டுகாட்டியை வாங்குகிறதா ஹீரோ?

 

இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் டீசல் கார்களின் மாசு அளவுகளில் மோசடிசெய்த ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், தற்போது எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், மாசு மோசடியில் பாதிக்கப்பட்ட கார்களை ரீ-கால் செய்து, அதைச் சரிசெய்ததாலும், அதற்கான அபராதத் தொகையைச் செலுத்தியதன் வெளிப்பாடாகவும், கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. எனவே, தனது குழும நிறுவனங்களில் ஒன்றான டுகாட்டியை, இப்போது விற்பனைசெய்யும் முடிவில் இருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

 

 

கடந்த 2012-ம் ஆண்டில்தான், டுகாட்டியைக் கையகப்படுத்தியது ஃபோக்ஸ்வாகன். நான்கு  சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, 2 சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பளிக்கக் கூடிய விஷயமாகவே அப்போது பார்க்கப்பட்டது. அதற்கு, ஃபோக்ஸ்வாகனுக்கு டுகாட்டியின் இத்தாலிய டிஸைன் மற்றும் தொழில்நுட்பத்திறன் மீதான ஈர்ப்புதான் காரணமாக இருந்தது. டுகாட்டியின் ஆண்டு வருமானம், சுமார் 100 மில்லியன் யூரோ என்றளவில் தற்போது இருக்கிறது. 

 

 

அந்த நிறுவனத்தை வாங்கும் போட்டியில், சீனாவைச் சேர்ந்த டூ-விலர் தயாரிப்பாளர்களுடன் இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் உள்ளது. ஒருவேளை டூகாட்டியை ஹீரோ வாங்கிவிட்டால், அது அவர்களுக்கு மிகப்பெரிய மதிப்பையும், தொழில்நுட்பரீதியில் மிகப்பெரிய பலமாகவும் அமையும் என்பதே உண்மை!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!