வெயில் பாதிப்பில் இருந்து உங்கள் வாகனத்தைக் காப்பாற்ற சில டிப்ஸ்!

இந்தியா முழுவதும் 40 டிகிரிக்கும் அதிகமான வெயில் கொளுத்தும் நிலையில், அன்றாடம் வீட்டிலிருந்து ஆபீஸ் செல்வதே சோ(சா)தனையான விஷயமாக இருக்கிறது. ஆனால், ஒரு விஷயத்தை நாம் அப்படியே மறந்துவிடுகிறோம். நாம் வெளியே செல்லும்போது நம்முடன் சேர்ந்து நாம் பயணிக்கும் வாகனமும் சுட்டெரிக்கும் வெயிலில் டயர்டாகிவிடுகிறது என்பதுதான் அது. எனவே, வாகனத்தை சரியான நேரத்தில் நாம் கவனிக்காவிட்டால், அது நம்மை நடுரோட்டில் நிறுத்திவிடும். வாகனத்துடன் சேர்ந்து நாமும் சூடாகிவிடுவோம் என்பதை நினைவில்கொள்ளவும். இதைத் தவிர்க்கவேண்டுமானால், இங்கு கூறப்படும் விஷயங்களைப் பின்பற்றுங்கள் மக்களே!

 

வெயில்

 

பெயின்ட் முக்கியம்: நமது சருமத்தைப்போல, ஒரு வாகனத்தின் பெயின்ட்தான் வெயிலை அதிக அளவில் எதிர்கொள்கிறது. எனவே, காலையில் ஆபீஸ் சென்றடைந்தவுடன், நிழலான ஓர் இடத்தில் வாகனத்தை நிறுத்துவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இல்லையெனில், வெயிலில் அலைவதால் கருத்துவிடும் சருமம்போல, வாகனத்தின் பெயின்ட்டும் அதன் பொலிவை இழந்துவிடும். மேலும், வாகனத்தின் டயரில் இருக்கக்கூடிய காற்றின் அழுத்தத்தையும், கார் என்றால் கேபினின் டெம்ப்ரேச்சரையும், வெயில் கணிசமாக அதிகரித்துவிடும். `எங்கள் ஆபீஸில் கவர்டு பார்க்கிங் இல்லை' என்பவர்கள், வாகனத்துக்கான கவரையும் கூடவே எடுத்துச் செல்வது நல்லது. இதுதவிர, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாகனத்தின் வெளிப்புறத்தில் Wax Polish செய்வதை வாடிக்கையாக்கிக்கொள்ளுங்கள். இது UV Rays மற்றும் அழுக்கு, வாகனத்தின் வெளிப்புறத்தில் படிவதைக் குறைக்கும். உங்களுடையது புதிய வாகனம் என்றால், மறக்காமல் Teflon கோட்டிங் அடித்துவிடவும். 

வெயில்

சுத்தமான வாகனம்: காரில் லெதர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், கேட்கவே வேண்டாம் வெயிலின் தாக்கம் கேபினுக்குள்ளே அப்படியே தெரியும். தவிர, வெயில் காலத்தில் கேபின் மிக எளிதாக தூசியால் சூழப்பட்டுவிடும் என்பதால்,  ஃபுளோர் மேட், ஏசி வென்ட், டேஷ்போர்டு ஆகியவற்றை முடிந்தவரை சுத்தமாக வைத்துகொள்ளவும். இதனுடன் கார் கதவுக் கண்ணாடிகளை முழுக்க ஏற்றிவிடுவதுடன், சன் ஷேடு பயன்படுத்துவதினாலும் கேபினின் வெப்ப அளவைக் குறைக்க முடியும். தவிர, டேஷ்போர்டுக்கு எனப் பிரத்யேகமாக Protector-கள் இருக்கின்றன. இவை வெயிலிலிருந்து டேஷ்போர்டு பிளாஸ்டிக்குகளைக் காப்பதுடன், அவற்றின் ஆயுளையும் அதிகரிக்கின்றன.

