வெளியிடப்பட்ட நேரம்: 08:16 (14/04/2017)

கடைசி தொடர்பு:08:15 (14/04/2017)

வீட்டுப் பிராணிகளுக்கு கோடையில் தயிர்சாதம் கொடுங்கள் ப்ளீஸ்..!

கோடையில் வீட்டுப் பிராணிகளை காக்க வேண்டும்

வீட்டை விட்டுக் கிளம்பினால் ஐந்து நிமிடம் வெயிலில் நிற்க முடிவதில்லை. அந்த அளவிற்குக் கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. கோடையில் நம்மை நாம் எப்படி கவனித்துக் கொள்கிறோமோ அதுபோல, உங்கள் வீட்டிலிருக்கும் செல்லப்பிராணிகளையும் பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும். நம்மை விட அவற்றுக்குத்தான் கோடை அதிக துன்பத்தை தரும். வெயிலானது சில பிராணிகளுக்கு நன்மையைக் கொடுக்கலாம். ஆனால் அதிக வெயிலில் அலையும் பிராணிகள் பாதிக்கப்படுகின்றன. இதை மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது, நன்றாக உற்றுக் கவனிக்க வேண்டும். வெப்பநிலை அதிகரிக்கும்போது அவற்றுக்குச் சாப்பிட என்ன கொடுக்கலாம்... நோயினால் பாதிக்கப்பட்டால் எப்படி மீட்க வேண்டும் என அனைத்தையும் பிராணிகளின் உரிமையாளர் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். கோடையில் செல்ல பிராணிகளுக்குக் குளிர்ச்சியான உணவைக் கொடுக்கலாம். ஆனால் குளிர்ச்சியாக கொடுக்கப்படும் உணவானது பிராணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், சத்துக்களைத் தருவதாக இருக்க வேண்டும்.

நாய்கள்

கோடையில் நோயின் தாக்கம் தெரிந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. எந்த நேரத்திலும் மகிழ்ச்சியாக இருக்கும் பிராணிகள் சோர்வடைய ஆரம்பிக்கும். அதன் ஆரம்பக்கட்டத்திலேயே கவனித்து மருத்துவரை அணுகி பிராணிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். தர்பூசணி, மோர் மற்றும் இளநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களையே கொடுப்பது, செல்லப்பிராணிகளை வெப்பம் தாக்காமல் காக்கும். மேலும் தயிரை உணவுடன் கலந்து கொடுப்பதால் பிராணிகள் உடல்நலம் மிளிரும் மற்றும் நோய்த்தாக்குதலை தடுக்கும். இதற்கு அதிலுள்ள பாக்டீரியாக்கள்தான் காரணம். நாய்களுக்குத் தயிரை இறைச்சியுடன் கலந்து கொடுக்கலாம். கோடையில் பிராணிகளின் முடிகளை வெட்டிவிடுவது நல்லது. கோடையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இது உதவும். இந்த முடி குறைப்பு மருத்துவரின் ஆலோசனைப்படியே மேற்கொள்ள வேண்டும். முடிகளை அதிகமாகக் குறைத்து விடக்கூடாது. தினமும் ஒருவேளைக் குளிர்ந்த நீரில் குளிக்க வைப்பது நல்லது. அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக குளிக்க வைக்க வேண்டும். பிராணிகளுக்கு அதிகமாகச் செலவழிக்க முடிந்தால் நீர்த்தேக்கத்திற்கோ அல்லது குளிர்பிரதேசத்திற்கோ அழைத்துச் செல்ல வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு குடிக்கக் கொடுக்கும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்த வேண்டும். அதற்குத் தண்ணீர் கொடுக்கும் பாத்திரத்தில் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில், நீங்கள் வெளியே சென்று வீடு திரும்ப தாமதமாகி விட்டால் தண்ணீர் இல்லாமல் பிராணிகள் வெப்பத்தால் பாதிக்கப்படும். இதுதவிர எப்போதும் துறு, துறு என வீடு மற்றும் வெளியே சென்று வருகின்றன.

தயிர் சாதம்

பிராணிகள் நல மருத்துவர்கள் நேரடியாக விழும் உச்சி வெயிலில் பிராணிகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதையே பெரும்பாலும் பரிந்துரைக்கிறார்கள். பக்கவாதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, அதிக வெப்பம் காரணமாக நாய்களுக்கும் வெப்ப பக்கவாதம் வரலாம். எனவே பிராணிகளை காற்றோட்டமான இடங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. அதற்குப் பிராணிகள் தங்கும் இடத்தைக் குளிர்ச்சியாக மாற்றுவது பிராணிகளுக்கு அதிக நன்மை தரும். நாட்டுவகைப் பூனைகள் ஓரளவு வெயிலைத் தாங்கக் கூடிய தன்மை உடையது. ஆனால் வெயிலை எவ்வளவு தாங்குகிறதோ அதேபோல அவை தங்குமிடம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். பிராணிகள் தண்ணீர் உட்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

- துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்