ஒரு நாள் சி.இ.ஓ ஆனார் ஃப்ளிப்கார்ட் ஊழியர்!

ஃப்ளிப்கார்ட் தன்னுடைய 10ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாட நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற ஊழியருக்கு ஒரு நாள் சிஇஓ பதவி தந்து அசத்தியுள்ளனர்.

ஒரு நாள் சிஇஓ

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் தன்னுடைய 10ஆம் ஆண்டு விழாவினை சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர். இந்த விழாவினையொட்டி அந்நிறுவன ஊழியர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுவோருக்கு ஒரு நாள் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றுவதற்கான அரிய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி நடந்த போட்டியில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் டிசைனராகப் பணியாற்றும் பத்மினி பகாடலா வெற்றி பெற்றார். இவருக்கு தன்னுடைய பதவியை ஒரு நாள் அளித்து கௌரவப்படுத்தினார் ஃப்ளிப்கார்ட்டின் சிஇஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி. ஒரு நாளிலேயே நிறுவனம் சார்ந்த அத்தனை தொழில் கூட்டங்களிலும், கலந்துகொண்டு நிறுவனத்தை வளர்ப்பதற்கான யுத்திகளை வழங்கினார் எனக் கூறுகின்றனர் நிர்வாகத்தினர்.

2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தன்னுடைய 10ஆம் ஆண்டு விழாவினையொட்டி இந்த ஒரு ஆண்டு முழுவதும் இம்மாதிரியாக வித்தியாசமாகக் கொண்டாட உள்ளனர். இதேபோல் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், விற்பனையாளர்கள் என அனைவருக்குமே ஆச்சர்யங்கள் காத்திருப்பதாக கூறுகிறார் நிர்வாக இயக்குநர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!