வெயில்

 

பெஸ்ட் ஏசி: எப்படி நாம் ஆபீஸில் அதிக வேலை இருந்தால் ஓவர்டைம் பார்க்கிறோமோ, அதேபோல காருக்கு வெளியே
40 டிகிரிக்கும் அதிகமான வெயில் இருக்கிறது என்பதால், வழக்கத்தைவிட காரின் ஏசி ஓவர்டைம் பார்க்கவேண்டியிருக்கும். அதற்கேற்ப ஏசி சிஸ்டம், தனது முழுத்திறனில் இயங்கும் நிலையில் இருப்பது அவசியம். எனவே, கம்ப்ரஸர், புளோயர் ஆகியவற்றின் கண்டிஷன் மற்றும் ஏசி கேஸ் - Refrigerant அளவு போதுமானதாக இருக்கின்றனவா என்பதை செக் செய்துகொள்வது நல்லது.

வெயில்

 

பெட்டர் ரப்பர்: வாகனத்தின் வயதைப் பொறுத்து Pipe, Hose, Belt ஆகியவற்றில் விரிசல்கள் இருக்கும் என்பதால், அது பெட்ரோல் - கூலன்ட் - ஆயில் ஆகியவற்றின் இழப்புக்கு வழிவகுக்கும். எனவே, வாகனத்தை சர்வீஸுக்கு விடும்போது, முன்பு சொன்ன பாகங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை செக் செய்து, தேவைபட்டால் புதிதாக மாற்றிவிடுவது நல்லது. 

வெயில்

 

கூல் இன்ஜின்:  பொதுவாகவே வெயில்காலத்துக்கு முன்பே, காரை ஒரு ஃபுல் சர்வீஸ் செய்துவிட வேண்டும். அப்போதுதான் இன்ஜின் ஆயில் - கியர்பாக்ஸ் ஆயில் - பிரேக் ஆயில் - ஸ்டீயரிங் ஆயில் தவிர கூலன்ட், வைப்பர் லிக்விட் போன்ற மற்ற திரவங்களின் அளவும் புதியதாகவும், சரியான அளவிலும் இருக்கும். மேலும், ஏர் ஃபில்டரைப் பொறுத்தவரை அதை க்ளின் செய்வது அல்லது புதிதாகப் பொருத்துவதை  நிச்சயம் செய்துவிடுங்கள். தவிர, ரேடியேட்டரில் இருக்கும் தூசு மற்றும் சிறிய பூச்சிகளை நீக்கிவிட்டால், தூய்மையான மற்றும் குளிர்ச்சியான காற்று இன்ஜினுக்குச் செல்லும். ரேடியேட்டர் சூடாக இருக்கும்போது, கூலன்ட் கேப்பை எக்காரணம் கொண்டும் கழட்டக் கூடாது.

வெயில்

பக்கா டயர்: ஒரு வாகனத்தின் டயர், டீலரிலிருந்து சாலைக்குச் செல்லும் நொடியிலிருந்தே கடினமான இடர்பாடுகளைச் சந்திக்கத் தொடங்கிவிடுகிறது. வெயில் காலத்தில் அது இன்னும் அதிகரிக்கும். வாகனத்தின் டயரைத் துச்சமாக மதிக்கும் மக்களே, குறைந்தபட்சம் டயரில் சரியான அளவு காற்றழுத்தத்தையாவது கடைப்பிடியுங்கள். ஏனெனில், குறைவான காற்றழுத்தத்தைக்கொண்டிருக்கும் டயர், பக்கவாட்டுப் பகுதிகளில் அதிக அழுத்தத்தைச் சந்திக்க நேரிடும். இதனால் சில நேரங்களில் டயர் வெடித்துவிடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இதுவே அதிகமான காற்றழுத்தத்தைக் கொண்டிருக்கும் டயர், உங்கள் வாகனத்துக்குப் போதுமான கிரிப்பைத் தராது.

