Published:Updated:

“பொறுத்ததுபோதும்... பொங்கி எழு..!’’ பன்னீர்செல்வத்தின் ‘மனோகரா’ முடிவு

“பொறுத்ததுபோதும்... பொங்கி எழு..!’’ பன்னீர்செல்வத்தின் ‘மனோகரா’ முடிவு
“பொறுத்ததுபோதும்... பொங்கி எழு..!’’ பன்னீர்செல்வத்தின் ‘மனோகரா’ முடிவு

“பொறுத்ததுபோதும்... பொங்கி எழு..!’’ பன்னீர்செல்வத்தின் ‘மனோகரா’ முடிவு

பொறுத்துப்பார்த்து பொங்கி எழுவார்கள்... பன்னீர்செல்வம் பொதுக்கூட்டத்துக்குக் கிளம்பிவிட்டார். அதிமுக ஆரம்பித்த நாளிலிலிருந்தே அதன் எந்த ஒரு விவகாரமும் ஆச்சர்யமும் அதிர்ச்சியுமின்றி நடந்ததில்லை. ஒரே வீட்டில் படுத்துறங்கி ஒருவரின் வெற்றியை மற்றவரின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டு ஒன்றாக வளர்ந்த கருணாநிதி - எம்.ஜி.ஆர் என்ற இரண்டு நெருங்கிய நண்பர்களின் மனக்கசப்பால் அதிமுக என்ற கட்சி உருவானதே முதல் அதிர்ச்சி. ஆறே மாதத்தில் பாராளுமன்ற வெற்றி, 5 வருடங்களில் ஆட்சிக்கட்டில், எம்.ஜி.ஆரின் மரணத்திற்குப்பின் பலம்பொருந்திய அணிகளை எதிர்த்து ஜெயலலிதா வெற்றிபெற்றது, மற்றும் ஊழலை எதிர்த்து உருவான கட்சியின் தலைவியான ஜெயலலிதா ஊழலில் கைதானது வரை அதன் பழைய அதிர்ச்சிகள் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் சசிகலா பொதுச் செயலாளரானது, குனிந்த தலை நிமிராமல் சசிகலாவுக்கும் சேர்த்தே கும்பிடு போட்டுவந்த ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தி சசிகலா தரப்புடன் மல்லுக்கட்டுவது என்பதெல்லாம் இன்றைய புதிய அதிர்ச்சிகள்.
ஓ.பி.எஸ் துவங்கிய தர்மயுத்தத்தின் முதல் பலி கட்சியின் இரட்டை இலை. சசிகலா, தினகரன் கைதுகளை அடுத்து அமைச்சர்களும் நடுக்கத்தில், 'கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' என்பதை புரிந்துகொண்டு ஓ.பி.எஸ் சுடன் இணைய ஆர்வம் காட்டி அழைப்புவிடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இப்போது.

ஆனால் 2 நிபந்தனைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இணைவதில் முரண்டு பிடிக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. போகுமிடமெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கான சமிக்ஞையை இன்றுகாலை வரை கொடுத்துக்கொண்டே இருக்க, அதுபற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் பொதுக்கூட்டம், பொறுப்பாளர்கள் நியமனம் என பேப்பரும் கையுமாக மாவட்டங்களுக்கு டூர் கிளம்பிவிட்டார் ஓ.பி.எஸ்.

நேற்றுவரை இணைப்பு குறித்து பேசிவிட்டு திடீரென யு டர்ன் எடுக்க என்னகாரணம் என்பது குறித்து ஓ.பி.எஸ் அணியின் காஞ்சி மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

“ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதையும், சசிகலா தரப்பினர் முழுவதுமாக கட்சியிலிருந்து வெளியேறவேண்டும், என்பதை குற்றச்சாட்டுக்களாக வைத்துத்தான் கட்சியில் தனி அணிக் கண்டார் ஓ.பி.எஸ். அதிமுக ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோலவே மீண்டும்  செல்வாக்குடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்திலிருந்தே மேற்சொன்ன 2 விஷயங்களில் உறுதியாக இருந்தார். தினகரனுக்கு சிக்கல் எழுந்ததையடுத்து கட்சியிலிருந்து சமரசக்குரல் வந்தபோது, கட்சியின் எதிர்காலம் கருதி அந்த சமரசத்தை ஏற்க முடிவுசெய்தார். ஆனால் அவர்கள் முதலுக்கே மோசம் என்பதுபோல் எந்த காரணத்திற்காக ஓ.பி.எஸ் வெளியில் வந்தாரோ அதையே கைவிடச் சொன்னார்கள். இதனால் அவர் குழம்பிப்போனார். சீனியர்களிடம் இதுபற்றி அவர் ஆலோசனை நடத்தினார்.

“ஜெயலலிதா இருந்தவரை நீங்கள் டம்மி போல் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டீர்கள். மக்கள் உங்களுக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. ஆனால் இன்று  நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. சசிகலா குடும்பத்தை எதிர்த்து, தனி அணி கண்டபிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சியில் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஒரு தலைவராக உருவாகிவருகிறீர்கள். இது ஓர் அரிய நிகழ்வு. ஜெயலலிதாவின் மரணத்தில் நீதிவிசாரணை கேட்ட, உங்களின் விசுவாசம்தான் மக்களின் இந்த ஆதரவு நிலைக்கு முக்கிய காரணம். இந்த சந்தர்ப்பத்தில் கட்சியின் ஒற்றுமையைக் காக்கிறேன் பேர்வழி என நீங்கள் இந்த 2 கோரிக்கைகளை கைவிட்டுவிட்டு இணைய நேர்ந்தால் மக்கள் மத்தியில் இதுநாள்வரை இருந்தசெல்வாக்கு ஒரே நிமிடத்தில் காணாமல் போய்விடும். திரும்ப அதை எக்காலத்திலும் சம்பாதிக்கமுடியாது.

அவர்களின் திட்டமும் அதுதான். இணைப்பை நிகழ்த்திவிட்டு நம்மை வேண்டுமென்றே அவமானப்படுத்தத்துவங்குவார்கள். பதவி, பொறுப்புகளை தராமல் புறக்கணிப்பார்கள். அப்போது நாம் கோபமடைந்து வெளியேறினாலும் பலன் ஒன்றுமிருக்காது. மக்கள் மத்தியில் கேலிக்குரிய விஸயமாகிவிடுவோம்" என எச்சரித்தார்களாம். கூடவே, 'இங்கிருந்து அங்குபோய்ச் சேர்ந்தால் மட்டுமல்ல; அங்கிருந்து இங்கு வந்துசேர்ந்தாலும் அது கட்சியின் ஒற்றுமையைக் காப்பாற்றும் செயல்தான். எனவே அவர்கள் இங்கு வரும் வேலைகளை நாம் இனி பார்ப்போம்” என தெளிவாக சொன்னார்களாம். 

'இரண்டு நிபந்தனைகளை ஏற்பதாக முடிவெடுத்தால் பேச்சுவார்த்தை குறித்து சிந்திப்போம். அதேசமயம் இப்படி தனி அணியாக இருந்துகொண்டு அவர்களின் முடிவுக்கு காத்திருந்தால் எப்படியும் நாம் இணையக் காத்திருப்பதாக மக்கள் நினைப்பார்கள். பேச்சுவார்த்தையை இழுப்பதன்மூலம் தினகரன் தரப்பு சாதிக்க நினைப்பதும் இதுதான். அதனால் பேச்சுவார்த்தைக்கு நாமே ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தொடர்ந்து நம் அணியைப் பலப்படுத்தும் வேலையில் இறங்குவோம்' என்றனராம்.
இதன்பின்னரே பொதுக்கூட்டங்கள் நடத்துவது, அணிக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்வது என அணியை கட்டுக்கோப்பாக்க முடிவெடுத்தாராம் ஓ,பி.எஸ்.

அதிமுக துவங்கியபோது அண்ணா பிறந்த ஊர் என்பதால் காஞ்சியில்தான் கட்சியின் முதற்கொடியை ஏற்றினார் எம்.ஜி.ஆர். விஜயகாந்த் கட்சித் துவங்கியபோது ராசிக்காக காஞ்சியில்தான் தன் முதல்பொதுக்கூடடத்தை நடத்தினார். அதனாலேயே தற்போது காஞ்சி மாவட்டத்தில் முதன்முறையாக தனது அணியின் பொறுப்பாளர்களை நியமிக்கும் முடிவெடுத்திருக்கிறார்.ஓ,பி.எஸ் . இதையொட்டி வருகிற 5 ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் நடக்கவிருக்கிற பொதுக்கூட்டத்திற்கு முன்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் 3 பகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிக்கப்பட உள்ளார்கள்” என்றார்.

இதன்படி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்துக்கு ஆலந்துார் வெங்கட்ராமன் தலைமையில் 3 ஒருங்கிணைப்பாளர்களும், மேற்கு மாவட்டத்துக்கு ஆர்.வி.ரஞ்சித்குமார், பாலாஜி மற்றும் மு.காமராஜ் ஆகியோரும் நியமிக்கப்படலாம் என்கிறார்கள். ஒருங்கிணைந்த மாவட்டத்தில்வரும் 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளராக மைத்ரேயன் எம்.பி இருப்பார். இதில் மத்திய மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் பரிசீலனை நடந்துவருகிறதாம். இப்படி அடுத்தடுத்து அனைத்துமாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமிப்பதோடு தேர்தல் கமிஷனலிலும் அதிமுக என்ற அங்கீகாரத்தைப்பெற தீவிர சட்டப்போராட்டத்தை நடத்தும் மனநிலையில் உள்ளது ஓ.பி.எஸ் தரப்பு என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு