வெளியிடப்பட்ட நேரம்: 19:41 (13/04/2017)

கடைசி தொடர்பு:19:50 (13/04/2017)

எம்.எஸ்.விஸ்வநாதனை தூங்கவிடாமல் செய்த பட்டுக்கோட்டையாரின் வரிகள் இவைதான்!

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

சமூகத்தை, அரசியலை, தத்துவத்தை ஏழைகளின் மொழியில் பாடல்களாய் விதைத்த அலங்காரமற்ற அற்புதன்,  மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று. 1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ‘செங்கபடுத்தான்காடு’ என்கிற கிராமத்தில் பிறந்து, தன் 29-வது வயதில் இறந்துபோன பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சொல்லாத தத்துவம் இல்லை. பாடாத அறிவுரை இல்லை. எழுதாத காதல் இல்லை. அவர் இல்லாமல் தமிழ் பாடல்களே இல்லை.

“சின்னப்பயலே சின்னப்பயலே சேதிகேளடா.”

“காடு வௌஞ்சென்ன மச்சான்

நமக்கு கையும் காலும்தானே மிச்சம்”

“வசதி படைச்சவன் தரமாட்டான்

வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"

என்று எழுதப்படிக்கத் தெரியாத தமிழ்நாட்டின் கடைகோடி தமிழனுக்கும்  பொதுவுடைமை  போதித்த பட்டுக்கோட்டை  படித்ததோ இரண்டாம்வகுப்பு. வறுமையின் காரணமாக விவசாயம் பார்த்திருக்கிறார், மாடுமேய்த்திருக்கிறார், மீன் விற்றிருக்கிறார் இப்படி அவர் செய்யாத தொழில்கள் இல்லை. கல்யாணசுந்தரத்தின் அப்பா பொதுவுடமை சிந்தனை கொண்டவர். பொதுவுடமை சிந்தனை நிறைந்த குடும்பத்தில் பிறந்து வறுமையில் வளர்ந்ததால் அவரால் தொழிலாளர்களின் வலியை, கோபத்தை, நியாயத்தை, மிக அழுத்தமாகப் பதிவு செய்ய முடிந்தது. ஆயிரமாயிரம் காலத்துக்கும் தேவையான சிந்தனைகளை  சினிமா பாடல்களின் மெட்டுக்குள் அடக்கிய அவரின் திறன் இன்றுவரை யாருக்கும் கை வரவில்லை  என்று அடித்துச் சொல்லலாம். எம்.ஜி.ஆர் ஏழைகளின் நாயகன் ஆனதற்கும் தமிழகத்தின் முதலமைச்சரானதற்கும் பட்டுக்கோட்டையின் பாடல்கள் மிகப்பெரிய காரணம். என்னுடைய நாற்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துடையது என்று எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார்.

பட்டுக்கோட்டை

சினிமாவுக்குள் நுழைவது இன்றுபோல் அன்று எளிதானது அல்ல. பட்டுக்கோட்டை சினிமா ஆசையில் சென்னை வந்து நாடகத்துக்குத்தான் முதன்முதலில் பாட்டெழுதினார். நாடகத்திலேயே அவர் பொதுவுடமை வேட்கை ஆரம்பமாகிவிட்டது.

“தேனாறு பாயுது

செங்கதிரும் சாயுது

ஆனால்,

மக்கள் வயிறு காயுது...”

என்ற பாடல் மூலம் பிரபலமானார். அதன்பிறகுதான் பாண்டிச்சேரியில் இருந்த பாரதிதாசனிடம் சிஷ்யனாகும் வாய்ப்பு பட்டுக்கோட்டையாருக்கு வாய்த்தது. எழுத்தில் ஆற்றல் பெற்றிருந்தாலும் பாரதிதாசனிடம் நேரடியாக தன் கவிதைகளை காட்ட பட்டுக்கோட்டையாருக்கு பயம். `அகல்யா' என்றபெயரில் எழுதிகாட்டியிருக்கிறார். கவிதைகளை படித்து பாரதிதாசன் பாராட்டிய பிறகே, அது தன் கவிதைகள் என்ற உண்மையைச் சொல்லியிருக்கிறார். இதுதான்  பாரதிதாசன்மேல் பட்டுக்கோட்டையார் கொண்டிருந்த பிரமிப்புக்கான அடையாளம்.

பட்டுக்கோட்டை சினிமாவுக்கு வந்த நேரத்தில் கண்ணதாசன், மருதகாசி, உடுமலை நாராயணன் போன்ற ஜாம்பவான்கள் திரைப்படப்பாடல்களில் கோலோச்சிக்கொண்டிருந்தனர்.  அந்த மலைகளுக்கு இடையில் மடுவாக நுழைந்த பட்டுக்கோட்டை, அடுத்த சில ஆண்டுகளில் அத்தனை ஜாம்பவான்களும் தன் நடையைப் பின்தொடரும் அளவுக்கு கூர்மையான வார்த்தைகளைக் கொண்டு பாடல் செய்தார். முதலாளிகளையும் அடிமைத் தனத்தையும் வார்த்தைகளால் குத்திக் கிழித்தார்.

