Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘கத்தி’ விஜய் மாதிரி சென்னை சாலைகளுக்கு கீழ குனிஞ்சு பாத்தா..! #ChennaiUnderground

2012 என்ற ஹாலிவுட் படத்துல இப்படி ஒரு காட்சி வரும்... லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துல பூகம்பம் வந்திடும். ஹீரோ தன்னோட குடும்பத்த அந்தப் பெரிய லிமோசின் கார்ல காப்பாத்திக் கூட்டிட்டுப் போகும் போது, அவங்களுக்கு முன்னாடி ரெண்டு பாட்டிங்க மெதுவா கார ஓட்டிட்டுப் போவாங்க. ஹீரோ பின்னாடியிருந்து ஹார்ன் அடிக்க, 

" ஹே... அறுபது கிலோமீட்டர் வேகத்துக்கு மேலே போகாதப்பா... அது தான் டிராபிக் ரூல்..." அப்படின்னு அந்த தொப்பி போட்ட பாட்டிக்கிட்ட, தொப்பி போடாத அந்தப் பாட்டி சொல்ல... முன்னாடி திடீர்னு ரோடு பொளக்கும். அதுல அப்படியே போய் மோதி நின்னுடும் அந்தக் கார். 

சென்னை மெட்ரோவுக்கும் 2012 படத்துக்கும் சம்பந்தம்

அது மாதிரியான ஒரு காட்சி, ஒரு சின்ன சம்பவம் நம்ம சென்னையிலயும் சமீபத்துல நடந்தது. அண்ணாசாலையில போயிட்டிருந்த ஒரு பஸ்சும், காரும் திடீர்னு ஏற்பட்ட அந்தக் குழியில போய் குத்தி நின்னுச்சு. 2012 படத்தையும், இதையும் தொடர்புப்படுத்தி பதற்றப்பட வைக்கணும்ங்குற நோக்கமெல்லாம் இல்ல... சும்மா ஒரு எடுத்துக்காட்டுக்குத் தான் அத சொன்னேன். இதையே இன்னும் லோக்கலா, மெட்ரோ ரயில் ஆரம்பிச்சதுலருந்து ரோடு உடைவது, விரிசல் விடுவது, மண் கொப்பளிப்பது எனத் தொடரும் சம்பவங்களை "சந்திரமுகி" வடிவேலு ஸ்டைல்ல... 

"எல்லா ரோடும் திடீர் திடீர்னு உடையுதா... சாயுதா... பொளக்குதா... அப்பருந்து நம்ம கோபாலு இல்ல கோபாலு... 4 மணிக்கே எஸ்கேப் ஆயிடுறான்னா... " என்றும் கூட சொல்லலாம் தான். ஏன்னா, இந்த சமபவத்துக்கு அப்புறம், ரோடு உடைஞ்ச இடத்துல பெரிய இரும்பு மூடியக் கொண்டு வந்து போட்டிருக்காங்க. அதுக்கு முன்னாடி வரைக்கும் படு வேகமா வண்டி ஓட்டிட்டு வரும் சென்னை இளைஞர் பட்டாளம் கூட... அப்படியே கியர் டவுன் பண்ணி மெதுவா, பதுசா அதத் தாண்டி போவாங்க. சில கார்காரங்களப் பார்த்தா அவங்க முகத்துல ஒரு மரண பயம் தெரியும். 

சென்னை மெட்ரோவால் சாலை உடைந்தது

சரி... விஷயம் என்னன்னா... வழக்கமா ரோட்டுக்கு மேலத்தான் டிராபிக், நெருக்கடின்னு இருக்கும். இப்போ சென்னை ரோடுகளுக்கும் கீழயும் ஒரே பரபரப்பா இருக்கு. சென்னையின் சாலைகளுக்கு அடியில் என்ன இருக்குங்குறதப் பார்க்கலாம்ன்னு ஒரு ஐடியா... நீங்களும் ஒரு  " டீனேஜ் மியூடன்ட் நிஞ்ஜா டர்டுலா" ( Teenage Mutant Ninja Turtle ) மாறி இதப் பார்க்கலாமே...

 "சூனா பானா" மெட்ரோ : 

இன்னிக்கு தேதியில சென்னை சாலைகளுக்கு கீழ அதிகப்படியான "அண்டர் கிரவுண்ட் அட்ராசிட்டி" செய்திட்டிருக்குறது நம்ம "சூனா பானா "மெட்ரோ தான். சென்னை மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட்டோட மொத்த தொலைவு 45 கிமீ. அதுல 24 கிமீ தூரத்திற்கு சப்வே டனல் அமைக்கப்பட்டு வருது. இந்த வழிய இரண்டுப் பகுதிகளா பிரிச்சிருக்காங்க. பகுதி 1 - வண்ணாரப்பேட்டை டூ சைதாப்பேட்டை ( 14.3 கிமீ). பகுதி - 2 சென்ட்ரல் டூ அண்ணா நகர் 2வது அவென்யூ ( 9.7 கிமீ ).

சப்வே டனலப் பொறுத்தவரைக்கும், ஒரு டிராக், அதுல வரும் மெட்ரோ ரயில் அவ்வளவுக்குத் தான் அங்க மொத்த இடமே. அத மீறி ஒரு ஆள் நிக்குற அளவுக்குக் கூட இடம் கிடையாது. உலகம் முழுக்கவே சுரங்க ரயில் பாதைகள் அப்படி அமைக்கப்படுறது தான் வழக்கம். அதனால, தண்டாவளம் ஓரத்துல நின்னு டாட்டா காட்றது, அவசரத்துக்கு தண்டவாளம் பக்கம் ஒதுங்குறது எல்லாம் நடக்காத காரியம். பல ஹாலிவுட் படங்களப் பார்த்து பாதிக்கப்பட்டிருக்கும் நம் தமிழக மக்களுக்கு, சப்வேக்குள்ளப் போகும்போது கண்டிப்பா பயம் வரும். பயணிகளின் பயத்தைப் போக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், ஒவ்வொரு 250மீ தூரத்திலும் " அவசர வழி" ( Emergency Exits) வைக்கப்பட்டிருக்கு. முழுசா இயங்கத் தொடங்கியதும் கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் வந்து, போகும்.

சென்னை மெட்ரோ பாதாள வழி

மெட்ரோ ரயிலோட ஒரு பெட்டியில 1200 பேர் வரை ஏறலாம். அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம், மெட்ரோ ரயில் முன்னாடிப் போய் நின்னு தற்கொலையெல்லாம் செய்யக் கூடாது... செய்யவும் முடியாது. ஏன்னா, சரியா ரயில் வந்து நின்னதுக்கு அப்புறம் தான், ஸ்டேஷனோட கண்ணாடிக் கதவுகள் திறக்கும். அது திறந்ததும், பிளாட்பார்ம்க்கு வந்து ரயில் ஏறலாம். ரயில் கிளம்பியதும், மீண்டும் அந்தக் கண்ணாடிக் கதவுகள் மூடிக் கொள்ளும். தற்கொலைகளைத் தடுக்கவே இந்த வசதியை நிறுவியதாக மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் குறிப்புகள்ல சொல்லப்பட்டிருக்கு.

"சென்னைப் போன்ற ஒரு ஊருக்கு மெட்ரோ திட்டமே அவசியமில்லாதது. இருக்குற டிராபிக்க சீர் செய்தாலே போதும் . அதைச் செய்ய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காம, சும்மா புதுபுது திட்டங்கள கொண்டு வர்றது அவசியமற்றது. அதுமட்டுமில்லாம, சரியான ஆராய்ச்சிகளையும், முறையான தொழில்நுட்பங்களையும் மெட்ரோ நிறுவனம் கடைபிடிக்கலை. கடற்கரையிலருந்து 2 கிமீக்கும் கம்மியான தூரத்தில் இருக்கும் அண்ணா சாலையோட மணல் அவ்வளவு உறுதியானது கிடையாது. இதனாலத் தான் ஆங்காங்கே ரோடுகள் உடைவதும், விரிசல் விடுவதும் ஏற்படுது..." என முன்னாள் ஐ.ஏ. எஸ். அதிகாரி தேவசகாயம் சொல்லியிருக்கார். அவர் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்க மாதிரிதான் தெரியுது... 

"பவர் ஸ்டார் " பவர் கேபிள்:

நம்ம சென்னை சாலைகள்ல தொங்கிட்டிருக்கும் கரண்ட் வயர்களால மட்டும் கடந்த வருடம் 15 பேர் இறந்து போயிருக்காங்க. இப்படி அங்கங்க தொங்கிட்டிருக்குற வயர்கள மொத்தமா , கீழே கொண்டு போகணும்ணா அதுக்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் கிமீ தூரம் வயர்களப் பதிக்கணும். இப்போதைக்கு சென்னையோட பிரதான ஏரியாக்கள்ல 4,684 கிமீ தூரத்திற்கு பவர் கேபிள்கள் அமைக்கப்பட்டிருக்கு. மேலும், மாதவரம், பெருங்குடி, ஆலந்தூர், அமபத்தூர், கொளத்தூர் போன்ற ஏரியாக்கள்ல 2,500 கோடி ரூபாய் செலவுல இப்போ புதுசா கரண்ட் வயர்கள் பதிக்கப்பட இருக்கு. மொத்த சென்னைக்கும் இதைக் கொண்டு வர மத்திய அரசுகிட்ட 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கு தமிழக அரசு. (இன்னிக்கு இருக்குற நிலைமைக்கு அது கிடைக்குமா, கிடைக்காதா என்கிற விஷயத்த உங்க முடிவுக்கே விட்டிடுறேன்...)

"கடந்த வருடம் வர்தா புயல் வந்தபோது  சென்னையின் 30% பகுதிகளுக்கு அன்றைய இரவு 8 மணிக்கு முன்னாடியே கரண்ட் கனெக்‌ஷன் திரும்பக் கொடுக்கப்பட்டது. அதுக்கு காரணம், கரண்ட் வயர்கள் பூமிக்கு கீழே பதிக்கப்பட்டது தான். ஆனால், அதே சமயத்துல விசாகப்பட்டினத்துல கரண்ட் கொடுக்க அவங்களுக்கு 10 நாட்களானது ..." என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி சட்டமன்றத்துல தலைகுனிந்து, மார்தட்டினார் தமிழ்நாட்டோட அரசியல் "பவர் ஸ்டார்" ( அதாங்க, மின்சாரத்துறை அமைச்சர்...)  பி. தங்கமணி. 

ஃபைபர் ஆப்டிக் கேபிள்:

ரொம்ப ஆழத்துல எல்லாம் இல்ல... சும்மா ஒரு 5 அடிக்குள்ள பதிக்கப்பட்டிருக்கு இந்த ஃபைபர் ஆப்டிக் கேபிள். சென்னை மக்களுக்கான இண்டெர்நெட், டிவி கேபிள் எல்லாம் இதுலருந்து தான் கிடைக்குது. ஒரு கிலோ மீட்டர் தூரம் இதைப் பதிக்கறதுக்கு, வருஷத்துக்கு  கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய "ட்ராக் ரென்ட்" ( Track Rent ) ஆக வசூலிக்குது சென்னை மாநகராட்சி. 


மோதிரம் மாற்ற முடியாத "மெட்ரோ வாட்டர்" பைப்லைன்:

அறிமுகமே தேவையில்ல... கத்தி படத்துல சென்னைக்கு வர்ற தண்ணிய தடுக்க, விஜய் ஒரு டனல்ல, சமந்தா ஒரு டனல்ல உட்கார்ந்திருப்பாங்கள்ல அது தான், அதே தான். சென்னைய சுற்றி 4,500 கிமீ தூரத்துக்கு அந்த டனல் அமைக்கப்பட்டிருக்கு . இந்த பைப்புகள் எல்லாமே 30 வருடங்களுக்கு முன்னாடி பதிக்கப்பட்டது. மொத்தமும் துருப்பிடிச்சு மோசமான நிலையில இருக்கு. கார்ப்பரேஷன் தண்ணி கேவலமா இருக்கு, சாக்கடைத் தண்ணி குடிக்குற தண்ணியில கலந்திடுதுன்னு நாம புலம்பற பல விஷயங்களுக்கு, இந்தப் பழைய பைப் லைனும் ஒரு முக்கியக் காரணம்.

சென்னை சாலைகளுக்கு கீழே

இறுதியா, நம் அரசியல்வாதிகளோட கடைக் கண் பார்வை கிடைச்சதால இப்போ 310 கிமீ தூரத்திற்கான பைப் லைனை 116 கோடி ரூபாய் செலவில் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டிருக்கு. மாற்றக்கூடிய இந்த டக்டைல் இரும்பு பைப்களின் ( Ductile Iron Pipes) ஆயுள் குறைந்தபட்சம் 25 வருடங்களாக இருக்கும்ன்னு சொல்லப்படுது. அத மாத்தறதுக்கு முன்னாடி, டனல்ல போய் உட்கார்ந்து மோதிரம் மாட்டி நிச்சயம் பண்ணலாம்னு நினைச்சீங்க... அவ்வளவு தான். ( கத்தி படம் பார்க்காதவர்களுக்கு - இது அந்தப் படத்தில் வரும் ஒரு மாஸ் ரொமான்ஸ் சீன் ) 

சென்னை சாலைகளுக்கு கீழே

இறுதியா, நம்முடைய "மியூடன்ட் டர்டில்" பயணத்தில நாம பார்க்கறது பாதளச் சாக்கடை. எழுத்தின் வழி உங்களை அங்க கொண்டு போகலாம்ன்னு நினைச்சாக் கூட மனசு வர மாட்டேங்குது. அது அவ்வளவு மோசமான கழிவுகள கொண்டிருக்கு. எழுத்தின் வழியாக் கூட அதுகிட்ட போக முடியாத நிலையில, எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாம, இன்னிக்கு எத்தனையோ துப்புறவு பணியாளர்கள் அதுல இறங்கி வேலை செய்துக்கிட்டுத் தான் இருக்காங்க. சில சமயங்கள்ல செத்தும் போறாங்க. பூமிக்கு மேல மட்டுமல்ல, பூமிக்கு கீழேயும் கூட மனுஷன் எல்லாத்தையும் கெடுத்து தான் வச்சிருக்கான்...


என்னமோ போடா மாதவா... 

- இரா. கலைச் செல்வன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close