Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் உருளைக்கிழங்கா, முட்டையா, காபியா? #MorningMotivation #MisterK

‘அலுவலகத்திலிருந்து புறப்படும்போதே  அலுவலகப் பிரச்னைகளை அங்கேயே வைத்துவிட்டு, வீட்டுக்கு வா’ என்பான் மிஸ்டர் K. ஆனால் யார் கேட்கமுடிகிறது இந்தக் காலத்தில்? 

நானும், என் நண்பன் மிஸ்டர் K-யும் என் வீட்டில் அமர்ந்து ஐ.பி.எல். பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் ராஜா உள்ளே வந்தான். ராஜா, பக்கத்து ப்ளாட் இளைஞன். IT ஊழியன். ‘வேலை வேலைனு கொல்றாங்கண்ணா’ என்பான். 'அதுக்குதானே சம்பளம் வாங்கற?’ என்று கவுண்டர் கொடுப்பான் மிஸ்டர் K.

நேற்றைக்கும் அப்படித்தான் ஏதோ ஆஃபீஸ் புலம்பல்களோடு வந்திருந்தான். 9 மணிக்கு அவன் உள்ளே வரவும் கெய்ல் அவுட் ஆகவும் சரியாக இருந்தது. 

”பார்த்தியா.. எனக்கு ராசியே இல்லை” என்று புலம்பினான் என்னுடன் அமர்ந்திருந்த மிஸ்டர் K வைப் பார்த்து.

“ஏன் என்னாச்சு?” 

”காலைல  கொஞ்சம் பேங்க் வேலை, முடிச்சுட்டு ஆஃபீஸ் போனேன். மேனேஜர் என்னமோ அந்தத் திட்டு திட்றான்.”  

”இந்தா..” என்று மிஸ்டர் K ஒரு வாட்ஸப் கார்டைக் காட்டினான். 

மிஸ்டர் K

“அது சரிதான்.. ஆனா.. டெய்லி நான் 6 மணிக்கு மேல வேலை செஞ்சு, வேலையெல்லாம் முடிச்சுட்டுதான் வர்றேன். அதெல்லாம் மட்டும் பார்க்கலயா அந்தாளு?”

“இந்தா” - இப்போது இன்னொரு கார்ட்.

Mister K

“சரி.. எல்லாத்துக்கும் வாட்ஸப் கார்ட் வெச்சிருப்பீங்க போல . நான் நல்லாதான் வேலை செய்யறேன். எனக்கு கீழ இருக்கறவங்ககிட்ட கண்டிப்பா இருக்கேன். மேலதிகாரிகள்கிட்ட பணிவா இருக்கேன். ஆனாலும் ஒரு திருப்தியே இல்லைண்ணா” - என்றான் ராஜா. மிஸ்டர் K அவனை ஆதரவாகப் பார்த்தான். 

எழுந்தான். சமையலறைக்குச் சென்றான். கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வைத்து  3 பாத்திரங்களை அவற்றின் மீது வைத்தான். அவற்றில் நீரை ஊற்றினான். 

நானும், ராஜாவும் அவனைத் தொடர்ந்து வந்து அவன் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மிஸ்டர் K ஒன்றில் முட்டை ஒன்றைப் போட்டான். அடுத்ததில் உருளைக்கிழங்கு. மூன்றாவது பாத்திரத்தில் காபிக்கொட்டைகளைப் போட்டான். 

பிறகு அங்கிருந்தபடியே, ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டி.வியைப் பார்க்க ஆரம்பித்தான். ”ஸ்கோர் 200ஐத் தாண்டும் போல’ என்றான். 

