வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (28/04/2017)

கடைசி தொடர்பு:15:30 (28/04/2017)

மீம் க்ரியேட்டர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? - அரசியல்வாதிகளுக்கு சில ஆலோசனைகள்

இன்னைய தேதிக்கு 'மிக்ஸர் புகழ்' ஓ.பி.எஸ் தொடங்கி 'வைகை அணை செல்லூர் ராஜூ' வரை கிட்னி கலங்க அஞ்சுவது சி.பி.ஐக்கோ, மீடியாவுக்கோ, எதிர்க்கட்சிகளுக்கோ இல்லை. 'படா பேஜாரா இருக்கும்' மீம்ஸ் பார்ட்டிக்களுக்குதான். இவர்கள் ஒண்ணு செய்தால் அதை ஒன்பதாக திரித்து மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பி, ஏகப்பட்ட லோலாய்களை தருவதைத்தான் அரசியல்வாதிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'மீம்ஸ் பார்ட்டிகளை பத்து நாளில் சமாளிக்க கத்துக்கிறது எப்படி?' என்று புத்தகங்களெல்லாம் வாங்கி படிக்கும் அளவுக்கு அரசியல்வாதிகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது. நமக்காக முக்காலமும் மூளை பிதுங்க திட்டங்களை யோசிக்கும் தங்கத் தலைவர்களுக்கு ஒரு பிரச்னைன்னா, நமக்கு மனசுக்கு தாங்காது. மீம்ஸ் பார்ட்டிகளை சமாளிக்கும் டிப்ஸ்களை அவர்களுக்கு வாரி வழங்குவோம். 

மீம்


 ஏதேனும் விழாக்களில் பேசும்போது வாய்தவறி வரும் வார்த்தைகளையோ, இல்லைன்னா ஏதேனும் எசகுபிசகா செய்யும் சில செயல்களையோ (உதாரணம்:வைகை அணை விவகாரம்) வைத்தோதான் மீம்ஸ் பார்ட்டிகள் அரசியல்வாதிகளை தோரணம் கட்டித் தொங்க விடுகிறார்கள். இதிலிருந்து தப்பிக்கணும்ன்னா, அடிக்கடி அவர்களின் நெஞ்சை நக்குவது முக்கியம். மேடை கிடைக்கும்போதெல்லாம், மைக் இருந்தாலும், இல்லைன்னாலும், 'அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே'ன்னு ஆதிகாலம் தொட்டு நீங்கள் பயன்படுத்தி வர்ற சமாச்சாரத்தோடு கூடுதலாக 'இனிய மீம்ஸ் க்ரியேட்டர்களே'ன்னு ஒரு பதத்தைச் சேர்த்து சொல்ல கத்துக்கணும். 'நம்மள மேடைதோறும் 'மரியாதை' பண்ணும் இவரை வச்சு நாம மீம்ஸ் போடக்கூடாது'ன்னு அவர்களுக்கு உங்கமேல ஒரு இது வர வாய்ப்பிருக்கு. 'இப்பவே கண்ணைக் கட்டுதே!'ன்னு தோணுதா?. வேற வழி?!.
 
பத்திரிகையாளர் சந்திப்புகளிலோ, தனியா ஏதேனும் ஒரு பத்திரிகைக்கு பேட்டிக் கொடுக்கும்போதோ, அரசியல்வாதிகள் சில கோக்குமாக்கு தகவல்களை வாய்தவறி சொல்லிவிடுவார்கள். ஆனா ,'அதை எழுத வேண்டாம்' என்று 'கேட்டு' போடுவதற்காக,'ஆஃப் த ரெக்கார்டு'ங்கிற சட்டத்தை கையில் எடுத்து, வாயில் போட்டு அதக்கி துப்புவார்கள். அதை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி, இனிமே வரும் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளின்போது,'ஆஃப் த மீம்ஸ் பார்ட்டிகள்'ன்னு ஓப்பனா அறிவிச்சு சரண்டராயிருங்க. அவங்க இரக்கம் காட்டாமலா போய்டுவாங்க. அதையும் மீறி மீம்ஸ் போட்டால், 'மீம்ஸ் நல்லது'ன்னு சொல்லிட்டு, அடுத்த சோலிக்கு ஆர்டர் எடுக்க வேண்டியதுதான். விதி வலியது பாஸ்!.
 
இன்னைக்கு அரசியல்வாதிகளுக்கு தொகுதியில் நல்ல பேர் இருக்கோ இல்லையோ, ஊர் ஊருக்கு, முக்குக்கு முக்கு இன்ஜினீயரிங் கல்லூரி, டீம்டு யுனிவர்சிட்டின்னு கல்லூரிகள் இருக்கு. நாலாப்பு படிக்காதவர்கள்கூட 'கல்வி வள்ளல், வேந்தர்' எல்லாம் ஆகி சரஸ்வதி கண்களில் கரகரவென கண்ணீர் ஊற்றை பொத்துவிடும் காரியத்தில் கருமமே கண்ணா இறங்குகிறார்கள். அதனால், மாசத்துக்கு ஐந்து மரண கலாயாக மீம்ஸ் போடும் மீம்ஸ் பார்ட்டிகளை அடிபொடிகளை அனுப்பி அலேக்காக தூக்கி வர செய்து, 'மீம்ஸ்களின் பிறப்பிடமே' என்று டாக்டர் பட்டம் கொடுக்கலாம். 'நாலு சுவத்துக்குள்ள உக்காந்து நறுக்குன்னு மீம்ஸ் போட்ட நம்மளை இப்படி மேடையேத்தி டாக்டர் பட்டமெல்லாம் கொடுத்து...'..அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் கேவி கேவி அழும் மீம்ஸ் பார்ட்டிகள், அதுக்கு பொறவு உங்களை வச்சு மீம்ஸ் போடுவாங்கன்னா நினைக்கிறீங்க?!. 'அது போன மாசம், இது இந்த மாசம்'ன்னு உங்களிடம் சரண்டராக வாய்ப்பிருக்கு. 
 
அடிக்கடி அந்தந்த நேரத்தில் காமாசோமான்னு பிச்சுக்கிட்டு கிச்சுக்கிச்சு மூட்டிய சிறந்த மீம்ஸ்களை இவர்களே ஆள் வைத்து தேடி எடுத்து, அதை வைத்து அறிக்கை கொடுக்கலாம். 'ஏதெதற்கோ சாகித்திய அகடாமி விருது தர்றீங்க,பத்மஸ்ரீ விருது தர்றீங்க. நிகழ்கால விசயங்களை 'ஒரே வார்த்தை அல்லது போட்டோ, ஓஹோன்னு கருத்து'ன்னு உலகம் முழுக்க கருத்து சொன்ன இந்த பிள்ளைங்களுக்கு அட்லீஸ்ட் ஒரு பத்மவிபூஷண் விருது கொடுக்க கூடவா உங்களுக்கு மனசில்லை?!. நேரடியாக பிரதமரை எச்சரிக்கிறேன். விருது தருகிறீர்களா, இல்லை மதியம் வரை உண்ணாவிரதம் போராட்டம் நாங்க நடத்தவா?'ன்னு அதிரிபுதிரி அறிக்கைகளை அள்ளிவிட்டு, மீம்ஸ் பார்ட்டிகளின் உச்சந்தலையில் பாளம் பாளமாக ஐஸ் கட்டிகளை கொட்டலாம். 
 
