Published:Updated:

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு!

பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய  தமிழ்நாடு!
பரதத்தில் கின்னஸ் சாதனை! லக்னோவை முந்திய தமிழ்நாடு!

இந்தியாவின் பாரம்பர்ய நடனங்களில் முக்கியமானது பரதநாட்டியம். புராண இதிகாச சம்பவங்களை மட்டுமல்லாமல், சரித்திரக் கதைகளையும் நடனத்தின் மூலம் வெளிப்படுத்தும் நளினம் பரத நாட்டியத்துக்கு உண்டு. இம்மண்ணில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை, பரிணாமம் பெற்று வெளிநாடுகள் வரை அழகுற விரிந்தது. தற்போது இந்தக் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில், இதற்கு முன் 2,100 பேர் நிகழ்த்திய பழைய சாதனையை,  4,535 பேர் சேர்ந்து முறியடித்து, புதிய 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தி அசத்தினர்.

ஆடவல்லான் இசையாலயம் மற்றும் லஷ்மன் ஸ்ருதி இணைந்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்ச்சியை நடத்தினர். உலகப் பொதுமறையான திருக்குறளின் முப்பது குறள்களை மையமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பாடலுக்கு, நாட்டியக் கலைஞர் அதிர்ஷ்ட பாலன் நடனம் அமைக்க; 4 ஆயிரத்து 535 பேர் 26 நிமிடம் நடனமாடி இந்தச் சாதனையை நிகழ்த்தினர். நாட்டியப் பேரரசி பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் முன்னிலையில் இந்தச் சாதனை நடைபெற்றது. இந்தச் சாதனைக்குப் பின்னால், 190 பரத நாட்டிய ஆசிரியர்களின் பயிற்சியும், உழைப்பும் இருந்ததுதான் இப்படி ஓர் அற்புத சாதனையை நிகழ்த்துவதற்கு சாத்தியமாக இருந்தது.

கின்னஸ் சாதனையை சாத்தியப்படுத்திய தருணங்கள் குறித்துப் பேசிய அதிர்ஷ்ட பாலன், "இந்த 'கின்னஸ் உலக சாதனை' என்னுடைய பத்து வருடக் கனவு. அது இப்போது நனவாகி உள்ளது. திண்டுக்கல்லில் நான் ஒரு சாதாரண பரதநாட்டிய ஆசிரியர். ஏதாவது சாதனை புரிய வேண்டும் என மனம் ஏங்கிக்கொண்டே இருந்தது. அந்தத் தருணங்களில்தான் கடந்த 2010-ம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது வருடத்தில், நாட்டியப்பேரரசி பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த ஆயிரத்தில் நானும் ஒருவன். அதையே முன் மாதிரியாக வைத்துக்கொண்டு, அதே நிகழ்வை பிரம்மாண்டப்படுத்தி உலக சாதனை புரிய நினைத்தேன். அதற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழகம் எங்கும் சுற்றிவந்தேன். தெரிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு தெரிந்தவர்கள் என்று நான் அலைந்து திரிந்த பயணத்தில், ஒவ்வொரு அறிமுகமாகத்தான் எனக்கு லஷ்மன் ஸ்ருதியும் பழக்கம் ஆனார்கள்.

நான் என்ன செய்யப்போகிறேன் என்பதைத் தெளிவாக விவரித்துச் சொன்னேன். கூடவே, தமிழ் மேல் உள்ள காதலால்.. பரதநாட்டியத்தில் இதுவரை யாரும் தொடாத திருக்குறள்களை நான் தொட நினைத்தேன். அதன்படி, அறத்துப்பாலில் ‛ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள், பொருட்பாலில் ‛கல்வி’ அதிகாரத்தில் உள்ள பத்து குறள்கள், காமத்துப்பால் ‛குறிப்பறிதல்’ அதிகாரத்தில் இருந்து பத்து குறள்கள் என முப்பது குறள்களைத் தேர்வு செய்தோம். அந்த முப்பது பாடலுக்கும், ஈஸ்வர் ஆனந்த் - கோகிலன் ஆகிய இரண்டு நண்பர்கள் மூலம் இசையமைத்தேன். அந்த இசையமைப்பில் நான் வெற்றியை நோக்கிச் செல்லும் வழி தெரிந்தது. இப்போது உங்களிடம் வந்து நிற்பதால் (லஷ்மன் ஸ்ருதி) நான் செல்லும் வழி சரி என்று தோன்றுகிறது என்றேன்.

அதன்பிறகுதான்.. இந்த நிகழ்ச்சியின் விளம்பரத்தை பிரம்மாண்டப்படுத்தி, அவர்களே விழாவுக்கான எல்லாவித ஏற்பாடுகளும் செய்ய தொடங்கினார்கள். நான் திறமையான 5 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டேன். அதன்படி தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் இருந்தும், பெங்களூர், மும்பை, புனே, டெல்லி எனப் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் வருகை தந்தனர். முக்கியமாக மலேசியாவில் இருந்து 8 கலைஞர்களும்.. ஆஸ்திரேலியா, இலங்கையில் இருந்து தலா ஒரு கலைஞரும் இந்த நிகழ்வில் பங்கேற்று அசத்தினர்.

இப்படியாக.. அனைத்துக் கலைஞர்களின் ஒத்துழைப்போடும், என்னுடைய மூன்று வருட அயராத உழைப்போடும் 'கின்னஸ் உலக சாதனை' புத்தகத்திலும், 'இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்'டிலும் எங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

சாதனைக்குக் காரணமான 4,535 பேருக்கும், ஆடவல்லான் இசையாலயம், லஷ்மன் ஸ்ருதி மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கி உள்ளோம். அதேபோல் சாதனையாளர்களை உருவாக்கிய 190 பரத நாட்டிய ஆசிரியர்களுக்கும் ஆடல் கலையரசன், கலையரசி என்ற பட்டங்களுடன் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்துள்ளோம். இந்தப் புதிய சாதனை என்னை இன்னும் உற்சாகப்படுத்தி உள்ளது. இனி புதிய சாதனைக்கு முயற்சிக்கும் ஒவ்வொரு கலைஞர்களுக்குப் பின்னாலும் நான் இருப்பேன்" என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் அதிர்ஷ்ட பாலன்.

'பரதம் ஐந்தாயிரம்' சாதனை நிகழ்ந்ததும், அடுத்த சில நிமிடங்களில் 'கின்னஸ் உலக சாதனை' நிகழ்த்தப்பட்டதை, அந்த அமைப்பின் அதிகாரியான சொப்னிங், அதிகாரபூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இன்று ஒரே இடத்தில் மிகப் பெரிய அளவில் நடனம் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன் லக்னோவில் 2,100 பேர் நிகழ்த்திய சாதனையை, இன்று நீங்கள் அனைவரும் சேர்ந்து முறியடித்துள்ளீர்கள். இதனால், இந்த பரத நாட்டிய நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்து, வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது" என்றார். 

- ரா.அருள் வளன் அரசு, படங்கள்: மீ.நிவேதன்