Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில்'னு சொன்னவர் மனசைத் தெரிஞ்சிக்க ஆப் வேணும்..!

காலம் கலிகாலமாயிடுச்சு... கலி முத்திடுச்சு... என்று இந்த லோகம் முழுக்க ஸ்லோகம் சொல்லலாம். ஆமாம் பாஸ், ஆண்ட்ராய்ட் போனுன்னாலே ஆப்ஸ்தான். வங்கியில் பணம் போடணுமா... ஆப்ஸ் இருக்கு. உலகத்தை உட்கார்ந்த இடத்துல இருந்தே பார்க்கணுமா... ஆப்ஸ் இருக்கு. இதெல்லாம் ஓகேதான். ஆனால்,'குடிமக்கள்' சிரமம் குறைக்கச் சமீபத்தில் ஒரு ஆப் வந்திருக்காம். 'Tasmac Locator' எனும்  அந்த ஆப் எங்கே டாஸ்மாக் இருக்குன்னு ஒவ்வொரு குடிமகன் மண்டைக்குள்ளேயும் குத்த வெச்சுக் குடைச்சல் கொடுக்கும் குழப்பத்துக்கு விடை கொடுத்து, சட்டுன்னு டாஸ்மாக் இருக்கும் இடத்தைக் காட்டுதாம். அட கருமமேன்னு பார்த்தா, அதுலேயே திருந்தறதுக்கும் தனியா ஆப் இருக்காம். சரி, இதுக்கே கவுந்தா எப்படி? இன்னைக்கு நம்ம நாட்டுல,வீட்டுல நடக்குற நிலவரத்துக்குப் பல ஆப்ஸ் வேணும். வாங்க எது எதுக்கெல்லாம் ஆப்ஸ் வேணும்ன்னு காராசாரமா சிப்ஸ் சாப்பிட்டுக்கிட்டே ஒரு எட்டு பார்த்துப்புடுவோம்.

மொபைல் ஆப்ஸ்

இன்னைய தேதிக்கு வெயிலை விட குந்தாங்குலையா மக்களோட தலையைத் தாக்கிக் குழப்புற விஷயம், 'அ.தி.மு.க-வில் யார் எந்த நிமிசத்துல எங்கே போறாங்க, சசிகலா குடும்பத்துக்கு இது உள்ளேயா, வெளியேவா... முடங்குன இரட்டை இலை நிமிருமா, நிமிராதா... தள்ளிப்போன ஆர்.கே நகர் தேர்தல் மறுபடியும் எப்ப ஓ.கே ஆகும்ங்கிற மாதிரியான 'கொயப்பமான' கேள்விகளுக்கான பதில்களை தேங்காய் உடைக்கிறாப்புல பொசுக்குன்னு உடைக்குற ஆப் வந்தா நல்லா இருக்கும். ஏன்னா, வடிவேலு சொல்றமாதிரி மக்கள் 'மண்டை பத்திரம்' இல்லையா?

முன்னாடி டி.வி-யைப் பார்த்த தமிழக மக்கள் சீரியல்மேனியா வந்து, கேவிக்கேவி அழுதார்கள். இப்போ, ரூட்டே வேற. சீரியல் பார்த்து கன்னத்துல முட்டுக் கொடுத்து, சோகம் காட்டிய பொக்கைவாய் பாட்டிகூட இப்போ 'பிரேக்கிங் நியூஸ்' பார்க்க ஆரம்பிச்சிடுச்சு.. சாப்பாட்டுக்கு முந்தியும், பிந்தியும் மாத்திரை போடுறமாதிரி இப்போ பிரேக்கிங் நியூஸ் பார்க்குற கொடுமை நடக்குது. இதுக்கு ஒரு ஆப் கண்டிப்பா வேணும். அரை மணி நேரம் கழிச்சோ, அடுத்த நாளோ என்ன பிரேக்கிங் நியூஸ் கிடைக்கப் போவுதுன்னு முன்கூட்டியே 'தீர்க்கதரிசி'யா பிரேக்கிங் நியூஸூக்கெல்லாம் பிரேக்கிங் நியூஸ் சொல்ற ஆப் இருந்துச்சுன்னா, மக்களுக்கு மண்டைக் குடைச்சல் தீரும் இல்லையா? எஸ்.டி.டியை முன்கூட்டியே தெரிஞ்சிக்கறதும் முக்கியம் அமைச்சரே!

இன்னைக்கு நொடிக்குநொடி செய்தி, விநாடிக்கு ஒரு பரபரப்புன்னு அ.தி.மு.கவை சுத்தியே 'செய்தி' இருக்கிறதுக்குக் காரணம், கலைஞர் 'கம்'முன்னு இருக்கிறதுதான். அவர் முன்னாள் சி.எம் ஆக இருந்தாலும், வாயாலேயே வடை சுட்டும், பேனாவாலேயே தோசை சுட்டும் தமிழக மீடியாவை குத்தகைக்கு எடுத்துப் பரபரப்பைத் தன்னைச் சுற்றியே ஏற்பட வைப்பார். ஆனால், இன்னைக்கு எப்படி இருக்கார், எங்கே இருக்கார்ன்னு தெரியாத அளவுக்கு 'மூடுமந்திரமா' இருக்கு. தமிழக மக்களுக்கும் ஒரு சேஞ்ச் வேணும் இல்லையா? பழையபடி கலைஞரின் தரையடி பரபரப்புகளை பார்க்க வேண்டியாச்சும், 'அவர் பழையபடி பன்னீர்செல்வமா வருவாரா?'ங்கிற நிலவரத்தை மக்களுக்குத் தெரிய வைக்கிற ஒரு ஆப் வந்தா நல்லா இருக்கும். சும்மா பேசிக்கிட்டு இருந்தேன் மாமா..!

'நான் யார்ன்னு தெரிஞ்சுக்கதான் வருஷாவருஷம் இமயமலை போறேன்'ன்னு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பொசுக்குன்னு சொல்லிடுறார். ஆனா,அவரது ரசிகர்களுக்கோ, 'நீங்க அரசியலுக்கு வருவீங்களா,மாட்டீங்களா'ன்னு முப்பத்தஞ்சு வருஷமா குழப்பம். இந்தா வாறேன், அந்தா வாறேன்னு வருஷா வருஷம் பந்தா காட்டுவார். அப்புறம்,'அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்'ன்னு மேலே கையை காட்டுவார். ரசிகர்கள் பலருக்கும் தங்கள் முடியைப் பிச்சு, காத்துல ஊதிவிட்ட கலக்கம். இதோ, இன்னமும் அவரது ரசிகர்கள், 'அரசியலுக்கு வா தலைவா'ன்னு பசை காயக் காய போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பசைக்கு உதவுன மைதா மாவை வெச்சு ஊர்ப்பட்ட சூரிகள் சாப்பிடுற அளவுக்கு புரோட்டா சுட்டிருக்கலாம். அதனால்,அவரது ரசிகர்களோட மிச்சசொச்ச முடிகள் கொட்டாம இருக்கவாச்சும், 'அரசியலுக்கு ரஜினி வருவாரா... மாட்டாரா'ன்னு பொளேர்ன்னு சொல்ற ஆப் இருந்தா ஜோரா இருக்கும். எவ்வளவு காலம்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது?!

ரஜினி - கமல்

இங்கிட்டு இப்படின்னா, அங்கிட்டு உலகநாயகன் கூடாரத்துக்குள்ள, 'தலீவர் மருதநாயகத்தை எடுப்பாரா'ங்கிற நீ...ண்ட குழப்பக் கேள்வி. எலிசபெத் ராணியை எல்லாம் வெச்சு படாசோக்காதான் அந்தப் படத்து பூஜையைப் போட்டாரு. ஆனால்,அதுக்குப் பிறகு 'பூஜை'ன்னு ஒரு படமேகூட வந்திடுச்சு. இன்னும் சின்ன சீனைக் கூட எடுக்கலை. அதனால், மருதநாயகத்தை கமல் எடுப்பாரான்னு கபால்ன்னு சொல்ற ஆப் அவரது ரசிகர்களால் கோரப்படுகிறது. கூடவே, சைடு ஆப்பாக 'விஸ்வரூபம் பார்ட் 2 எப்போ ரிலீஸ்'என்று பார்த்துச் சொல்லும் ஆப்பும் இருந்தால் ரசிகர்களுக்குக் கூடுதல் தெம்பைத் தரும். வரும் ஆனா வராதா..? இல்லை வரவே வராதா?!

இன்னைக்கு ஒட்டுமொத்தத் தமிழர்களின் மண்டையையும் போட்டு பொசுக்கோ பொசுக்குன்னு பொசுக்குற சமாச்சாரம் வெக்கையான வெயில். 110 டிகிரி வரை ஏதோ கோலி சதம் விளாசுவதைப் போல மாவட்டத்துக்கு மாவட்டம் தாக்கிப் பிழிஞ்சு எடுக்குது. 'எதைக் குடிச்சா வெப்பம் தீரும்'ன்னு ஆளும் பேரும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு திரியிற நிலைமை. அதனால், இதுக்குன்னு ஒரு ஆப்பைத் தந்தாதான் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவாங்க. எந்த ரூட்டுல எவ்வளவு வெயில், எந்த சாலைகள்ல மரங்கள் இருக்கு, எந்தப் பாதையில் மோர், சர்பத், இளநீர்ன்னு விற்கிறாங்க, அதுவும் சல்லிசான ரேட்டுக்குங்குங்கிற விபரத்தை அள்ளி வீசுற ஆப்ஸ் வந்தா, 'அப்பாடா'ன்னு மக்கள் பயணத்தைத் தள்ளி போடாம தொடரும் நிலை வரும். பயணங்கள் முடிவதில்லை.

வீடுகள்ல விஜய் டி.வி.-யில் ஒரே படத்தை ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை மாத்தி மாத்திப் போடுற மாதிரி மனைவி மக்கள், ரசம், புளி, சாம்பார்ன்னு மூணு குழம்பையும் மாத்தி மாத்தி வெச்சு நம்ம நாக்கை நமநமத்துப் போக வெச்சுட்டாங்க. மனசுக்குதான் சேஞ்ச் இல்லை. நாக்குக்காச்சும் ஒரு சேஞ்ச் வேணாமா? மனைவிக மூளைக்குள்ள பதிஞ்சுருக்கிற ரசம், சாம்பார், புளிக்குழம்பு செய்முறை எல்லாம் மறந்து போய் எத்தியோப்பியா, சீனா பக்கம் இருக்கிற குழம்புகள் பற்றிய செய்முறை பதிகிற மாதிரி செய்யும் ஆப்ஸ் இருக்கா? அப்படி ஒண்ணைக் கண்டுபிடிங்கப்பு... ரசம் சாப்பிடறப்ப சமயத்துல விஷம் சாப்பிடுறாப்புலேயே இருக்கு. அவ்வ்வ்வ்..!

இப்படி எகிடுதகிடா ஆப்ஸ் தயாரிக்க ஐடியா கொடுத்ததற்காக சட்டம், நான் யார்ங்கிற ஆப்ஸை வெச்சுத் தேடி கண்டுபிடிச்சு அமுக்கலாம். அதனால், இதோடு கமுக்கமாக ஆப்ஸ் யோசனையை முடிச்சுக்குவோம். வர்ட்டா..?
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close