Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அறிவியலும் இயற்கையும் இணையும் புள்ளியில் ஒரு கொண்டாட்டம்... மிஸ் பண்ணாதீங்க! #EarthDay

" தண்ணி இது தான்... இது...இது தான்

  இது தான் தண்ணி, இது தான்...

   இந்த நொடி தான் தண்ணி..." 

கிடாரின் மெல்லிய கம்பிகளின் இசையின் பின்னணியில் அந்தப் பாடலைப்  பாடிக்கொண்டிருந்தார் அவர்.  காலை நேரம் பெசன்ட் நகர் கடற்கரை. 2 குட்டி மீன்களுக்கும், ஒரு தாத்தா ஆமைக்குமான ஒரு உரையாடல் அந்தப் பாடல். தண்ணீரற்ற உலகம் என்னவாகும் என்பதன் வலியை, குழந்தைகள் ரசிக்கும்படி கதையாக பாடலின் வழி பாடிக் கொண்டிருந்தார்கள் " குரங்கன்" எனும் தமிழ் ராக் பேண்ட் கலைஞர்கள். அடுத்த வாரம் சென்னையில் நடக்கவிருக்கும் மிக முக்கிய ஒரு நிகழ்வு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமாக நடந்தேறியது அந்த நிகழ்வு. 

சென்னையில் ஒரு இயற்கைக் கூடல்

"Earth Day" எனப்படும் " பூமி நாள்" ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22ம் தேதி உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. 1970யில் அமெரிக்காவில் வியட்நாம் போர் உச்சத்தில் இருக்கும் போது, இளைஞர்களின் தன்னெழுச்சியின் பயனாய் உருவாக்கபட்டது இந்த "பூமி நாள்". புரிந்துகொள்ள முடியாத பெரிய தத்துவப் பின்னணி எல்லாம் ஒன்றுமில்லை... நம்மைப் பேரன்போடு பார்த்துக் கொள்ளும் இந்த பூமியை, கொஞ்சம் இரக்கப் பார்வையோடு பார்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான நாள் தான் இது. 

இந்த வருடம் சென்னை திருவான்மியூரில் இருக்கும், " கலாஷேத்திரா"வில் " ரெசிப்ரோசிட்டி" ( Reciprocity ) என்ற பெயரில் ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதிகளில், பெரும் இயற்கைக் கூடல் நிகழ்வாக இது அரங்கேற உள்ளது.  இந்த இரண்டு நாட்களும் ஆறு முக்கியப் பகுதிகளைக் கொண்டு, இயற்கை குறித்த புரிதலை, இயற்கையுடனான ஓர் உரையாடலை, உறவாடலை நமக்கு வழங்க இருக்கின்றன. 
உணவுகளில் தொடங்கி உடைகள் வரை இயற்கைச் சார்ந்த பொருட்களின் விற்பனைக் கண்காட்சி நடைபெற உள்ளது. இரண்டு நாட்களின் மாலை வேளையிலும் பாடகர் கார்த்திக், பியானோ இசைக் கலைஞர் அனில் ஶ்ரீனிவாசன் போன்றோரின் இசைக் கச்சேரிகள் நடைபெற உள்ளன. 

சென்னையில் ஒரு இயற்கைக் கூடல்

குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை மாற்றும் "கேம்ஸ்" :

இந்த நிகழ்வில் இந்தியாவின் பல இயற்கை ஆர்வலர்கள் பங்கெடுத்து, பலவித உரையாடல்களையும், பயிற்சிகளையும் வழங்க இருக்கின்றனர். குழந்தைகளுக்கான பொம்மலாட்டப் பயிற்சியில் தொடங்கி, சிற்பங்கள் செய்வது, ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது போன்ற பல தளங்களில் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. 

குறிப்பாக, "ஃபூயா"  ( Fooya ) என்ற "கேம் - ஆப்"பின் மூலம் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை ஏற்படுத்தும் சில பயிற்சிகளும் அங்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த கேமிற்கு " ஃபுட் ஃபைட் " ( Food Fight ) என்று பெயர். ஃபார்ம்வில் போன்ற ஒரு கேம். நிறைய ஆரோக்கியமான உணவுகள் மற்றும் கெட்ட உணவுகள் பல இடங்களில் இருக்கும். சரியான உணவுகளை சாப்பிட்டு, ஒவ்வொருவரும் அந்தக் கேமின் ஹீரோ கதாபாத்திரத்தை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இந்த கேம் விளையாடும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பலமடங்கு முன்னேற்றம் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிகழ்வு  முழுக்கவே அறிவியலும், இயற்கையும் இணைந்தது தான். ராக் பாடல்கள் என்றாலே புரியாத ஆங்கிலத்தில், புரிந்துக் கொள்லவே முடியாத அர்த்தத்தில் உச்சஸ்தாயில் பாடுவது என்பதையே கேட்டுப் பழக்கப்பட்ட நமக்கு நிச்சயம் " குரங்கன் தமிழ் ராக் " பேண்டின் இசைக் கச்சேரியும் பெரும் அனுபவமாக இருக்கும். 

சென்னையில் ஒரு இயற்கைக் கூடல்

மக்களிடையே பிளாஸ்டிக் கவர்கள் உபயோகத்தைக் குறைக்கும் வகையில், ஐந்து பிளாஸ்டிக் கவர்களைக் கொடுத்து ஒரு துணிப்பையை வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்தையும் இதில் செயல்படுத்த இருக்கிறார்கள். இந்த நிகழ்வுகளில் பங்கெடுக்க ஏதொரு கட்டணமும் இல்லை என்பது மிக முக்கிய விஷயம். நம்மால் கயம்பட்டுப் போயிருக்கும் நாம் சார்ந்திருக்கும் இந்த பூமிக்கு, நம்மாலான முடிந்த வழிகளில் அதன் காயங்களை ஆற்ற ஏதும் செய்ய முடியுமா? என்ற கேள்வியின் விடைக்கான சிறு தொடக்கமாக இந்த நிகழ்வு இருக்கலாம். 

 - இரா. கலைச் செல்வன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement