வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (26/04/2017)

கடைசி தொடர்பு:10:10 (26/04/2017)

ஊரைச் சுற்றிவந்த உருளைக்கிழங்கு வண்டியின் கதை! #MorningMotivation #MisterK

மீசைக்கார மன்னாரு கடும் கோபமாக இருந்தார். எல்லா கமிஷன் மண்டிகளின் வண்டிகளும் வந்து கொண்டிருந்தன. இவரது லாரி மட்டும் வந்த பாட்டைக் காணோம். ‘வாரா வாரம் இவனுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று கொஞ்சம் சத்தமாகவே அலுத்துக் கொண்டார்.  

”என்ன மன்னாரு.. ஒங்க மிஸ்டர் கே இன்னைக்கும் சோதிக்கறானா?” - பக்கத்து மண்டி பரமசிவம்தான் கேட்டது.

“ஆமா.. நீ உன் வேலையப் பாருய்யா...”

”என்கிட்ட கோச்சுட்டு என்ன பண்ண? அவனை வேலைக்குச் சேத்தப்பவே சொன்னேன். கொஞ்சம் ஓவராப் பேசற பயலா இருக்கான்னு. ரெண்டு வாரமா லேட்டா வந்தான் சரி. இன்னமும் அப்டின்னா என்ன அர்த்தம்? இந்தா இருக்கற உப்பிலிபாளையத்துல இருந்து வர ஒரு மணிநேரம் பண்ணுவானாக்கும்?  கொஞ்சம் அதட்டி வை”

மன்னாரு திரும்பிப் பார்த்தார். பரமசிவம் மண்டியில் உருளைக்கிழங்கு லோடு இறங்கி, பத்து பேர் ஆளுக்கொரு மூட்டையைப் பிரித்து சைஸுக்கு ஏற்ற வகைகளாகப் பிரிக்க ஆரம்பித்திருந்தனர். 

”உன் வண்டி வந்து வேலைய ஆரம்பிச்சுட்டீல்ல? போய் அதப்பாரு. அவன் வந்தா நான் கேட்டுக்கறேன்.. போ போ...” - என்றார் மன்னாரு. என்ன இருந்தாலும் மிஸ்டர் K மேல் அவருக்கு ஒரு தனி கரிசனம். அவன் வேலைக்கு சேர்ந்து ஒருமாதம்தான் ஆகிறது. கொஞ்சம் கோக்குமாக்கு செய்தாலும், எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் வைத்திருப்பான்.

மிஸ்டர் K

சரியாக முக்கால் மணிநேரம் கழித்து உருளைக்கிழங்கு லோடுடன் மினி லாரியை ஓட்டிக் கொண்டு வந்தான் மிஸ்டர் K. வண்டியை திருப்பி நிறுத்திவிட்டு இறங்கினான். மன்னார் கோபமாக வந்தவர், அவன் இறங்கிய வேகத்தைப் பார்த்து அப்புறம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

மிஸ்டர் K பெரிய தார்ப்பாயை விரித்து, லோடை இறக்கச் சொன்னான். மூட்டை போடப்பட்டிருக்கவில்லை. மினி லாரியிலிருந்து கொஞ்சம் இறக்கி, தார்ப்பாயை மாற்றி, அடுத்த தார்ப்பாயை விரித்து அதில் கொஞ்சம் கொட்டி இப்படி மினி லாரியைக் காலியாக்கினார்கள். பிறகு வண்டியை தள்ளி நிறுத்தினான். 

ஐந்தாறு ஆட்களை அழைத்துக் கொண்டான்.  உருளைக்கிழங்கை பெரிய சைஸ், நடுத்தரம், சின்ன சைஸ் என்று பிரிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மணிநேரத்தில் வேலை முடிந்ததும் மூட்டை போட்டார்கள். அடுக்கி வைத்து, வியாபாரிகள் வர, விலை பேச ஆரம்பித்தார்கள். ஒரு மணிநேரத்தில் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட மன்னாரு, மிஸ்டர் Kஐ தனியாக அழைத்தார்.

“இங்கன வா... கொஞ்சம் பேசணும்”

“சொல்லுங்க மொதலாளி” என்றான் மிஸ்டர் K பவ்யமாக.

“இந்தா இருக்குது உப்பிலிபாளையம். அங்கிருந்து வர்ற மினி லாரிலாம் இந்த டவுன் மண்டிக்கு கால் மணிநேரத்துல வருது. நீ அவங்களை மாதிரி மூட்டைகூட போடறதில்ல.. நெலத்துல இருந்து உருளைக்கிழங்கை வண்டில அள்ளிப்போட்டுட்டு  கிளம்பி வர்ற, ஆனாலும் லேட்டா வர்ற. ஏன் இப்டி? எங்கதான் சுத்திட்டு வருவ?”

“மொதலாளி... நான் எப்ப வந்தா என்ன.. மத்த மண்டிக்காரங்களுக்கு முன்னாலயே நாம விக்க ஆரம்பிச்சுடறோம்ல?”

“அதான் என்ன பண்றன்னு கேட்டேன்!?”

“ஒண்ணுமில்ல மொதலாளி... அவிங்கள்லாம் அங்க மூட்டை போட்டுட்டு வந்து, இங்க அதக் கொட்டி பெரிசு, மீடியம், சின்னதுனு இங்க வந்து பிரிக்கறாங்க. நான் என்ன பண்ணுவேன்னா, அங்க மூட்டை போடமாட்டேன். மொத்தமா வண்டில கொட்டிடுவேன். அப்பறமா நேர்ரோட்ல வராம, ஊரைச் சுத்தி  வருவேன். ரோடே இருக்காது. இருக்கற ரோடும் மேடு பள்ளமா இருக்குமா.. உருளைக்கிழங்கெல்லாம் உருண்டு சின்னது கீழ, பெரிசு மேலனு அததுவா செட்டாகிடும். வந்து கொஞ்சம் பார்த்து இறக்கினா போதும்.  மத்த கடைக்காரங்க 10-15 பேர் வெச்சுப் பிரிப்பாங்க. நான் அதையே அஞ்சாறு ஆள் வெச்சு முடிச்சுடுவேன். ஏன்னா முக்காவாசி சைஸ் பிரிச்ச மாதிரிதான் இருக்கும்.. ஆள் கூலியும் மிச்சம். புரியுதா மொதலாளி?” என்றான்.

****************************************************************

செல்லூர் ராஜுவின் நீர் - ஆவி- தெர்மாகோல் திட்டமாகட்டும், அண்ணா சாலை  அதளபாதாள சாலை ஆனதாகட்டும் - காரணம் என்ன?  தெளிவான திட்டமிடல் இல்லாமை! திட்டமிட்டால் எந்தச் செயலையும் சிறப்பாக முடிக்கலாம் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் மேலே மிஸ்டர் K செயல்படுத்தியது.

ஒரு மிகப்பிரபலமான இயக்குநரிடம், ‘உங்கள் அடுத்த பட வேலைகள் எந்த நிலையில் இருக்கிறது?’ என்று கேட்டதற்கு அவர் சொன்னாராம். 

“இன்னும் 10% தான் பாக்கி”

“ஷுட்டிங் ஆரம்பித்தமாதிரியே தெரியவில்லையே?”

“எஸ். ஷுட்டிங் மட்டும்தான் பாக்கி” 

ஆம். அவர்கள் முழுமையான ஸ்கிரிப்ட் தயார் செய்துவிட்டுதான் வேலையையே ஆரம்பிப்பார்கள். ஒரு மாற்றமும் தேவையிராது. திட்டமிட்டு முடிக்கும் செயலுக்கு வெற்றி நிச்சயம். 

இவ்வளவு பெரிய கட்டுரையை வடிவேலு ஸ்டைலில் ஏழே வார்த்தைகளில் சொல்லிவிடலாம்!

‘எந்த ஒரு விஷயத்தையும்  ப்ளான் பண்ணிப் பண்ணணும்! வோக்கே?’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்