''கொஞ்சமா காற்று இருந்தால்தானே பிரச்னை. காற்றுதான் நிறையா இருக்கே, அப்புறம் என்ன?'' என்றால், சடர்ன் பிரேக் அடிக்கும்போது இதுவும் ஆபத்தானதே! ஒரு வாகனத்தில் இருக்கக்கூடிய டயரின் அதிகபட்ச ஆயுள்காலம் என்பது, ஐந்து வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்தான். அதன் பிறகு டயர்கள் மொழ மொழவென மாறிவிடும் என்பதால், உங்களுக்குத் தேவையான ரோடு கிரிப் கிடைக்காது. எனவே, உங்களது வாகனத்தின் டயர்களைச் சோதித்துவிட்டு, அதற்கேற்ப முடிவெடுங்கள்.

ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்துகூட, நீங்கள் Tyre Thread-ன் ஆழத்தைப் பரிசோதிக்க முடியும். நீங்கள் தொடர்ச்சியான நெடுஞ்சாலைப் பயணம் அல்லது அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குபவர் என்றால், வழக்கமான காற்றுக்குப் பதிலாக, டயர்களுக்கு நைட்ரஜன் வாயு பெஸ்ட் சாய்ஸ். இதனால் டயரின் காற்றழுத்தம், நீண்ட நாள்களுக்குச் சரியாக இருக்கும். நீண்ட நேரப் பயன்பாட்டுக்குப் பிறகும் டயர்கள் வழக்கத்தைவிடக் கூலாக இருக்கும்.

 

வெயில்

ஃபுல் பேட்டரி: மழைக்காலத்தைவிட வெயில்காலத்தில்தான் பேட்டரிகள் தனது சார்ஜ் அளவையும் ஆயுளையும் விரைவில் இழந்துவிடுகின்றன. வெயிலினால் பேட்டரிகள் தேவைக்கும் அதிகமாக சார்ஜ் ஆகிவிடுவதும், பேட்டரியில் இருக்கும் ஆசிட் ஆவியாகிவிடுவதுமே இதற்கான முதன்மையான காரணிகள். அதற்காக வைகையில் இருக்கும் தண்ணிர் ஆவியாவதைத் தடுக்க, தெர்மாகோல் பயன்படுத்திய சர்வதேச அளவிலான தொழில்நுட்பத்தையெல்லாம் இங்கே பரிசோதிக்க வேண்டாம் மக்களே! அதற்குப் பதிலாக பேட்டரியைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூசு, துரு இல்லாமல் வைத்திருப்பது அவசியம். சில நாள்கள் நீங்கள் உங்களது வாகனத்தைப் பயன்படுத்த மாட்டீர்கள் என்றால், தயங்காமல் பேட்டரி கேபிளைக் கழட்டிவிடுங்கள். மேலும் விரிசலுடன்கூடிய வொயர்கள் அல்லது லூஸான வொயர் ஏதேனும் இருந்தால், அதை சரி செய்துவிட்டால், பேட்டரியின் சார்ஜ் இறங்குவதைத் தவிர்க்க முடியும்.

வெயில்

பில்டிங்கும் ஸ்ட்ராங்...பேஸ்மென்ட்டும் ஸ்ட்ராங்: வெயில் நம்மை வாட்டுகிறது என்பதற்காக, நமது மாமுல் வாழ்க்கையிலிருந்து எக்காரணம்கொண்டும் விலகக் கூடாது. எனவே, வாகனத்தில் எப்போதும் எமர்ஜென்சி மெடிக்கல் கிட் மற்றும் Multi Purpose டூல் கீட் வைத்திருப்பது, சிக்கலான ஒரு நேரத்தில் நிச்சயம் நன்மை பயக்கும். மேலும், சரியான காற்றழுத்தத்தில் இருக்கக்கூடிய ஸ்பேர் டயர், அது தொடர்பான உதிரிபாகங்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் கூலன்ட் பாட்டிலையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக, நாம் எப்படி தினமும் குளித்துவிடுகிறோமோ அதேபோல நமது வாகனத்தை வாரத்துக்கு ஒருமுறையாவது வாஷ் செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

 - ராகுல் சிவகுரு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!