வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (02/05/2017)

கடைசி தொடர்பு:09:59 (02/05/2017)

செல்லூர் ராஜு மட்டும் பாகுபலி காலத்தில் பிறந்திருந்தால்...?

என்னதான் புதுசு புதுசா பிரேக்கிங் நியூஸ்கள் வரட்டுமே?. நம்ம மீம்ஸ் க்ரியேட்டர் பார்ட்டிகளுக்கு, செல்லூர் ராஜூவின் 'தெர்மோகோல் மிதக்கவிடு' சமாச்சாரம் போல், 'கண்ணா லட்டு திங்க ஆசையா?'ன்னு இன்னொரு நல்ல 'சம்பவம்' மாட்டுவது கஷ்டமே. அதனால், அதுபோல 'அடுத்த ஆபரேஷனை' செல்லூர் ராஜு கொடுத்தாதான் உண்டு'ன்னு அவர் இருக்கும் திசை, அவர் போகும் திசைன்னு அவரையே கண்ணு ரெண்டும் பிதுங்க பிதுங்க உத்து உத்து பார்த்தபடி இருக்கிறார்கள். அது இருக்கட்டும், நமக்கும் அவரை அத்தனை சீக்கிரத்தில் விட மனசு வரவில்லை. இவர் இன்னும் கொஞ்சம் முன்பு பிறந்து இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காரியத்தை செய்திருந்தால், என்னவெல்லாம் நடந்திருக்கும். ஒரு குய்யாமுய்யாங் கற்பனை (முக்கிய குறிப்பு:இது முழுக்க முழுக்க கற்பனையே மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல. வழக்குகள் குறிப்பிட்ட நீதிமன்றத்தில் மட்டுமே நடக்கும்).

செல்லூர் ராஜு


வெள்ளையர்களை எதிர்த்து கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார் வரலாற்றில் தனி இடம் பதித்திருக்கிறார். காந்தி முதல் கட்டபொம்மன் வரை எல்லோரும் தங்கள் உடல் பொருள் ஆவியை மட்டும் சுதந்திர போராட்டத்தில் அர்ப்பணிக்க, வ.உ.சி பலப்படி தாண்டி தனது கப்பல் தொழிலே நஷ்டமாகும் அளவுக்கு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போ,செல்லூர் ராஜூ மட்டும் இருந்திருந்தால், வ.உ.சிக்கு ஏற்பட்ட நட்டம் பட்டம் போல பறந்து போயிருக்கும். கப்பல்ங்கிறது காஸ்ட்லி ஐயிட்டம். அந்த தொழில் வெள்ளைக்காரர்களால் பாதிகப்பட்டதால்தான் அவருக்கு கடுமையான நஷ்டம். செல்லூர் ராஜூவின் இப்போதைய திட்டப்படி ராட்சத தெர்மோகோல்களை, வங்காள விரிகுடாவில் விட்டு, அதன்மூலமாக வ.உ.சி தொழில் செய்திருந்தால், எந்த வெள்ளைக்காரன் தடுத்தாலும், நஷ்டம் இல்லாமல் இருந்திருப்பார். 
 
அப்புறம், 'சொல் புதிது, பொருள் புதிது'ன்னு கவிதையை புதிதாக வடிக்க பாடுப்பட்ட மீசைக்கார பாரதிக்கு, செல்லூர் ராஜூ செயல் அட்டகாசமாக பயன்பட்டிருக்கும். 'வெள்ளிப்பனி மலைமீதுலாவுவோம்..மேலை கடல் முழுவதும் கப்பல் விடுவோம்'ன்னு பாடினார். நல்ல பாட்டுதான். ஆனா, அவருக்கு முன்பே பல கவிஞர்கள் கப்பலை வச்சு கவி வடிச்சுட்டாங்க. அதனால், பாரதி நினைத்த 'சொல் புதிதி, பொருள் புதிது'ன்னு நான் எழுத நினைத்த விசயம் இந்த பாட்டில் இல்லை'யேங்கிற விரக்தில அவன் மீசை துடிச்சுருக்கலாம். யார் கண்டா?!. அதனால், அப்போ மட்டும் செல்லூர் ராஜு தத்துவம் பாரதி பார்வைக்கு போயிருந்தா, 'வெள்ளிப்பணி மலைமீதுலாவுவோம்... மேலை அணை முழுக்க தெர்மோகோல் விடுவோம்'ன்னு மாத்தி பாடி இருப்பார். அவர் நினைத்த 'புதிய சொல், புதிய பொருள்' சமாச்சாரம் ஒர்க் அவுட் ஆயிருக்கும். செல்லூர் ராஜு தயவுல வரலாறு இன்னும் பல சிறப்புகளை பாரதிக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும்.
 
நம் முன்னோர்களெல்லாம் ராஜ்கிரண் மாதிரி சோத்துல 'அணை' கட்டி தொந்தி வளர்த்த நேரத்துல, பென்னிக்குயிக்கிங்குற வெளிநாட்டுக்காரன் முல்லை பெரியாறு அணையை தனது சொத்தை வித்துப்புட்டு அந்த காசைப்போட்டு கட்டி இருக்கார். நல்ல விசயம்தான். அதைவிட, 'அங்கே அணை கட்ட முடியாது'ன்னு வல்லுநர்களெல்லாம் கூவிய நிலையில்தான், 'அங்கேயே கட்டுவேன்'ன்னு ஒத்தைக் கால்ல நின்னு கட்டி முடித்து சாதனை படைத்தார். அவரை அந்த பகுதி மக்கள் இப்போ தெய்வமாக வணங்கினாலும், அவரது சந்ததி இப்போ சோத்துக்கே அல்லாடும் நிலையில் இருக்கலாமில்லையா?. அதனால், அவர் அணை கட்டிய காலத்தில் செல்லூர் ராஜு இருந்திருந்தால், அணையை அரணாக அமைத்த கல் சுவரை தெர்மாகோல்களை வைத்து அமைத்திருப்பார். இதனால், அவரது சொத்தும் இருந்திருக்கும். அவரது சந்ததிக்கு இப்போ சோறும் கிடைத்திருக்கும். அவர் காலத்தில் செல்லூர்ராஜுங்கிற அறிவுஜீவியை படைக்காமல் போன அந்த ஆண்டவன் மட்டும் என் கையில் கிடைத்தால்....?.
 
இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்குற முக்கால்வாசி அணைகள் காமராஜர் அய்யா கட்டியதுதான். அவ்வளவு அணைகளை அவர் கட்டியும் இப்போ, ஒரு அணையிலும் தண்ணி இல்லை. 'அணைகளில் 'தண்ணி' காட்டும் தண்ணியை தேக்க, செல்லூர் ராஜு போல் அப்போது ஐடியா கொடுப்பார் யாருமில்லாமல் காமராஜர் திணறியதன் விளைவே, இப்போது அவர் அமைத்த பல அணைகளில் தண்ணி இல்லை'ன்னு நாசா ஆய்வு மையம் ஆய்வு வெளியிட்டிருக்கிறது. ஒரு வசதியும் இல்லாத அந்த காலத்திலயே இத்தனை அணைகளை வெட்டிய காமராஜருக்கு, அந்த அணைகளில் தேக்கப்பட்ட தண்ணியை ஆவியாகாம தடுக்க இம்புட்டுகாண்டு தெர்மாகோல்களை வாங்கி மிதக்கவிடணும்னு ஐடியா கொடுக்க நம்ம செல்லூர்க்காரர் இல்லாம போயிட்டாரு பாருங்க. விதி யாரை விட்டது பாஸ்...!.
 
'நீரில் மூழ்கும் பொருளுக்கு சமமான எடையுள்ள நீர் வெளியேறும்'ன்னு மிதவை தத்துவம் கண்டுபிடித்த ஆர்க்கிமிடிஸுக்கு வரலாற்றில் சிறப்பான இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் துணியில்லாமல் தொட்டியில் உள்ள தண்ணியில் படுத்து குளித்தபோதுதான், மிதவை தத்துவத்தை கண்டுபிடித்திருக்கிறார். அதுவரை ஓகே. ஆனா, அதன்பிறகு கண்டுபிடித்த குஷியில்தான் பப்பிஷேமாக இருப்பதை மறந்து அப்படியே பல தெருக்களை கடந்து மன்னனை போய் பார்த்து, தனது கண்டுபிடிப்பை சொல்லி இருக்கார். அதனால்,செல்லூர் ராஜு திட்டப்படி தெர்மாகோலை கையோடு வைத்திருந்தால், அதனை கொண்டே மிதவை தத்துவத்தை கண்டுபிடித்திருக்கலாம். அதோடு, மன்னனை பார்க்க போனபோது தெர்மாகோலை வைத்து, வடிவேல் ஒரு படத்தில் குடங்களை கொண்டு தன் மானத்தை மறைப்பதைபோல் மறைத்திருக்கலாம். மானம் கப்பலேறி இருக்காது. என்ன பண்ணுவது, செல்லூர் ராஜூ மாதிரி மேதைகள் அரிதாகதானே பூமியில் அவதரிக்கிறார்கள்!.

பாரதியே பீல் பண்றப்போ வாலி பண்ணாமயா இருப்பார்? ஆமாங்கோ, பிரண்ட்ஸ்ஷிப்புக்கு இலக்கணம் வடிக்கும் விதமா அவர் கொடுத்த, 'முஸ்தபா முஸ்தபா டோன்ட்வொர்ரி முஸ்தபா'ங்கிற பாட்டுல, 'டே பை டே டே பை டே வாழ்க்கை பயணம் டே பை டே, மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான்'ன்னு எழுதினார். அப்போ அந்த பாடல் பீக்குல இருந்தாலும், அடுத்தடுத்து நண்பர்கள் பாட்டு வந்து அத மூழ்கடிச்சுட்டுது. இதே செல்லூர்ராஜு அப்போ இருந்திருந்தா, இந்த கிடைத்தற்கரிய செயலை செய்திருந்தால், வாலி தனது பாட்டை 'மூழ்காத தெர்மாகோலே பிரண்ஸ்ட்ஷிப்தான்'ன்னு காலகாலத்துக்கும் டிரெண்டிங்கிலேயே இருக்கும் பிரண்ட்ஸ்ஷிப் பாடலை கொடுத்த வரலாற்று சம்பவம் நிகழ்ந்திருக்கும். அந்த நல்ல சம்பவம் நடக்கலையே!.

எல்லாத்தையும்விட, சோகமா உட்கார்ந்திருப்பவர்களை பார்த்து, 'என்னாச்சு, கப்பல் கவுந்தாப்புல உட்கார்ந்திருக்க?' ன்னு கேட்கிறார்கள். செல்லூர் ராஜு இந்த சொலவடை உருவாவதற்கு முன்பு பிறந்திருந்தால்?. வேறென்ன, 'என்னாச்சு, தெர்மாகோல் கவுந்தாப்புல உட்கார்ந்திருக்க'ன்னு சோக பார்ட்டிகளை பார்த்து, டயலாக் மாத்தி பேசிக்கிட்டு இருந்திருப்போம். நடக்கலையே.. அந்த நல்லவர் அப்ப பிறக்கலையே!.
 
இவ்ளோ ஏன் பாஸ்? செல்லூர் ராஜு மட்டும் பாகுபலி காலத்துல பிறந்திருந்தா கட்டப்பா கையால பாகுபலி செத்திருக்கவே மாட்டாரு. எப்படினு கேக்குறீங்களா? அதை படம் பாத்துட்டுதான் சொல்ல முடியும். வெயிட் பண்ணுங்க!


டிரெண்டிங் @ விகடன்