Morning Motivation

“அண்ணா... நான் புலம்பிட்டிருக்கேன். நீங்க என்னமோ பண்ணிட்டிருக்கீங்க” என்றான் ராஜா. மிஸ்டர் K புன்னகைத்துவிட்டு, சிறிது நேரம் சென்றதும், அடுப்பிலிருந்து 3 பாத்திரங்களையும் இறக்கி, உருளைக்கிழங்கு, முட்டை இரண்டையும் ஒவ்வொரு கிண்ணத்தில் எடுத்து வைத்தான். 3 வது பாத்திரத்தில் இருந்த ப்ளாக் காபியை கப் ஒன்றில் ஊற்றினான்.

“ராஜா.. இது மூணையும் பாரு” என்றான்.

“உருளைக்கிழங்கு. மொதல்ல ரொம்ப கடினமான பொருளா இருந்தது. கொதிக்கற தண்ணீர்ல போட்டதும் மென்மையா மாறிடுச்சு. 

முட்டை, ஓடு கடினமா இருந்தது. உள்ள தண்ணியா இருந்தது. ஆனா தண்ணீர்ல கொதிச்சப்பறம் ஓடு, பிரிக்கற அளவுக்கு இலகாகவும், உள்ள தண்ணியா இருந்த கரு.. கெட்டியாவும் ஆகிடுச்சு”.

சொல்லிக்கொண்டே   கப்பில் இருந்த காபியை ராஜிடம் நீட்டினான். வாங்கிக் குடித்த அவன் முகத்தில் ஒரு ‘அப்பாடா’ ஃபீல். “சூடா இருக்கறதால.. நல்லா இருக்குண்ணா. கொஞ்சம் சர்க்கரையும் சேத்துட்டா இன்னும் நல்லா இருக்கும்” என்றான்.

”அதான். இதே காபிக்கொட்டைய கடிச்சுக்கோனு குடுத்திருந்தா சரின்னிருப்பியா?”

“என்ன தத்துவம்னு சொல்லிடு” என்றேன் நான் இடைமறித்து.

“அலுவலக சூழலோ, வாழ்க்கையோ ஒவ்வொரு காலகட்டத்துல வெறுமை வரும். செய்யற வேலைகள் எதிலயும் மாற்றம் இருக்காது. ஆனா வெறுமையும், ஒருவித பிடிப்பின்மையும் இருக்கும். அது நம்மளைக் கொதிநீர்ல போடற காலம்னு வெச்சுக்கலாம்.

நீங்க - உருளைக்கிழங்குபோல - ரொம்ப கடினமான ஆளா இருந்தா, அந்தக் கொதிநீர்க்காலம் உங்களை இலகுவா, மத்தவங்களுக்குப் பிடிச்சதா மாத்தற காலமா  இருக்கும். டக்னு உடைஞ்சா வீணாப்போற முட்டை மாதிரி, உள்ளுக்குள்ள மென்மையான ஆளா.. அல்லது  ரொம்ப வளைஞ்சு குடுத்து, இளிச்சவாய்த்தனமா இருந்தீங்கன்னா, அந்தக் காலம் உங்களை திடப்படுத்தும்.”

“நான் வேலைக்காகத்தானே எனக்குக் கீழ இருக்கறவங்ககிட்ட கடினமா நடந்துக்கறேன்?”

“யெஸ்.. நீ 3-வது டைப். காபிக்கொட்டை மாதிரி. அப்டி இருந்தா யாரும் ரசிக்க, ருசிக்க மாட்டாங்க. இந்தக் காலகட்டம் உன்னைக் கொதிக்கவெச்சு.. எல்லாருக்கும் பிடிச்ச காபியா மாத்திக்கொடுக்கும். இதைக் கடந்து வந்தே ஆகணும்!”

சிலநிமிடங்கள், காபியைக் குடித்து யோசித்துக்கொண்டிருந்தவன் கேட்டான் “அப்ப சர்க்கரை?”

“அது உன் புன்னகை” என்றான் மிஸ்டர் K. 

 
மிஸ்டர் K பகிர்ந்து கொண்ட அலுவலகப் புதுமொழிகளுக்கு இங்கே க்ளிக்கவும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement