Published:Updated:

வாழைப்பழத்தில் போதை மருந்து... குரங்கைப் பிடிக்க அரசின் அநியாயம்!

வாழைப்பழத்தில் போதை மருந்து...  குரங்கைப் பிடிக்க அரசின் அநியாயம்!
News
வாழைப்பழத்தில் போதை மருந்து... குரங்கைப் பிடிக்க அரசின் அநியாயம்!

வாழைப்பழத்தில் போதை மருந்து... குரங்கைப் பிடிக்க அரசின் அநியாயம்!

இது நடந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது. தருமபுரி பக்கம் ஹொகனேக்கல் நீர்வீழ்ச்சிக்குப் போய்க்கொண்டிருந்தேன். ஒரு சின்ன மலைப்பாதையைக் கடக்க வேண்டும். பாதையின் ஓரம் ஏகப்பட்ட குரங்குகள். பாதையைக் கடப்பவர்கள் எல்லாம் குரங்குகளுக்கு சிப்ஸ், பிஸ்கெட் போன்றவற்றைப் போட்டு தங்களின் தன்னலமற்ற சமூக சேவை மனப்பான்மையை பறைசாற்றிக் கொண்டிருந்தார்கள். மூன்று பேர் சேர்ந்த ஒரு இளைஞர் கூட்டம் , தங்கள் நிலை மறந்து, மரங்களின் இடையே மறைந்து உட்கார்ந்துக் கொண்டு டாஸ்மாக் சரக்கை அடித்துக் கொண்டிருந்தார்கள். காலியான ஒரு குவார்ட்டர் பாட்டிலை எடுத்து, அதில் கூல்டிரிங்க்ஸை நிரப்பினான் ஒருவன். 

" மச்சி... இப்ப பாரேன்..." என்று சொன்னபடியே மூடப்பட்ட அந்த பாட்டிலை குரங்குக் கூட்டத்தை நோக்கி உருட்டிவிட்டான். 

ஒன்றுக்கொன்று கத்திக் கொண்டு சண்டையிட்டு, கடைசியாக  அந்த பாட்டிலை ஒரு குரங்கு எடுத்தது. பாட்டில் மூடியிருப்பதைக் கண்டு சில நிமிடங்கள் யோசித்தது. பின்னர், சாலையின் ஓரம் இருந்த தடுப்புச் சுவரில் ஏறி, அதில் வைத்து பாட்டிலின் கழுத்துப் பகுதியை உடைத்தது. உடைத்தபோது கொட்டிய கூல்டிரிங்க்ஸ், ஒரு நீர்வீழ்ச்சிப் போல் அந்தச் சுவற்றில் ஒழுகியது. சில குரங்குகள் அதை நக்கி குடித்தன. அந்தக் குரங்கு, மிச்சமிருந்த  கூல்டிரிங்க்ஸை குடித்து முடித்தது. போதையிலிருந்த அந்தக் கூட்டம் அதைக் கண்டு அகம் மகிழ்ந்தது. நான் அதிர்ச்சியாகிப் போனேன்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமீபத்தில் படித்த ஒரு செய்தி இதை எனக்கு நினைவுப்படுத்தியது. டெல்லி அருகே குர்கானில் குரங்குகளின் தொல்லை அதிகப்படியாக இருந்ததால், வாழைப்பழத்தில் போதை மருந்துகளை செலுத்தி குரங்குகளுக்குக் கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டு மயங்கிய குரங்குகளை வண்டிகளில் போட்டு, ஆரவல்லி மலைப்பகுதிகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர் . பல மிருகவதை எதிர்ப்பாளர்கள் இதைக் கடுமையாக கண்டித்து வருகின்றனர். குர்கான் பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நாய் மற்றும் குரங்குக் கடிகளால் 8 ஆயிரம் நோயாளிகள் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. குரங்குக் கடிக்கான மாற்று மருந்தின் மார்க்கெட் விலை ரூ.350. அரசு மானியவிலையில் அதை ரூ.100க்கு வழங்குகிறது. இதனால் வருடத்திற்கு 15 லட்சம் ரூபாய் வரை சுகாதாரத் துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. 

இன்னும் கொஞ்சம் தேடலை விரிவுப்படுத்திய போது, குரங்குகளுக்கும் - மனிதர்களுக்குமான எதிர்கொள்ளல் எவ்வளவு பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது என்ற விஷயம் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. 

 - ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் அளவிற்கான விவசாயப் பயிர்கள் குரங்கு மற்றும் இன்னபிற விலங்குகள் சேதப்படுத்தப்படுகின்றன. 

- ஹிமாச்சலத்தில் குரங்குகளால் 2007 - 2012 வரையிலான காலகட்டத்தில் 2, 200 கோடி ரூபாய்க்கான விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன . 

- ஜம்முவின் 250 கிராமங்களில் வருடத்திற்கு 33 கோடி ரூபாய் அளவிற்கான விவசாயப் பொருட்கள் குரங்குகளால் சூறையாடப்படுகின்றன. 

-  பிஹாரில் செய்ன்பூர் மற்றும் சஹர்ஷா தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளின் தொழில் குரங்குகளால் பாதிக்கப்பட்டுள்ளன. 

- கர்நாடகத்தில் 5 கோடி ரூபாய் அளவிற்கான பயிர்கள் 2010ல், குரங்குகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 

- இந்தியா முழுக்க ஒரு நாளைக்கு 1,000 குரங்குத் தாக்குதல் சம்பவங்கள் பதியப்படுகின்றன. 

- இந்தியாவில் கிட்டத்தட்ட 20 மாநிலங்களில் குரங்குகள், விவசாயத்திற்குப் பெரும் பிரச்னையாக இருந்து வருகின்றன. 

- நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் வைஃபை வசதி ஏற்படுத்த " ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள்" மாட்டப்பட்டன. அந்த கேபிள்களைக் கடித்து குரங்குகள் சூறையாடியதால், பின்னர் கேபிளை பூமிக்கடியில் புதைத்தார்கள்

குரங்குகள் - மனிதர்கள் எதிர்கொள்ளல் பிரச்னை ஏன் ?

மனித இனத்துக்கு மிகவும் நெருக்கமான, நெருங்கியத் தொடர்பு கொண்ட ஒரு இனமாக குரங்குகளைச் சொல்ல முடியும். இயற்கையாகவே, சூழலுக்கேற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்வதில் குரங்குகள் மிக நேர்த்தியானவை. இந்தப் பிரச்னைகளுக்கான  முக்கிய காரணமாக முன்வைக்கப்படுவது " நகரமயமாக்கம்" தான். 

பொதுவாக ஒரு காட்டில் இருக்கும், குரங்குகளுக்கு தனக்கான உணவைத் தேடி எடுக்க 10லிருந்து, 14 மணி நேரகள் வரை ஆகும். ஆனால், ஒரு நகரத்தில் அது 10 நிமிடங்களிலேயே தனக்கான உணவைத் தேடிக்கொள்கின்றன. காட்டு வாழ்க்கை எப்போதுமே " தக்கன பிழைக்கும் " ( Survival of the Fittest ) தத்துவம் கொண்டது. காட்டிலிருக்கும் குரங்குக் குட்டிகளில் 80% மட்டுமே உயிர் பிழைத்து, தன் முழு ஆயுளைக் கழிக்கும். உணவின்மை அல்லது எதிரிகளுக்கு இரையாவது போன்ற காரணங்களால் இறக்க நேரிடும். ஆனால், நகரங்களில் இருக்கும் குரங்குகளுக்கு அது நடப்பதில்லை. அதன் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் பலமடங்கு கூடிக்கொண்டே போகிறது. 

காடுகளை அழித்து நகரங்களை உருவாக்குகிறோம். நகரங்களிலோ மரங்களுக்குப் பெரும் பஞ்சம். மரங்களில் தாவி ஓட வேண்டிய குரங்குகள், இன்று வீட்டு மொட்டை மாடிகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றன. நகரங்களில் இருந்து, காட்டை ஒட்டியப் பகுதிகளில் குரங்குகளைக் கொண்டு போய்விடுவதை அரசாங்கம் வழக்கமாக வைத்திருக்கிறது. ஆனால், அது முழுக்கவே முட்டாள்தனமானது. நகர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட இந்த குரங்குகளுக்கு காட்டு வாழ்க்கைக் கைகூடாது. காட்டில் விட்டாலும் கூட, சில நாட்களிலேயே மீண்டும் காட்டை ஒட்டியிருக்கும், கிராமங்களுக்கோ, நகரங்களுக்கோ வரத் தொடங்கிவிடும். 

இதுவரை என்ன செய்திருக்கிறது அரசு ?

குரங்குகள் - மனிதர் எதிர்கொள்ளலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் இதுவரை எதுவும் உருப்படியாக நடந்தபாடில்லை. 

- ஹிமாச்சலப் பிரதேசத்தில் 2007ம் ஆண்டு கிட்டத்தட்ட 500 குரங்குகளை கருணைக்கொலை செய்தார்கள். ஆனால், மிக விரைவிலேயே மீண்டும் நிறைய குரங்குகள் வர ஆரம்பித்துவிட்டன. 

- பல மாநிலங்களிலும் குரங்குகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்தார்கள். ஆனாலும், அதைத் தொடர்ந்து செய்யவில்லை. 

- அல்ட்ரா சோனிக் துப்பாகிகளைக் கொண்டு குரங்குகளை விரட்டும் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டு, தொடங்கப்பட்டது. ஆனால், ஒரு துப்பாக்கியின் விலை 20 ஆயிரம் ரூபாயாக இருந்ததால், அரசாங்கம் அதையும் கைவிட்டது.

- டெல்லி அரசு கிரே லங்கூர் ( Grey Languar ) எனப்படும் குரங்கு இனத்தைக் கொண்டு வந்து நகரங்களில் சுற்றும் குரங்குகளை விரட்ட வைத்தது. ஆனால், அதுவும் கைகொடுக்கவில்லை.

- தெலங்கானாவில் இரண்டு லட்சம் குரங்குகள் இருக்கின்றன. ஒவ்வொரு நகரத்திற்கும் வெளியே கூட்டாக மரங்களை நட்டு, சிறு காடுகளை உருவாக்கி குரங்குகளை அதில் விட வேண்டும் என்று உத்தரவிட்டார் முதல்வர் சந்திர சேகர ராவ். ஆனால், அதுவும் பெரியளவிலான மாற்றத்தைக் கொடுக்கவில்லை. 

- 1977ல் வரைக்குமமொவ்வொரு வருடமும் 12 ஆயிரம் குரங்குகள் ஆராய்ச்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, குரங்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என பல விவசாய கூட்டமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. 

என்ன செய்ய வேண்டும் நாம்?

முதலில் குரங்குகளின் உலகையும், தன்மையையும் புரிந்துக் கொள்ள வேண்டும். தற்போதிருக்கும் இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியப்படுகின்றன. 2000ம் வருடத்திற்கு முன்னர் வரை ஹாங்காங்கிலும் இந்தப் பிரச்னை பெரிய அளவிலிருந்தது. ஆனால், குரங்குகளுக்கு கருத்தடை செய்வது, கருணைக் கொலை ( Culling ) செய்வது, மனிதர்கள் குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு எதிராக மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள், குரங்குகளைப் போன்ற ஒலிகளை எழுப்பும் அகோஸ்டிக் கருவிகள் போன்ற தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை உபயோகப்படுத்துவதென, பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வந்ததால், இந்தப் பிரச்னைக்கான முழுமையான தீர்வை அவர்கள் கண்டார்கள்.

இஸ்ரேலில் விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம் செய்யத் தொடங்கியதும், குரங்குகளின் தொந்தரவுகள் குறையத் தொடங்கின. குரங்குகளுக்கு நீர் என்றால் பயம். இப்படியாக, குரங்குகளை முழுதாகப் புரிந்துக் கொண்டு எளிய வழிகளிலேயே இதற்கான தீர்வுகளை முன்னெடுக்கலாம். அதைவிடுத்து, வாழைப்பழத்தில் போதை மருந்தை செலுத்தி உணவளிப்பது என்பதெல்லாம் யாருக்கும், எந்தவித தீர்வையும் தரப்போவதில்லை. 

ராமர் கோவிலுக்காக அதிதீவிரமாகப் போராடும் பா.ஜ.க அரசு, ராமருக்கு உதவிய அனுமனையும் கொஞ்சம் கண்டு கொண்டால் தேவலாம்... 

- இரா. கலைச் செல்வன்.

- படங்கள் : தா. ஶ்ரீனிவாசன்.