Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடலை மிட்டாய் விற்பவர் கற்றுக்கொடுத்த அனுபவப் பாடம்! #MorningMotivation

Local train - MorningMotivation

காலையிலிருந்து சென்னை மக்களை வேகாத வெயிலில் அலையவிட்டு விட்டு அத்தனை அமைதியாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது சூரியன். வேலை முடித்து வீட்டுக்கு கிளம்புபவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என அத்தனை கூட்டம் எழும்பூர் ரயில் நிலையத்தில். சுண்டல், வேர்க்கடலை, சமோசா விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. அத்துடன் புறநகர்  மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களின் பாட்டுச் சத்தமும் சேர்ந்து கொண்டு ரயில் நிலையமே திருவிழா திடல் போல காட்சியளித்தது. சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறி ஜன்னல் ஓரமாக இருக்கிறதா என நோட்டம் விட்டால் எல்லாவற்றிலும் ஆட்கள்  அமர்ந்திருந்தார்கள். சரி, 'ஏதாச்சும் ஒரு இடத்துல உட்காருவோம்' என நினைத்துக்கொண்டு, நடக்கும் பாதையை ஒட்டிய ஒரு இருக்கையில்  அமர்ந்து கொண்டேன். ரயில் சேத்துப்பட்டை தாண்டியிருந்தது. ஓர் அக்கா கூடை நிறைய ஆரஞ்சு பழங்களை வைத்துக் கொண்டு "அஞ்சு பழம் அம்பது ரூவா, வாங்கிக்கோ வாங்கிக்கோ" என கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார். இன்னோர் அண்ணன் "10 பிஸ்கட் 20 ரூபா சூடா இருக்கு வேணுமா சார்" என ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு குட்டி அலுமினிய வளையத்துக்குள் தன் உடலை நுழைத்து, அதிலிருந்து வெளியே வந்து உதவி கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. கதவு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பூ கட்டிக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். செய்தித்தாள்களை கீழே மடித்து போட்டு அதில் அமர்ந்து தங்களது அன்றாட நிகழ்வுகள் குறித்து பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள் சிலர். கல்லூரி இளைஞர்கள் சிலர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டு வந்தார்கள். 

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. யாருக்கும் நிற்ககூட இடமில்லாத நிலைமை. ரயில் மாம்பலம் நிலையத்தில் நின்று புதிதாக நிறைய பயணிகளை ஏற்றிக் கொண்டு  நகரும் பொழுதுதான் அந்த மனிதரை பார்த்தேன். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். ஒரு கையில் ஸ்டிக்குடன், வண்ண வண்ணமாக நீளமான பேனாக்களையும் வைத்திருந்தார். இன்னொரு கையில் நிறைய வேர்க்கடலை பர்ஃபி பாக்கெட்டுகளையும் வைத்திருந்தார். தோளில் ஒரு பை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. சிகப்பு வண்ண உடையும் முகத்தில் மாஸ்க்கும் மாட்டியிருந்தால் அப்படியே சான்டாகிளாஸ் போலத்தான் இருந்திருப்பார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு "சுவீட்டான வேர்க்கடலை ரெண்டு பாக்கெட் பத்து சார் வாங்கிக்கங்க" எனச் சொல்லி ஒவ்வொரு அடியாக முன்னேறி வந்து கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை சந்தோஷம், வழக்கமாக அந்த ரயிலில் பயணிக்கும் சிலர் அவரிடம் "என்னய்யா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போலையே.." என்று கேட்க "இன்னிக்குதான் என்னை நீ பாக்குறியா? புதுசா கேக்குற? நாம எப்பவுமே ஹாப்பி தான்யா!" -  அந்த குரல் வந்த பக்கம் திரும்பி அவர் பதில் சொல்ல அந்த இடமே கலகலப்பாகியது. ஒரு கடலை பாக்கெட்கூட விற்கவில்லை.

MorningMotivation

என் பக்கத்தில் வந்ததும் கையிலிருந்த பேனாக்களையும், வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் மொத்தமாக என் கையில் கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம்தான் எதுவுமே கேட்கவில்லையே நம் கையில் அத்தனையையும் கொடுக்கிறாரே என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தொண்டையை செருமிக் கொண்டு.

"சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சொல்ல எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தார்கள். அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்களோ இன்னும் உற்சாகமாகி "சைலன்ஸ் ப்ளீஸ்.. சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சத்தம்போட மொத்தப் பெட்டியும் அமைதியான நொடியில்...   

"ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான். என்ன அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்..." என சத்தம் போட்டு பாடி நிறுத்த அவர்கள் சிவாஜியோடு கோரஸ் பாடும் நண்பர்களைப் போல கோரஸ் போட்டார்கள்.

"உலகம் எந்தன் கைகளிலே.. உருளும் பணமும் பைகளிலே..." என்று பாடி தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லறைகளை ஆட்டிக் காண்பித்தபோது எங்கும் சிரிப்பலை எழுந்தது. 

"யோசிச்சுப் பார்த்தா நானே ராஜா..." எனப் பாடி கொஞ்சம் யோசித்துவிட்டு "இன்னிக்கு குரல் சரியில்லை மீதியை நாளைக்கு பாடுறேன்" எனச் சொல்லி என்னிடமிருந்த வேர்க்கடலை மிட்டாய் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருக்கையில் எல்லோரும் கை தட்ட ஆரம்பித்திருந்தோம். அவருடைய கையிலிருந்த வேர்க்கடலை மிட்டாய்கள் மளமளவென விற்க தொடங்கியிருந்தன. மீதமிருந்த பர்ஃபி பாக்கெட்டுகளை கையில் பிடித்துக் கொண்டு கதவருகில் நின்று கொண்டிருந்தவரிடம் நானும் இரண்டு பர்ஃபி பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். "ரொம்ப நல்லா பாடுனீங்க... உங்க குரல்ல அவ்ளோ சந்தோஷம். சூப்பர் சார்'னு சொல்ல.. அமைதியாக என் பக்கம் திரும்பி புன்னகைத்தவர் "மனசுல சந்தோஷம் இருந்தா, அது நம்ம வார்த்தைகள்லயும் வெளிப்படும் சார். அது மட்டுமில்லாம ஏற்கெனவே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனையோட போய்கிட்டு இருப்பாங்க. நாமளும் சோகமா மூஞ்ச வைச்சுக்கிட்டு பர்ஃபி வாங்கிக்கங்கன்னு போய் நின்னா எப்படி வாங்குவாங்க. அதான் நீங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு பாட்டை எடுத்துவிட்டேன். இதுவும் பிஸினஸ் ட்ரிக்ஸ்தான் சார்!" எனச் சொல்லிய பொழுது ரயில் குரோம்பேட்டையில் நின்றிருந்தது. வேகமாக ரயிலில் இருந்து இறங்கியவர் எதிரே பீச்சுக்கு போகும் ரயிலை பிடிக்க ஸ்டிக்கை கீழே தட்டி தட்டி நடந்து கொண்டிருந்தார்..!

Train vendors - MorningMotivation

நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா!? "யார் பேச்சையும் நின்று கவனிக்க நேரமே கிடைப்பதில்லை" எனப் புலம்பும் அதே நேரத்தில் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த பழைய மொக்கை மெசேஜை இன்னொரு குரூப்புக்கு ஃபார்வேர்ட் செய்து கொண்டிருப்போம். அல்லது, நம் நண்பர் "டிராவலிங் டூ ஊட்டி வித் மை ஃபேமிலி" என போட்ட ஸ்டேட்டஸுக்கு கமென்ட் போட்டுக் கொண்டிருப்போம். ஆனால், 'சூரியன்' படத்தில் கவுண்டமணி சொல்வது போல "நான் இங்கே ரொம்ப பிஸி" டையலாக்கைச் செல்லாதவர்கள் ரொம்பவே குறைவுதான். ஆயிரம் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளும் அறிவை ஒருவருடைய அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியும் எனச் சொல்வார்கள். அதே போலத்தான் கடலை மிட்டாய் விற்பவரும் வருடக்கணக்கில் எம்.பி.ஏ மாணவர்கள் படிக்கும் பிசினஸ் சூட்சுமத்தை எளிதாக சொல்லிவிட்டார் தானே!?  

- க. பாலாஜி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement