கு பண்டபாத்திரம், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இரண்டு லட்சம் கேஷ் கொடுத்தோம். கட்டில், பீரோன்னு எல்லாத்தையும் தேக்கு மரத்துல வாங்கி கொடுத்தோம்.

15 ஆயிரம் மதிப்பில் காஞ்சிப்பட்டு ஏழும், இரண்டாயிரம் மதிப்பில் 50 நார்மல் புடவைகள் கொடுத்தோம். பேத்தி பிறந்தப்ப சீர், தீபாவளி சீர் 5 லட்சம் செலவழிச்சோம். 32 வருஷத்துக்கு முன்னாடி நடந்த என் கல்யாணத்துக்கு 50 பவுனும், 50 ஆயிரம் ரொக்கமும் கொடுத்தாங்க என்னைப் பெத்தவங்க. மாப்பிள்ளை வீடுல கேட்காட்டியும் நாங்க கொடுப்போம். இவளோ சீர் கொடுத்து பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சான்யானு மத்தவங்க பாராட்டுறதுக்காகதான் இத்தனை செலவும். இதெல்லாம் என் பொண்ணு தனக்கு என்ன வேணும்னு போட்ட லிஸ்ட். அதை ஆசை ஆசையா நாங்க நிறைவேத்தி வைச்சோம்.''

ராமநாதபுரம் மன்னர் பரம்பரை வழி தோன்றலில் வந்த குடும்பத்தை சேர்ந்த மீனலோஷினி

சீர் மீனலோஷனி
 

இவரின் இளைய மகள் எம்.பி.ஏ பட்டதாரியான  ஆத்மஸ்ரீ - டாக்டர் பாலசுப்பிரமணியன் திருமணம் சமீபத்தில் நடந்தது. ஆத்ம ஶ்ரீயின் அம்மா மீனலோஷினி பேசினார் ‘‘எவ்வித கட்டுப்பாடுகளோ, முன் வைப்புகளோ இன்றி எங்கள் பெண்ணின் திருமணத்தை சிறப்பாக நடத்தினோம். எங்கள் மகளின் தேவைக்காக 100 பவுன் நகைகளும், அத்தியாவசிய சீர் பொருட்களும் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள், வழக்கமான புடவைகள் என மகளுக்கு தேவையானதை அவளின் விருப்பத்தை கேட்டு அதன்படி நிறைவேற்றினோம். ராமநாதபுரத்தில் பெருமை வாய்ந்த குடும்பம் எங்களுடையது. என் மகளின் திருமணத்தில் ஆயிரக்கணக்கில் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர்களும், பாமரங்களும் கலந்து கொண்டார்கள்.''

பாக்கியம், சேலம்

பாக்கியம்

''எங்களுக்கு 3 பெண் பிள்ளைகள் இருக்காங்க. 15 வருசத்துக்கு முன்னாடி அத்தனை பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சோம். ஒவ்வொரு பிள்ளைக்கும் ரொக்கமா ஒரு லட்சமும், 40 சவரம் நகையும், 25 பட்டுப்புடவை, 50 காட்டன் புடவைகள் வாங்கி கொடுத்து திருமணம் பண்ணி வைச்சோம். 15 வருஷத்துக்கு முன்னாடியே ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமண செலவு 2 லட்சத்துக்கு மேல ஆச்சு. காடு கரை எல்லாத்தையும் பிள்ளைங்களுக்கு சமமா பிரிச்சுக் கொடுத்தோம். அதுவும் என் பொண்ணுங்க எல்லாரும் கிரைண்டர் குறிப்பிட்டு கேட்டாங்க. 'போற வீட்டுல என்னால கல்லுல மாவரைக்க முடியாதும்மா.. கிரைண்டர் வாங்கி தாங்கனு கேட்டாங்க. அப்பதான் கிரைண்டர் வந்திருந்த காலம். தேடித்தேடி தெணறிப்போயிட்டோம். கிரைண்டரை மட்டும் ஒரு மாசம் தேடி அலைஞ்சோம். தாரமங்கலம் சுத்தி எங்கையும் கிடைக்கலை. அதுகப்புறம் தேடி அலைஞ்சு வாங்கி கொடுத்து அவங்க மனசு குளிர கல்யாணத்தை நடத்தினோம். மகள்களுக்கு அவ்வளவு சந்தோஷ்ம். அவங்க சந்தோஷம்தானே நம்மோடது.''

ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தமிழரசி, தஞ்சாவூர்

சீர் பற்றி தமிழரசி

''அவர் கருவூலத்திலேயும், நான் தமிழாசிரியராவும் இருந்ததால, எங்க ரிட்டையர்மென்டுக்கு முன்னாடியே பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க பிளான் பண்ணினோம். என் மகளுக்கு 75 பவுன் நகை போட்டோம். 10 பட்டுப்புடவை, பைக், சீர்வரிசை எல்லாம் செய்ஞ்சு கொடுத்தோம். இதெல்லாம் மனசார ஆசைப்பட்டுதான் கொடுத்தோம். மாப்பிள்ளை வீட்டுல உங்க பொண்ணுக்கு செய்றதை செய்யுங்கனு சொன்னாங்க.''

கோவையைச் சேர்ந்த தேவகி

அம்மாக்களின் சீர் பற்றி தேவகி

'' எங்க பொண்ணோட திருமணத்துக்கு 25 லட்சம் வரை செலவானது. மகளுக்கு சீதனமாக 70 பவுன் தங்கமும், 3 லட்சம் பணமும் தந்து மகிழ்ந்தோம். திருமணத்துக்கு இரண்டு பட்டு புடவைகளும், மற்ற விருந்து நிகழ்வுகளுக்குச் செல்ல 10 டிசைனர் சேலைகளும் எடுத்திருந்தோம். அதெல்லாம் எங்க பொண்ணு ஆசைப்பட்டு கேட்டதுதான். புகுந்த வீட்டுல அவ மனசு சந்தோஷமா இருந்தாதான பெத்தவங்க நாங்க சந்தோஷமா இருக்க முடியும்."

விகடன் டீம்


டிரெண்டிங் @ விகடன்