அலுவலகத்தில் 'பவர் பாண்டி' ஆக உங்களுக்கு உதவும் 5 பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்! #Extensions | These 5 Extensions will help you Work Efficiently

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (21/04/2017)

கடைசி தொடர்பு:09:09 (21/04/2017)

அலுவலகத்தில் 'பவர் பாண்டி' ஆக உங்களுக்கு உதவும் 5 பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள்! #Extensions

டினமாக வேலை செய்வதை விட, ஸ்மார்ட்டாக வேலை செய்வதே மிக முக்கியம் என்பது டிஜிட்டல் யுகத்தின் தாரக மந்திரம். இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த 5 Extension-கள், அலுவலகத்தில் உங்கள் வேலையை ஸ்மார்ட்டாக செய்ய உதவுகின்றன. உங்கள் நேரத்தையும், உழைப்பையும் சிக்கனப்படுத்த இவை பெரிதும் உதவுகின்றன.

 

Noisli :

Noisli Extension

இரைச்சல் மிகுந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்கு, தங்களது வேலையில் கவனத்தை செலுத்துவதில் சிக்கல் இருக்கும். வேலைப்பளு காரணமாக சிலர் எந்நேரமும் ஒருவிதப் பதற்றத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கானது தான் இந்த Noisli எக்ஸ்டென்ஷன். இதில் காற்று, பறவைகளின் கீச்சு ஒலி போன்ற 16 வகையான இயற்கை சார்ந்த டெம்ப்ளேட் ஒலிகள் இருக்கும். அவற்றை நமக்குத் தேவையான விகிதத்தில் மாற்றி சேவ் செய்து வைத்துக்கொண்டால், தேவையான நேரத்தில் அவற்றை ப்ளே செய்து வேலையில் கவனம் செலுத்தலாம் என்கிறது இதை உருவாக்கிய நிறுவனம். முதல்முறை இதைப் பயன்படுத்தும்போது மட்டும் ஃபேஸ்புக் அல்லது கூகுள் அக்கவுன்ட் மூலமாக சைன் இன் செய்துகொள்ள வேண்டும்.
 

Grammarly :

Grammarly Extension

அவசரத்திலோ அல்லது கவனச்சிதறல் காரணமாகவோ மெயில் டைப் செய்யும்போது நம்மை அறியாமல் பிழை செய்ய நேரிடலாம். இலக்கணப் பிழையுடன் மெயில் அனுப்பி அதன் காரணமாக தர்மசங்கடத்துக்கு ஆளாகியிருப்போம். இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க இந்த Grammarly எக்ஸ்டென்ஷன் உதவுகிறது. இதை இன்ஸ்டால் செய்துவிட்டு சைன் இன் செய்துகொண்டால், அதன்பின் ப்ரெளசரில் எந்தத் தளத்தில் டைப் செய்தாலும் இதன் மூலம் எளிதாக பிழைகளை திருத்திக் கொள்ளலாம். சில வார்த்தைகளை இந்த எக்ஸ்டென்ஷனே பரிந்துரையும் செய்கிறது.

Auto Text Expander :

Auto Text Expander - Extension

ஆபிஸ் வேலை தொடர்பாக மெயில் அனுப்பும் போது தேங்க் யூ-வில் ஆரம்பித்து, சில ஃபார்மாலிட்டி வார்த்தைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவோம். துறை சார்ந்த தொலைதொடர்பின் போது சில வரிகளை அப்படியே ஒவ்வொரு மெயிலிலும் பயன்படுத்த வேண்டி இருக்கும். இந்த 'Auto Text Expander' எக்ஸ்டென்ஷன் மூலம், அப்படிப்பட்ட வார்த்தைகள் மற்றும் வரிகளுக்கு ஷார்ட்-கட் கொடுத்து முதலில் சேவ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மெயில் டைப் செய்யும்போது ஷார்ட்கட்டை மட்டும் டைப் செய்தாலே, முழு வார்த்தைகளும் கம்போசரில் தோன்றிவிடும். உங்களின் நேரத்தையும், உழைப்பையும் இது கணிசமாக சிக்கனப்படுத்தும்.

StayFocusd :

StayFocusd Extension

வேலையில் பலராலும் தங்கள் கவனத்தை செலுத்த முடியாததற்கு, வேலை நேரத்தில் அடிக்கடி வரும் சோஷியல் மீடியா நோட்டிஃபிகேசன்கள் காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சோஷியல் மீடியாக்களில் அதிக நேரத்தை செலவழிப்போம். இதைக் கட்டுப்படுத்த StayFocusd எக்ஸ்டென்ஷன் உதவுகிறது. நாள் ஒன்றுக்கு எந்தத் தளத்தில் எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை இதன் மூலம் உள்ளீடு செய்துகொள்ளலாம். நாம் கொடுத்த நேரம் முடிவடைந்ததும், அந்த குறிப்பிட்ட தளத்தை ஓப்பன் செய்ய StayFocusd அனுமதிக்காது. இதன் மூலம் சோஷியல் மீடியா தொந்தரவு இல்லாமல், வேலையில் எளிதாகக் கவனம் செலுத்த முடியும் என இதை வடிவமைத்தவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்.

HTTPS Everywhere :

HTTPS Everywhere Extension

அலுவலகம் சார்ந்த வேலைகளுக்காகவும், பர்சனல் வேலைகளுக்காகவும் நிறைய இணையதளங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். பாதுகாப்பற்ற இணையதளம் ஒன்றைத் திறந்துவிட்டாலும் ஃபிஷிங் மூலம் நமது தகவல்கள் எளிதாகத் திருடுபோக வாய்ப்பிருக்கிறது. இதைத் தடுக்க 'HTTPS Everywhere' எக்ஸ்டென்ஷன் உதவுகிறது. பொதுவாக, இணையத்தில் HTTP தளங்களை விட HTTPS தளங்கள் தான் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகிறது. இந்த எக்ஸ்டென்ஷனானது, HTTP தளங்களை எளிதாக HTTPS கொண்ட தளங்களாக மாற்றிவிடுவதால், இணையத்தில் பாதுகாப்பாக உலவமுடியும்.

இவைகளைப் பயன்படுத்தி ஸ்மார்ட்டாக வேலை செய்தால், அலுவலகம் விட்டு 6 மணிக்கே கிளம்பலாம் பாஸ்!

- கருப்பு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்