“நானும் இலக்கியவாதி. புக்லாம் எழுதிருக்கேன்!” - மயில்சாமி அண்ணாதுரையின் கலகல ஷேரிங் #AnandaVikatanNambikkaiAwards

இலக்கியம், கலை, சமூகம் என்று களைக்கட்டி இருந்த விகடன் நம்பிக்கை விருது நிகழ்ச்சியில் மிடுக்கோடு இரண்டு விஞ்ஞானிகள் கலந்துகொண்டார்கள். இவர்கள் இருவரும் செயற்கைக்கோள்களை வடிவமைத்து பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வரும் இஸ்ரோ நிறுவனத்தின் இரு பிரிவுகளின் தலைவர்களாக இருக்கிறார்கள். 

ஒருவர், ராக்கெட் வடிவமைப்பில் முழு கவனம் செலுத்தி வரும் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் கே. சிவன். 2016ம் ஆண்டுக்கான விகடன் நம்பிக்கை மனிதர் விருதைப் பெற்றவர். மற்றொருவர், சந்திரனில் இருந்து செவ்வாய் கோள் வரை செயற்கைக்கோள் செலுத்தி, அதன் தகவல்களைப் பெற்று அடுத்தடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுகொண்டிருக்கும் பெங்களூரூவில் அமைந்துள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் விகடன் விருது வழங்கிச் சிறப்பிக்க வந்திருந்தார். 

செயற்கைக்கோள் அனுப்புவது குறித்த முக்கியமான பல அலுவலக சந்திப்புகளுக்கு மத்தியில் விகடன் விருது விழாவில் மிடுக்கோடு கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் இருவரும். 

விகடன் நம்பிக்கை விருது

மயில்சாமி அண்ணாதுரையிடம் பேசினோம். "அறிவியல் விழாக்கள் பலவற்றில் கலந்துகொண்டிருக்கிறோம். அந்த விழாக்களில் இருந்து இந்த விகடன் விருது விழா வேறுபட்டு இருந்தது. இது சமூகம் சார்ந்த விழா. இது ஒரு திருமண திருவிழா போல் இருக்கிறது. வரவேற்பு முதல் வழியனுப்புதல் வரை மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டது குடும்பத்தில் ஒருவர் போன்ற உணர்ந்தேன். 

விகடன் விழாவில் விருது வழங்குவதும் பெறுவதும் மிகப்பெரிய சமுதாய அங்கீகரிப்புதான். திரைப்படம், விளையாட்டு துறையைத் தவிர, இதர பிரிவில் இருப்பவர்களையும், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களையும் விகடன் அடையாளம் கண்டு விருது வழங்கி கௌரவிப்பது நாங்களும் இந்தச் சமுதாயத்தில் உயிர்ப்போடு தான் பணியாற்றி வருகிறோம் என்பதை உணர வைக்கிறது. எங்களை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்கு இது ஒரு நல்ல நிகழ்வு" என்றார். 

அருகில் இருந்த சூழலியாளரும் எழுத்தாளருமான நக்கீரன் 'நீங்க எப்படிச் சார் இலக்கியம் சார்ந்த இந்தக் கூட்டத்தில்?" என்று கேட்க, மயில்சாமி அண்ணாதுரை 'சார், நானும் கையருகே நிலா, கையருகே செவ்வாய், அறிவியல் களஞ்சியம் என்று மூன்று புத்தகத்தை செந்தமிழில் எழுதி இருக்கிறேன். நானும் இலக்கியத்தை நேசிக்கிறவன். உங்களை எல்லாம் நேரில் சந்திக்க இது நல்ல வாய்ப்பு. ராக்கெட்டை பார்த்துப் பழகிய எங்களுக்கு இலக்கியத்தில் வழியே ராக்கெட் விடுபவர்களையும் பார்ப்பது நல்ல விஷயம் தானே!” என்று சிரித்தார் மயில்சாமி அண்ணாதுரை. 

இப்போது என்னென்ன திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள்? என்று கேட்டோம். 

"ஒவ்வொரு மாதமும் ஒரு செயற்கைக்கோள் என்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். அடுத்த ஆண்டு சந்திரனில் இறங்கி ஆராய்ச்சி செய்ய சந்திராயன்-2 தயாராகி வருகிறது. அதற்கு அடுத்து சூரியன் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு ஆதித்யனும், அதற்கடுத்து வீனஸ் கோளுக்கான செயற்கைக்கோள் என்று பெரிய திட்டங்களுடன் அடுத்தடுத்து திட்டமிட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்" என்று பெருமையோடு சொன்னார் மயில்சாமி அண்ணாதுரை. 

விகடன் விருதுவிகடன் நம்பிக்கை மனிதருக்கான விருதைப் பெற்ற விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் கே. சிவன் "விஞ்ஞானியாக இருந்து பல விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால், அதில் இருந்து வேறுபட்டு விகடன் விருது விழா மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் விருது வாங்கியதை விட, சமுதாயத்தில் மற்றவர்கள் செய்த சேவைக்காக விருது பெற்ற விழாவில் கலந்துகொண்டதை பெருமையாகக் கருதுகிறேன். எங்களைப் பல இடங்களில் அழைத்து ஆங்கிகரிக்கிறார்கள். பாராட்டுகிறார்கள். எங்களைக் குறித்து பலரும் அறிந்து இருப்பார்கள். ஆனால், சமூக அளவில் சேவை செய்பவர்களையும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களையும், எழுத்தாளர்களையும், பண்பாட்டு ஆளுமையாளர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது வியப்பைத் தந்தது.

இவ்வளவு திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் மேடை ஏறும் போது தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. சமூகத்தில் தனித்து செயல்பாட்டு போராடி வருபவர்களை எல்லாம் ஒரு புள்ளியில் இணைத்து மேடையில் ஏற்றி இருப்பது பாராட்டியாக வேண்டும். 

இந்த விழாவில் நான் கல்லூரி காலத்தில்  எழுத்துலகில் கதாநாயனாக விளங்கிய எழுத்தாளர் பாலகுமாரனையும், திரைத்துறையில் கதாநாயனாக விளங்கிய சிவக்குமாரையும் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி" என்றார். 

விகடன் விருது மேடையில், "உலகத்தில் நிறைய நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள். அவர்களின் இருந்து நாம் பல வகையில் வேறுபட்டு இருக்கிறோம். குறைந்த செலவில் பல புதுமையான வித்தியாசமான முறைகளைக் கடைப்பிடித்து அனுப்புகிறோம். இவ்வாறு அனுப்பும் போது பல ஆராய்ச்சிகளையும், மக்களின் தேவைகளுக்கு உதவும் வகையில் தொலைத்தொடர்பு வசதிகளையும், இயற்கையைக் கண்காணித்தல் போன்ற பணிகளை செய்யும் வகையிலும் அனுப்புகிறோம். இதில் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை தான் முதன்மையாக வைத்துச் செயல்படுகிறோம். தற்போது தெற்காசிய நாடுகள் உள்ள அனைத்து மக்களும் பயன்படும் வகையில் பிரதமர் அறிவித்துள்ள செயற்கைக்கோள் பணியை மேற்கொண்டு வருகிறோம்" என்றார் கே. சிவன். 

விருது பெற்றவரும், விருது வழங்கியவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இலக்கிய துறையிலும், சமூக செயற்பாட்டுக்கான நம்பிக்கை விருது பெற்றவர்களை வாழ்த்தினார்கள்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!