தனது அடிபொடிகள் வைக்கும் பிளக்ஸ்களிலும், அடித்து ஒட்டும் நோட்டீஸ்களிலும், 'எங்கள் தலைவர் அந்த ஆண்டவன், மீம்ஸ் பார்ட்டிகளைத் தவிர வேற யாருக்கும் பயந்ததில்லை' என்று 'பயந்தாங்கொள்ளி' வசனத்தை போட வைத்து சமாளிக்கலாம். காரியம் ஆவணும்ன்னா காலை பிடிக்குறதும், காரியம் ஆனதும் காலை வாருறதும் அரசியல்ல சாதாரணமப்பா ரகம்தானுங்களே. என்னா நாஞ் சொல்றது?!.
 
அரசியல்வாதிகள் சொல்லும் கருத்துகள், நடவடிக்கைகள் சூட்டோடு சூடாதான் மீம்ஸ் மீனா பொறிக்கப்படுது என்பதால் அறிக்கை கொடுப்பத்தையோ, திட்ட தொடக்க விழாக்களையோ இசைப்புயல் மாதிரி மிட்நைட்டில் வச்சுக்குறது உத்தமம். மீம்ஸ் பார்ட்டிகளெல்லாம் அகால தூக்கத்தில் கும்பகர்ணன்களாகி 'கொர் கொர்' விடும் வேளையில், நீங்கள் விடும் அறிக்கையோ,தொடங்கும் திட்டங்களோ 24 மணி சேனல்களில் வந்ததோடு மட்டும் நின்றுவிடும். மீம்ஸ் பார்ட்டிகளின் கண்களில் இப்படி ஏமாத்து மொளகா பொடியை பரபரன்னு தூவுனாதான் உண்டு. 
 
தேர்தல் நேரம்ன்னா, உங்க தேர்தல் அறிக்கைகள்ல 'அந்த பாதையில் ரோடு போடுவேன், இந்த பஸ்ஸ்டாண்டுல கக்கூஸ் கட்டுவேன்'ன்னு கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய 'மூத்த' சமாச்சாரத்தை கொஞ்சம் குறைச்சுகிட்டு, 'நாங்க ஆட்சிக்கு வந்தா மீம்ஸ்களை இலக்கியத்தில் சேர்ப்போம். 'சங்க இலக்கியம்' என்பது போல் 'மீம்ஸ் இலக்கியம்'ன்னு ஆக்கி, பாடங்கள்ல சேர்ப்போம். பள்ளி, கல்லுரி பாடப்பிரிவுகள்ல ஒண்ணா மீம்ஸ் உருவாக்குதலை சேர்ப்போம்'ன்னு அள்ளி விடணும். 'மகாபிரபு, நீங்க இங்கேயா இருக்கீங்க'ன்னு உங்க மேல மீம்ஸ் பார்ட்டிகளுக்கு கரிசனம் பொத்துக்கிட்டு நாலாபக்கமும் ஊத்தும். 
 
'மீம்ஸ் போடுபவர்கள் ஆற்றல்மிக்கவர்கள். மூளை முழுக்க அறிவை நீச்சலடிக்கவிடுபவர்கள். அவர்களெல்லாம் அரசியலுக்கு வர வேண்டும். குறிப்பா, 'மீம்ஸ்களுக்காக நான்; மீம்ஸ்களால் நான்'ன்னு வாழும் நான் சார்ந்த கட்சிக்கு வந்தா, காவிரியிலும், பாலாறிலும் பாலாறும் தேனாறும் ஓடும்'ன்னு கபால்ன்னு மீம்ஸ் கிரியேட்டர்களைக் கட்சிக்குள் இழுத்து போடலாம். ஆடுற மாட்டை ஆடியும், பாடுற மாட்டை பாடியும் கறக்கும் பழைய பார்முலாதான். இருந்தாலும், கைமேல் பலன் தரும் பார்முலா.
 
இதுக்கும், மீம்ஸ் பார்ட்டிகள் அசரலன்னா,'அவமானம்ன்னா எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி'ன்னுட்டு போக வேண்டியதுதான். 


டிரெண்டிங் @ விகடன்