Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரியாணி விருந்தோடு மாணவர்களுக்கு விடை கொடுக்கும் அரசுப் பள்ளி!

அரசுப் பள்ளி

அரசுப் பள்ளிகளில் படித்த எல்லோருக்குமே சத்துணவின் மணம் ரொம்ப பிடிக்கும். பள்ளி தொடங்கியதிலிருந்து நான்கு பாட வகுப்புகள் முடிந்து அடிக்கப்படும் 'பெல்' லின் பெயரே சாப்பாட்டு பெல் என்று பல பள்ளிகளில் சொல்வதுண்டு. சாப்பாட்டு பெல் அடித்ததும் வரிசையில் நின்று சத்துணவை வாங்கி, ருசித்தவர்கள் அதிகம். என்னதான் பிடித்த உணவு என்றாலும் தொடர்ந்து சாப்பிடும்போது சற்று அலுத்துவிடும் அல்லவா. அதனால்தான் இந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷலான விருந்து வைத்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள பாதிரி அழகான கிராமம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்தான் இந்த விருந்து நடந்திருக்கிறது. அங்கு பணிபுரியும் ஆசிரியர் கணபதி மாணவர்களோடு மகிழ்ச்சியோடு நேரத்தைக் கழிப்பவர். பாடத்தை பாடல்களாகவும் கதைகளாவும் மாற்றி கற்பிப்பவர். திடீரென்று ஒருநாள் முகமெல்லாம் வண்ணம் பூசி வந்து கதைகளைச் சொல்லி மாணவர்களை உற்சாகப் படுத்துவார்.

"எங்கள் பள்ளி மாணவர்கள் படிப்பிலும் விளையாட்டிலும் சிறப்பாக பங்களித்தாலும் பள்ளியில் சில வசதிகள் குறைவாக இருந்தன. சில மாதங்களுக்கு முன் மழை பெய்த நாட்களில் வகுப்பின் தரை ஈரமாக இருந்தது. மாணவர்களில் சிலருக்கு காய்ச்சல் வந்தது. அதற்கு வகுப்பின் ஈரம் காரணம் இல்லையென்றாலும் எங்கள் மனதில் அதை சரிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதிந்தது. அதனால், பலரிடம் உதவிகள் கேட்டோம். நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் நண்பர்கள் அதிக அளவில் உதவினார்கள். இப்போது ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் உட்கார்வதற்கு பெஞ்சுகள் வாங்கிவிட்டோம்.

எங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வியந்து பார்க்கும் ஒரு விஷயம் டிஜிட்டல் போர்டு. அதை நண்பர் ஒருவரின் உதவியோடு அமைத்தோம். டிஜிட்டல் போர்டு மாணவர்கள் கற்பதற்கு பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து செய்கிறோம். மாணவர்களுக்கு அரசு வருடத்திற்கு நான்கு செட் சீருடைகள் தருகிறது. பலருக்கு ஒரு வருடம் முழுவதும் அணிந்துவரும்போது கிழிந்துவிடுகிறது. துபாயின் பணிபுரிகிற ரவி சொக்கலிங்கம் எனும் நண்பர் மாணவர்கள் அனைவருக்கும் புதிய சீருடை எடுத்துத்தருவதாக கூறியிருக்கிறார். அந்த புதிய சீருடைகளை வரும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பெற்றுவிடுவோம்.  

எல்லாம் சரி. அந்த விருந்து விஷயத்து வாங்க என்று சொல்கிறீர்களா? அது, எங்கள் தமைமை ஆசிரியர் சத்தியவதி மேடத்தில் யோசனை. ஒவ்வோர் ஆண்டு பள்ளியின் இறுதி வாரத்தின் ஒருநாள் பிரியாணி விருந்து வைத்து மாணவர்களுக்கு விடைகொடுப்போம். அதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தலைமை ஆசிரியரோடு நானும் மற்றொரு ஆசிரியரான கிறைஷ்டியன் நிஷா மேடமும் சேர்ந்து நாங்களே சமைப்போம்.

அரசுப் பள்ளி

காலையிலிருந்து வேலைகள் படு சுறுசுறுப்பாக நடக்கும். இறைச்சி வாங்கி வந்ததும் ஆசிரியர்கள் காய்கறி நறுக்கிவார்கள். ஓரிரு மணிநேரத்தில் பள்ளி வளாகமே மணக்கும் விதத்தில் பிரியாணி தயாராகி விடும். மாணவர்களுக்கு பரிமாறிவிட்டு, அவர்களோடு இணைந்து நாங்களும் சாப்பிடுவோம். பிரியாணி சாப்பிடுகிறோம் என்பதை விட, ஆசிரியர்களே சமைத்துத் தருகிறார்களே எனும் மகிழ்ச்சியோடு மாணவர்கள் சாப்பிடுவார்கள். எங்களோடு மாணவர்களை நெருக்கமான பந்தத்தை உருவாக்கவும் இந்த விருந்து உதவும். இந்த பிரியாணி விருந்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்துவருகிறோம். அன்றைய தினம் சத்துணவு சமைப்பவர்களுக்கும் எங்களின் விருந்து உபசரிப்பில் கலந்துகொள்வார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் எனும் இடைவெளியைத் தகர்ந்து ஒரு குடும்பம் என்பதாக உணரும் தருணம் அது" என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் ஆசிரியர் கணபதி.

மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட இதுபோன்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆரோக்கியமான தலைமுறை உருவாவதற்கு அடித்தளமாகும்.

-வி.எஸ்.சரவணன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close