லிப்ஸ்டிக் காதலிகளே... ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு லிப்ஸ்டிக் சாப்பிடுகிறீர்கள் தெரியுமா?

லிப்ஸ்டிக்

ன்னை அழகுப்படுத்திக்கொள்வதில் மனிதர்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். இது நல்ல விஷயம்தான். ஆனால், இன்றைய நவீன உலகில் ரசாயனம் கலந்த அழகுசாதனப் பொருள்களை அதிகமாகப் பயன்படுத்தும் பழக்கம் எங்கும் நிறைந்துள்ளது. அவற்றின் ஆபத்துகள் பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், அழகுப்படுத்திக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்து மீள விரும்புவதில்லை. அதில் ஒன்றுதான் லிப்ஸ்டிக்

பெண்களை வெகுவாக கவரும் இந்த லிப்ஸ்டிக்கில், கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் ஸ்லோபாய்சன் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. சமீபத்தில், கலிபோர்னியாவில் உள்ள 'பெர்க்லே ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்' (Berkeley School of Public Health) என்ற நிறுவனம் லிப்ஸ்டிக்கில் கலந்துள்ள கெமிக்கல்கள், அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் பற்றி ஆய்வுசெய்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வுக்காக 12 பெண்கள் அடங்கிய 14 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் லிப்ஸ்டிக், லிப் கிளாஸ்களின் பெயர்கள் பெறப்பட்டன. அவர்கள் 8 நிறுவனங்களின் லிப்ஸ்டிக் மற்றும் 24 நிறுவனங்களின் லிப் கிளாஸ்களைப் பயன்படுத்தி இருந்தனர். அவற்றை ஆய்வகத்தில் சோதனை செய்துபார்த்ததில், காட்மியம், குரோமியம், அலுமினியம் கலந்திருப்பது தெரிந்தது. மெக்னீசியம் உள்பட உடலுக்குத் தீங்கு செய்யும் டாக்சின்கள் உருவாவதும் கண்டறியப்பட்டது. 

இந்த லிப்ஸ்டிக் மற்றும் லிப் கிளாஸ்களை ஒவ்வொருவரும் ஒரு நாளில் 24 மில்லிகிராம் முதல் 84 மில்லிகிராம் வரை பயன்படுத்துகின்றனர். இவை எச்சில் வழியாக வயிற்றுக்குள் செல்கின்றன. கலர், மணம், ஒட்டும் தன்மைக்காகவும் பல்வேறு கெமிக்கல்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் பயன்படுத்தி இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் கலந்திருக்கும் பாரபின் மெழுகு, கிட்னி, நரம்பு சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதில் உள்ள குரோமியம், நுகரும்போது நுரையீரல் பாதிப்பை ஏற்படும் என எச்சரிக்கிறார்கள். 

நமது நாட்டிலும் ஏராளமான பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இவர்களுக்கும் இதே பாதிப்புகள் ஏற்படும். இதுகுறித்து பேசிய அழகியல் சிகிச்சை நிபுணர் ஹேமா, '‘லிப்ஸ்டிக்கில் ஒட்டும் தன்மைக்காக பாரபின் வேக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. வண்ணம் மற்றும் மணத்துக்காக குங்குமத்தில் கலக்கும் கார்மியம், துத்தநாகம், சல்பர் எனப் பல்வேறு கெமிக்கல்கள் கலக்கப்படுகிறது. மெட்டல் கலர் பினிசிங் கிடைக்க லெட் பெயின்ட்டிங் போடப்படுகிறது. இந்த பாரபின் வேக்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் செல்லும். நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சுவதற்கு ஒவ்வொரு விதமான வில்லைகள் வயிற்றில் இருக்கும். இந்த பாரபின் வேக்ஸ் வயிற்றில் படிய படிய ஒவ்வொரு விட்டமின் உறிஞ்சிகளும் பாதிக்கப்படும். இதனால், விட்டமின் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். எலும்புகளில் சத்துக்கள் குறையும். சீனாவின் அனைத்து தயாரிப்புகளிலும் இந்த லெட் பெயின்ட்டிங் இருக்கும். சீனத் தயாரிப்பு பொம்மைகளையே குழந்தைகளுக்கு வாங்கித் தர வேண்டாம் எனச் சொல்வது இதனால்தான். தொடர்ந்து குங்குமத்தை நெற்றியில் வைத்துக்கொள்ளும் பலருக்கும் அந்த இடமே கருப்பாக மாறியிருப்பதைக் காணலாம். அதுபோல தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதடுகள் பாதிக்கப்படும். சிலருக்குப் பல்லி எச்சம் எனப்படும் வைரல் இன்பெக்க்ஷன் உண்டாகும். அவர்கள் முத்தமிடும்போது மற்றவருக்கும் பாதிப்புகள் வரும். தோலில் சிறிய கொப்பளங்கள், அரிப்பு, வெடிப்பு போன்றவையும் லிப்ஸ்டிக் பயன்பட்டால் உண்டாகின்றன. விரைவிலேயே முதுமைத் தன்மையும் உண்டாக்குதிலும் லிப்ஸ்டிக்கின் பங்கு இருக்கிறது. எனவே, லிப்ஸ்டிக்கை தவிர்ப்பது மிகவும் நல்லது’' என்கிறார் அழுத்தமாக. 

ஆர். ஜெயலெட்சுமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!