சினிமா வாய்ப்புத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது பல இடங்களில் பட்டுக்கோட்டையை பார்க்காமலேயே விரட்டியடித்திருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவத்தால் கோபத்துக்குள்ளான பட்டுக்கோட்டை அந்த நிமிடத்தில் எழுதிய வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதனை பலநாட்கள் தூங்கவிடாமல் செய்திருக்கின்றன.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாசவலை படத்தின் பாடல் கம்போஸிங்கில் இருந்த சமயத்தில் அவரிடம் பாட்டெழுத வாய்ப்பு கேட்டு  சென்றிருக்கிறார் பட்டுக்கோட்டை.  `பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று ஒருத்தர் வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார்' என்று மேனேஜர் மூலம் எம்.எஸ்.விக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது, “நமக்கு நாள்கள் குறைவாகத்தான் இருக்கிறது. புது ஆட்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது. கண்ணதாசனையோ, மருதகாசியையோ எழுதச்சொல்லுங்க" என்று கோபமாக சொல்லி மேனேஜரை துரத்திவிட்டிருக்கிறார். அதே வேகத்தில் வந்து, "புது ஆட்களைப்பார்க்கும் எண்ணம் இப்போது இல்லையாம்"  என்று எம்.எஸ்.வி மேனேஜர் பட்டுக்கோட்டையாரிடம் சொல்ல...

“என்னைப்பார்க்க வேண்டாம். என் கவிதையை படிக்கச் சொல்லுங்கள்” என்று தன்னுடைய கவிதையை கொடுத்திருக்கிறார். மேனேஜரும் `இவன் புது டைப்பா இருப்பான் போலிருக்கே' என்று யோசித்துக்கொண்டு. எம்.எஸ்.வியிடம் போயிருக்கிறார். "அய்யா... நீங்கள் கவிஞனை பார்க்க வேணாடாமாம்.  அவரது கவிதையை படித்தால் போதுமாம்" என்று மேனேஜர் நீட்டிய தாளில்,

"குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்…

குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்…

தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்…

சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்..."

என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை படித்த எம்.எஸ்.வி நெகிழ்ந்து போயிருக்கிறார்.   அந்த சம்பவத்தைப் பற்றி பின்னாட்களில், “அன்றைய தினம் சாப்பிடக்கூட முடியவில்லை. பூஜை அறையிலேயே கிடந்தேன்.  விஸ்வநாதா... அதற்குள் என்னடா   அகந்தை.? நீ.. என்ன அவ்வளோ பெரிய ஆளா" என்று எனக்குள் நானே வருந்தினேன். எவ்வளவு பெரிய திறைமைசாலியை நாம் அலட்சியப்படுத்தியிருக்கிறோம் என்று அன்று முழுக்க  கடவுளிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டே இருந்தேன் ” என்று எம்.எஸ்.வி குறிப்பிட்டுள்ளார். அதன்பிறகு,  பட்டுக்கோட்டை எழுதிய ஒவ்வொரு பாட்டும்   இனிவரும் பல்லாயிரம் ஆண்டுக்கான பாடம்.

“முகத்தில் முகம் பார்க்கலாம்

விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்

இகத்தில் இருக்கும் இன்பம் எத்தனை ஆனாலும்

இருவர்க்கும் பொதுவாக்கலாம் ”

பட்டுக்கோட்டையின் இந்த வரிகளை வியந்து, `அடேயப்பா.. நான் மேடையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்... சட்டசபையில் பொதுவுடமைக் கேட்டிருக்கிறேன்... பள்ளியில் பொதுவுடமை கேட்டிருக்கிறேன்...  பள்ளியறையில் பொதுவுடமை சொன்ன ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான்'  என்று  ஒரு மேடையில் வைரமுத்து சிலாகித்தது நினைவுக்கு வருகிறது. ஆம், அவர் காதலில்கூட பொதுவுடை சிந்தனை நிறைந்திருந்தது என்பதன் வெளிப்பாடு அது.  அன்றைக்கு தனது ஒவ்வொரு பாடல்களிலும்  சமூக அவலத்தை எதிர்த்து எழுதிய பட்டுக்கோட்டையும்   பாடல் ஆசிரியர்தான். இன்றைக்கு மலிந்துகிடக்கும்  அவலங்களை  ஆராதித்து எழுதுகிறவர்களும் பாடல் ஆசிரியர்கள்தான் என்றால் சிரிப்புதான் வருகிறது.  

பட்டுக்கோட்டை அதற்கும் ஒரு பாடல் வைத்திருக்கிறார். 

"சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"

- எம்.புண்ணியமூர்த்தி


டிரெண்டிங் @ விகடன்