உறவுகளில் பிரச்னையா..? அனுராக் பாலிசி உங்களுக்கு செட் ஆகுமானு பாருங்க! | Lessons to follow from Anurag Kashyap

வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (20/04/2017)

கடைசி தொடர்பு:10:02 (20/04/2017)

உறவுகளில் பிரச்னையா..? அனுராக் பாலிசி உங்களுக்கு செட் ஆகுமானு பாருங்க!

உறவுகளை சிக்கலாக்கிக் கொள்ளும் இடி அமீன்கள் கவனத்துக்கு... தோழர் அனுராக்கின் வாழ்க்கைப் பாடம்!

அனுராக் காஷ்யப்

பாலிவுட்டின் படா இயக்குநர் அனுராக் காஷ்யப்பை பலர் தெரிந்து வைத்திருப்பீர்கள். தெரியாதவர்களுக்காக சின்னதாய் ஒரு இன்ட்ரோ. 
பாலிவுட்டில் புதுஅலை சினிமாவைத் துவக்கி வைத்தவர் இவர். `ப்ளாக் ஃப்ரைடே', `நோ ஸ்மோக்கிங்', `தேவ்.டி', `கேங்ஸ் ஆஃப் வாஸெப்பூர்', 'அக்லி', `பாம்பே வெல்வெட்' என இவர் இயக்கிய படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை சொல்லல் பாணியைக் கொண்டவை. திரைமொழியில் மட்டுமல்லாமல் வாழும் நிஜ வாழ்க்கையிலும் வித்தியாசமான லைஃப் ஸ்டைலைக் கொண்டவர் இவர். 

Nomadic எனப்படும் நாடோடியைப்போல வாழ்வதைப் பெரிதும் விரும்புவார் இவர். தன் தோழியான ஆர்த்தி பஜாஜை 2003-ல் திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி இவரின் படங்களின் எடிட்டர். மிக நேர்த்தியான ஒத்த அலைவரிசை கொண்டவர். ஆனாலும், இவரின் ரிலீஸாக 'பாஞ்ச்' என்ற படம் தந்த மன உளைச்சலில் மதுப்பழக்கத்துக்கு உள்ளானார் அனுராக். இதனால் காதல் திருமண வாழ்வில் குழப்பங்கள். அடுத்த படமான `ப்ளாக் ஃப்ரைடே' படம் சென்சார் போர்டால் முடக்கப்பட்டது. காரணம் மும்பை குண்டுவெடிப்பை மையமாக வைத்து தத்ரூபமாக எடுக்கப்பட்ட அந்தப்படம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து இரண்டு படங்கள் முடக்கப்பட்டால் ஒரு க்ரியேட்டர் என்ன ஆவான்? ஆம். அதுதான் அனுராக்கிற்கும் நடந்தது. கடுமையான மன உளைச்சலில் சரக்கடிப்பதை தீர்வாகக் கொண்டார். மனைவி விவாகரத்து கேட்கவும், தர வேண்டிய சூழல். 2009-ல் இருவரும் பரஸ்பரம் பிரிந்தார்கள். அப்போது, அவர்களின் அன்புக்கு சாட்சியாக அழகான ஒரு பெண் குழந்தை இருந்தாள்.

பிறகு தன் சினிமா கேரியரில் கவனம் கொண்டார். ஆனாலும், பிரிந்து சென்ற மனைவியுடன் நல்ல நட்பை வளர்த்துக் கொண்டார். `குடும்பம் என்னும் அமைப்புக்குத்தான் அவர் சரிப்பட்டு வரவில்லை. ஆனால், ஒரு நல்ல நண்பனாக எனக்கு இப்போது வரை இருக்கிறார்' என்பதுதான் அவர் காதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் சொன்ன ஸ்டேட்மெண்ட். விவாகரத்து வாங்கிய பிறகு ரிலீஸான 'தேவ் டி' என்ற படத்தின் எடிட்டிங் எல்லாம் ஆர்த்தி பண்ணியதுதான். ஒரு நல்ல தோழியாக பார்த்துப்பார்த்து அந்த சினிமாவை அனுராக்கின் கனவுக்குத் தகுந்தாற்போல செதுக்கிக் கொடுத்தார். படம் அதிரிபுதிரி ஹிட். அதோடு அனுராக்கிற்கு கண்டங்கள் தாண்டியும் நல்ல பெயர்! 

இந்த நல்ல நட்பு மீண்டும் காதலாகத் துளிர்விடவில்லை. காரணம் ஆர்த்திக்கு கனவுகள் இருந்தன. அனுராக் அதற்கு நல்ல நண்பனாக மட்டும் தொடர்வது நலமென நினைத்தார். `தேவ் டி' படத்தில் நடித்த கல்கி கோச்லினைத் 2011-ல் திருமணம் செய்து கொண்டார் அனுராக். இதுவும் காதல் திருமணம் தான். ஆனால், இந்தக் காதல் திருமணம் 4 வருடங்கள் மட்டுமே நீடித்தது. எக்கச்சக்கப் புரிதலோடு ஆரம்பித்த இந்தக் காதலை இருவரின் பரபரப்பான லைஃப் ஸ்டைலே முடிவுக்குக் கொண்டு வந்தது.

அனுராக் காஷ்யப்

''இருவரும் அமர்ந்து பேசினோம். வெவ்வேறு கனவுகள், எதிர்பார்ப்புகள், நிறைவேறாத ஆசைகள் என நிறைய நெகட்டிவ் விஷயங்களோடு நாங்கள் இணைந்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. பரஸ்பரம் பிரிந்தோம்.'' என்கிறார் கல்கி. ஆனாலும், கல்கியிடம் அனுராக் பற்றி கருத்துக் கேட்டால் மெய் சிலிர்க்கிறார். கிட்டத்தட்ட ஆர்த்தி உதிர்த்த வார்த்தைகளை கிட்டத்தட்டசொல்கிறார். 
"அனுராக் அற்புதமான மனிதர். சுதந்திரமாக வாழும் எண்ணம் இருப்பதோடு, அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் கொடுப்பார். இந்த நான்கு வருட பந்தத்தில் அவர் ஒருநாளும் கடுமையாக நடந்து கொண்டதில்லை. ஆனால், பொறுப்பான குடும்பஸ்தனாக அவரால் இருக்க முடிந்ததில்லை. ரொமான்டிக்கான ஆள் இல்லை. மிக யதார்த்தமான மனநிலையைக் கொண்டவர். வாழ்க்கையைக் கொண்டாடும் மனிதர். சினிமாவைத்தவிர வேறு எதன் மீதும் அளவு கடந்த பிரியம் வைத்ததில்லை என்றாலும் அக்கறையோடு இருப்பார். இப்போதும் என் கேரியர் மீது அத்தனை அக்கறையாக விசாரிக்கிறார். நிறைய கதைகள் சொல்கிறார். உண்மையில் அவர் சிறந்த மனிதர்!" என்கிறார் கல்கி கோச்லின். 

அவரது 'அக்லி' என்ற சினிமாவின் கதையே தான் முன்பு முதல்  மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டதை மையமாக வைத்தே எழுதி இருந்தார். அதாவது திரைக்கதையை தன் மகளின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் நெகட்டிவ் டோனில்  உருவாக்கி இருந்தார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்தப் படத்தின் எடிட்டர் முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ். இப்போது கல்கி கோச்லினை மையமாக வைத்து ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்து கொண்டிருக்கிறார். 

இப்படி, பிரிந்து சென்ற மனைவிகளுக்கு நல்ல நண்பனாக இருப்பதெல்லாம் அனுராக் போன்ற கலைஞனால் தான் முடியும். காதலியோ, மனைவியோ பிரிந்து சென்றால் வாழ்க்கையே பாழானது போலக் கவலை கொள்ளாமல் அதிலிருந்து நாம் கற்றுக்கொண்டு மீண்டு வாழ்விலும் கனவிலும் வெற்றிபெறவேண்டும் என்பதே அனுராக் நமக்குச் சொல்ல விரும்பும் பாடம். 

- ஆர்.சரண்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்