வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (21/04/2017)

கடைசி தொடர்பு:11:54 (21/04/2017)

கிரெடிட் கார்டில் விரல் ரேகை ஸ்கேனர்... இது ’வாவ்’ டெக்னாலஜி!

ணமில்லா பரிவர்த்தனைகளில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுபவை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள்தான். இவற்றை பி.ஓ.எஸ் மெஷின்களில் ஸ்வைப் செய்வதன் மூலமாக எளிதாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்தப் பரிவர்த்தனையில் முக்கியப்பங்கு வகிப்பது கார்டுகளின் பாஸ்வேர்டுதான். காரணம் உங்களுடைய கார்டை பாதுகாப்பதற்கு இந்த நான்கு இலக்க பாஸ்வேர்டுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தற்போது முதல்முறையாக கிரெடிட் கார்டிலேயே ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் வைத்து, கார்டின் பாதுகாப்பை இன்னும் ஒருபடி அதிகரித்துள்ளது மாஸ்டர்கார்டு நிறுவனம். முதல்கட்டமாக இந்த வசதியை தென்னாப்பிரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.

ஃபிங்கர்பிரின்ட் ஸ்கேனர் உடன் கூடிய மாஸ்டர்கார்டு

எப்படி செயல்படும் இந்த கார்டு?

தற்போது இருக்கும் கார்டுகளில் நீங்கள் பணம் செலுத்துவதற்காக கார்டை ஸ்வைப் செய்யும் போது பின் நம்பரை டைப் செய்ததும், உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும். இந்தக் கார்டுகளில் பின் நம்பரை டைப் செய்ய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாகத்தான் உங்கள் கைரேகை பயன்படுத்தப்படுகிறது. முதலில் உங்கள் கைரேகையை வங்கியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். வங்கி உங்களது கைரேகையை என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிஜிட்டல் டேட்டாவாக மாற்றி, உங்களுடைய கிரெடிட் கார்டில் பதிவு செய்துவிடும். பின்னர் உங்களுடைய கார்டை கடைகளில் பயன்படுத்த முடியும். 

உதாரணமாக ஒரு கடையில் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என வைத்துக்கொள்வோம். உங்களுடைய கார்டில் இருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரில் கைவைத்து, கார்டை பி.ஓ.எஸ் மெஷினில் செலுத்த வேண்டும். அப்போது உங்களுடைய கார்டில் இருக்கும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் உங்களுடைய கைரேகையை ஸ்கேன் செய்து டிஜிட்டல் இமேஜ் ஆக மாற்றும். இந்த டிஜிட்டல் இமேஜ், ஏற்கெனவே உங்களுடைய கார்டில் பதிவு செய்துவைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் இமேஜ் உடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இரண்டும் ஒன்றாக இருந்தால், உடனே உங்களுடைய பரிவர்த்தனை அனுமதிக்கப்பட்டு, உங்களுடைய கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். இதனை ஏற்கெனவே இருக்கும் பி.ஓ.எஸ் மெஷின்களிலேயே செய்யமுடியும் என்பதால், புதிய இயந்திரங்கள் வாங்கவேண்டும் என்ற அவசியமும் கிடையாது.

என்ன நன்மைகள்?

PIN எண்கள் பாதுகாப்பானவைதான் என்றாலும் கூட, பயோமெட்ரிக் தகவல்கள் என்பவை இன்னும் கூடுதல் பாதுகாப்பினை அளிக்கக்கூடியவை. சில மாதங்களுக்கு முன்னர் பல லட்சம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்ட சம்பவங்கள் உங்களுக்கு நினைவிருக்கலாம். எனவே இதுமாதிரியான பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சங்கள் இன்னும் பணப்பரிவர்த்தனைகளை எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்ற உதவும். சமீபத்தில்தான் இந்திய அரசும் பயனாளர்களின் கைரேகை மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பணம் செலுத்தும் ஆதார் பே வசதியையும் அறிமுகம் செய்தது. இதுபோன்ற கார்டு பரிவர்த்தனைகளை விடவும், அரசின் இந்த ஆதார் பே வசதி இன்னும் எளிமையானது. காரணம் உங்களுடைய கைரேகையைக் கொண்டு மட்டுமே பணம் அனுப்பிடமுடியும். மேலும் பி.ஓ.எஸ் மெஷின்களுக்கான சேவைக் கட்டணம், கார்டு நிறுவனங்களுக்கான சேவைக்கட்டணங்கள் என எதுவுமே அதற்கு கிடையாது.

எப்போது நடைமுறைக்கு வரும்?

மாஸ்டர்கார்டு நிறுவனம் இதனை தென்னாப்பிரிக்காவில் இரு இடங்களில் மட்டுமே சோதனை செய்து பார்த்துள்ளது. விரைவில் ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய கண்டங்களிலும் சோதனை செய்யவிருக்கிறது. இதன் பின்னர் அனைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யலாம். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்