"சூப்பர் மேன்" மரபணுக்களைக் கொண்டுள்ளார்களா திபெத்தியர்கள் ? #SuperAthlete | Tibetan people Carry the Super Man genes from Denisovans

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (29/04/2017)

கடைசி தொடர்பு:18:34 (29/04/2017)

"சூப்பர் மேன்" மரபணுக்களைக் கொண்டுள்ளார்களா திபெத்தியர்கள் ? #SuperAthlete

அந்தக் குளிரை அனுபவத்திராத வரையில் உங்களால் உணர முடியாது. வார்த்தைகளின் வர்ணனைகள் நிச்சயம் அந்த உயரத்தில் இருக்கும் உடல்நிலையை உணர வைக்கவே முடியாது. கடுமையான குளிராக இருக்கும். உங்கள் எலும்புகளின் உள் அந்த குளிர் பாய்ந்து சில்லிட வைக்கும். ஆக்ஸிஜன் அளவோ மிகவும் குறைவு. தலை சுற்றுவது மாதிரியான உணர்வு இருந்துக் கொண்டே இருக்கும். எதையாவது கொஞ்சம் சாப்பிட்டாலும் கூட, உடனடியாக வாந்தி வந்துவிடும். மாலை ஆக, ஆக ... எல்லாம் அதிகமாகும். இரண்டடி தூரம் நடப்பது கூட மிகவும் கடினமாக இருக்கும். உதடுகள் வறண்டு போயிருக்கும். குடல் சுருங்கிப் போயிருக்கும். தலை சுற்ற... படுக்கலாம் என்று நினைத்தால்... நான்கு பேர் கழுத்தை நெறிப்பது போன்ற உணர்வு ஏற்படும். மயக்கத்தில் கண்கள் சொருக ஆரம்பிக்கும். ஆனால், எங்கும் படுக்கவே முடியாது. இமயமலையின் 18 ஆயிரம் அடி உயரத்தில் இப்படித் தான் இருக்கும் நமக்கு. ஆனால், அந்த உயரத்தில் ஒரு இனம் அத்தனை உற்சாகத்தோடு ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருக்கும். மயக்கத்தில் இருக்கும் நமக்கு அவர்களைப் பார்த்தால்... இவர்கள் உண்மையிலேயே சாதாரண மனிதர்கள் தானா? இல்லை ஏதாவது சூப்பர் ஹீரோக்களா? என்ற சந்தேகம் எழும். அப்படி அந்த உயரத்திலும், அத்தனை உற்சாகமாக இருப்பவர்கள் திபெத்தியர்கள். 

திபெத்தியர்கள் குறித்து மரபணு ஆராய்ச்சி

சந்தேகமே வேண்டாம்... திபெத்தியர்கள் சூப்பர் ஹீரோக்கள் தான் என்பதை உறுதியாக நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. டெக்ஸாஸ் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த, ஹாவ் ஹூ ( Hao Hu ) மற்றும் சாட் ஹஃப் ( Chad Huff ) ஆகிய இருவரும் சேர்ந்து திபெத்தியர்களின் "மரபணு" ( Gene ) ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதற்காக இமயமலைப் பகுதிகளில் வாழும் 27 திபெத்தியர்களை தங்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்டனர். அவர்களின் மரபணுக்களை  ஆராய்ச்சி செய்தபோது, சாதாரண மனிதர்களால் வாழ முடியாத இடத்தில் இவர்களால் எப்படி வாழ முடிகிறது என்ற கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது. 

திபெத்தியர்கள் குறித்து மரபணு ஆராய்ச்சி

சாதாரண மக்களின் உடலில் காணக்கிடைக்காத 5 புதிய மரபணுக்கள் திபெத்தியர்களிடம் காணப்பட்டன. ஆக்ஸிஜன் குறைவான, கடுங்குளிரான, ஊதாநிற கதிர்வீச்சு அதிகம் இருக்கும் உயரங்களில், உணவுப் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் வாழ என இந்த மரபணுக்கள் அவர்களுக்கு உதவுகின்றன. 

திபெத்தியர்கள் குறித்து மரபணு ஆராய்ச்சி

இமயமலைப் போன்ற அதிக உயர இடங்களில் வாழ்வதற்கு ஏதுவாக EPAS1 மற்றும் EGLN1 ஆகிய இரண்டு மரபணுக்கள் திபெத்தியர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. இதில் EPAS1 என்ற மரபணு மனிதர்களின் மூதாதைய கிளையினமான டெனிசோவன்களிடமிருந்து வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். திபெத்தியர்கள், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் டெனிசோவன்களுடன் கலந்ததால், அவர்களுக்கு இந்த மரபணு கடத்தப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை இவர்கள் " சூப்பர் அத்லீட்" ( Super Athlete ) மரபணு என்று செல்லமாக அழைக்கிறார்கள். இது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை திபெத்தியர்கள் செய்ய உதவிடுகிறது. 

உயரமான இடத்தில் எப்படி வாழ்கிறார்கள்?

அதேபோல், ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த இடங்களில் உயிர் பிழைக்க PTGIS மற்றும் KCTD122 ஆகிய மரபணுக்கள் திபெத்தியர்களுக்கு உதவுகிறது. அதே போல், விடிஆர் ( VDR ) எனும் மரபணு விட்டமின் - டியை அதிகப்படுத்தி, அவர்களுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது. இந்த ஆராய்ச்சி , திபெத்தியர்கள் சாதாரண மனிதர்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்பதோடு அல்லாமல் அவர்களுக்குள் " சூப்பர் ஹீரோ " மரபணுக்கள் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால், திபெத்தியர்கள் குறித்து இன்னும் பல ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்