புத்தகங்கள் வாசிக்கும் விஷயத்தில் தமிழர்கள் இப்படித்தானாம்! #VikatanSurveyResults | How is the reading habit of tamils - Vikatan Survey Results

வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (16/04/2017)

கடைசி தொடர்பு:20:20 (17/04/2017)

புத்தகங்கள் வாசிக்கும் விஷயத்தில் தமிழர்கள் இப்படித்தானாம்! #VikatanSurveyResults

கணினி யுகத்திற்குப் பிறகு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்று குறைபட்டுக்கொள்வோர் உண்டு. செல்ஃபோன்கள் வந்தபிறகு இன்னும் அதிகமாக இந்தப் புகார்கள் எழுந்தன. சரி ‘வாசிக்கும் விஷயத்தில் நீங்கள் எப்படி?’ என்று #VikatanSurvey ஒன்று நம் தளத்தில் நடத்தினோம். முடிவுகள் இதோ; 


‘ஒருநாளைக்கு எத்தனை மணிநேரம் படிக்கச் செலவிடுவீர்கள்’ என்பது முதல் கேள்வி. 9.7% பேர் படிப்பதே இல்லையே என்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.  அதிகபட்சமாக 36.1% பேர் 1 முதல் 2 மணி நேரம் படிப்பதாகச் சொல்லியிருந்தனர். அந்தக் கேள்விக்கான ரிசல்ட் கீழே.

Vikatan Survey Results


செய்தியோ, கதைகளோ நீங்கள் வாசிக்கும் வடிவம் எது என்று கேட்டிருந்தோம். பெரும்பாலும் அலைபேசியில், சமயங்களில் அச்சில் என்ற ஆப்ஷனை அதிகபட்சமாக 41.4%பேர் தேர்வு செய்திருந்தனர். அதற்கு கொஞ்சம் பக்கத்திலேயே 32.7% பேர் அச்சில் மட்டும் படிப்போம் என்றார்கள். ரிசல்ட்...  

Vikatan Survey

கதை வடிவத்தில் இதுதான் என் பெஸ்ட் சாய்ஸ்’ என்று வாசகர்கள் எதைச் சொல்கிறார்கள் என்று கேட்டதற்கு ‘எதாருந்தாலும் சரிப்பா. படிக்க நாங்க ரெடி’ என்கிறார்கள் 53.6% பேர். வரவேற்கவேண்டிய விஷயமிது. அதற்கு அடுத்த இடத்தில் நாவல் இருக்கிறது. 

books reading


எந்த வகை உங்களுக்கு படிக்கப் பிடிக்கும்?’ என்ற கேள்வி, கதை வடிவத்தையும் தாண்டி  வேறு என்னென்ன வகைகள் வாசகர்களைக் கவரும் என்றறிய  கேட்கப்பட்டது. ஆனால் அதில் 44.9% பேர் கதையைத்தான் தேர்வு செய்திருந்தார்கள். அதற்கடுத்ததாக வாழ்க்கை வரலாறு உள்ளது. கதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, -இவை மூன்றும் அல்லாத-  வேறு வடிவங்கள் இதற்கெல்லாம் கீழே 3.3% பேர் மட்டுமே தேர்வு செய்யும் வகையாக கவிதை இருப்பது யோசிக்க வைத்தது.

வாசிப்பு

மொபைல் யுகத்தில், எல்லாரும் குட்டிக் குட்டி வீடியோக்களின் மூலமே பலவற்றைத் தெரிந்து கொள்கிறார்கள் போல என்று பரவலான பேச்சு உண்டு. ஆனால் ‘வாசிக்கும் நேரத்தை விட அதிகளவு Short Video-க்களை பார்ப்பதில் செலவிடத் துவங்கியிருக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு 67.5% பேர் ‘இல்லை’ என்றிருக்கிறார்கள். ஆக, வாசிப்புப் பழக்கத்தை அப்படியே வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

வாசிப்பு

'இவர் இப்போது இல்லையே!’ என்று நீங்கள் மிஸ் செய்கிற எழுத்தாளர்? - என்ற கேள்விக்கு பாரதியார், ஜெயகாந்தன், கல்கி, எம்.எஸ். உதயமூர்த்தி, கண்ணதாசன், தி. ஜானகிராமன் என்று பலரது பெயர்கள் இருந்தாலும் எழுத்தாளர் ‘சுஜாதா’வைத்தான் பெரும்பாலானோர் குறிப்பிட்டிருந்தனர். அதேபோல, சமீபத்தில் நீங்கள் தேடிப்படிக்கும் எழுத்தாளர் யார் என்ற கேள்விக்கும் ‘சுஜாதா’ என்பதே பலரது பதிலாக இருந்தது. அவருக்கடுத்ததாக பலரும் வாசகர்களின் சாய்ஸில் இருக்க எஸ்..ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரும் முன்னிலையில் இருந்தனர். 


       

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்