Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைசூர், குமுளி, கோவா, சிம்லா.. கோடைச் சுற்றுலா எங்கே போகலாம்.. எப்படிப் போகலாம்? #QuickGuide

கோடை விடுமுறை ஆரம்பமான பிறகு, பலரது கேள்வி, ‘இந்த ஆண்டு சுற்றுலா எங்கே  போகலாம்?’ என்பதாகத்தான் இருக்கும். சென்ற முறை சுற்றுலா  போனபோது, ‘அடுத்த முறை எங்கயோ போகணும்னு நெனைச்சோமே... அது எங்கனு மறந்து போச்சே!’ என்று புலம்புபவர்களுக்கும், ஐடியாவே இல்ல... என்பவர்களுக்கும் ஒரு க்விக் கைடு! 

சுற்றுலா

1) மைசூர் பக்கத்தில் இருக்கும் ஶ்ரீரங்கப்பட்டினம். இங்கே காவிரி ஆற்றோரம் கர்நாடக அரசின் காட்டேஜ் இருக்கிறது. non a/c அறை 1435 ரூபாய். ஏசி அறை 2000 ரூபாய். குடும்ப அறை 8 படுக்கைகள் கொண்டது 4200 ரூபாய் மட்டுமே. இங்கே தங்கினால் , திப்புசுல்தான் அரண்மனை, தொன்மையான பெருமாள் கோவில், சிறை வளாகம் என சுற்றிப்பார்க்கலாம். இந்த ஊரே வரலாற்று எச்சம் போல தெறித்து கிடக்கிறது. 

இங்கே காட்டேஜில் தங்கினால், மாலை மற்றும் இரவு நேரங்களில் காவிரி ஆற்றின் ஓரம் சேர் போட்டு அமர்ந்து காவிரியின் சிலிர்ப்பான நடனத்தை காவிரியே உருவாக்கும் இசையோடு களித்து ரசிக்கலாம். இங்கு பியர் மற்றும் அனைத்து மதுவகைகளும் அளிக்கிறார்கள். உணவும் வழங்க ரெஸ்டாரண்ட் உள்ளது.

1.1 ) இங்கே இருந்து கிளம்பி கூர்க் செல்லலாம். இங்கே இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கூர்கில் கோனி கொப்பா என்ற இடத்தில் டாட்டா ப்ளாண்டேஷன் பங்களா உள்ளது. பழைய பிரிட்டிஷ் கால எஸ்டேட் பங்களா. இங்கே தங்குவது அபூர்வமான அனுபவம். ஆனால் விலை ஜாஸ்தி. 5000 ரூபாய் ஆகும் ஒரு நாளைக்கு. இதில் மூன்று வேளை உணவும் அடக்கம். சுவையான பன்றிக்கறி சமைப்பதில் விற்பன்னர்கள் கூர்க் ஆசாமிகள். இந்தியாவின் பேரழகிகள் கூர்க் பெண்கள். இதை நான் சொல்லவில்லை. லேடி மௌண்ட்பேட்டனின் நெருங்கிய நண்பரின் ஓப்பன் பிரகடனம் இது.

1.2 ) ஶ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் கபினி அணை இருக்கிறது. இங்கேயும் தங்கலாம். வழி முழுக்க கானகம் தான். நாகர்ஹோளே நேஷனல் பார்க் வைல்ட் லைஃபுக்கு பிரசித்தம். காட்டுக்குள் நிறைய காட்டேஜ்கள் இருக்கின்றன. வைல்ட் லைஃபை ரசிக்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் புலியைப் பார்க்கலாம். என்னதான் துரதிருஷ்டசாலியாக இருந்தாலும், காட்டுப்பன்றியாவது காண்பது நிச்சயம். 

1.3 ) கபினியைத் தாண்டி சென்றால் பண்டிப்பூர் கானகம். இங்கேயும் தங்க அரசாங்க விடுதிகள் உள்ளன. இதைத்தாண்டி சென்றால் நம்மூர் முதுமலை. இங்கே வனத்துறை ரெஸ்ட் ஹவுஸ்கள் உள்ளன. இங்கே தங்கினால் காலையிலும் மாலையிலும் மான் கூட்டம் நம் அறை வாசலில் சியர்ஸ் சொல்லும். இங்கே அப்பியாரண்யம் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று உள்ளது. இதுவும் வனத்துறைக்கு சொந்தமானதே. இது காட்டுக்கு நடுவே உள்ளது. இது மட்டுமே அங்கே இருக்கும். இங்கே தங்கினால் யானைக்கூட்ட தரிசனம் நிச்சயம்.

2) குற்றாலத்தில் குளித்து விட்டு, பார்டர் கடை பரோட்டாவை முங்கி விட்டு காரை எடுத்து குமுளி நோக்கி ஓட்டினால், அரை மணி நேரம் மசமசவென போகும். சரேலென்று மலைப்பாதை ஆரம்பிக்கும். இரு பக்கத்திலும் பச்சைபசேல் என கானகம் விரியும். குமுளி செல்லும் வரை இதே காட்டு தர்பார்தான். அவ்வளவு அழகான ரம்மியமான பாதை. முதல் முறை டேட்டிங்க் செல்பவர்கள் இந்த பாதையில் செல்லலாம். வழி நெடுக்க அழகான கேரள கிராமங்கள். ஃப்ரெஷான ப்ளம்ஸ் பழங்கள் போல கேரள அழகிகள் என ஜமாயாக இருக்கும். குமுளி சென்றதும் தேக்கடியில் தங்கலாம். அரசு காட்டேஜ்கள் உள்ளன. 1500 ரூபாய் முதல் அறைகள் கிடைக்கும். லேக் பேலஸ் என தனியான குட்டித்தீவில் ஒரு அரண்மனை உள்ளது. ராஜாக்கள் ஓய்வு விடுதியாக இருந்திருக்கும். இங்கே தங்க சீசன் டைமில் ஒரு நாளைக்கு 25,000 / - ரூபாய் மட்டுமே. இந்த அரண்மனைக்கு படகில்தான் செல்ல வேண்டும். போஸ்ட் வெட்டிங்க் ஷூட்டுக்கு லட்சக்கணக்கில் செலவழிக்கும் இன்றைய இளசுகள் ஏன் இங்கே தங்கி தேன்நிலவு கொண்டாடக்கூடாது ? யானைப்பிளிறல்களுக்கு இடையே ரொமான்ஸ் த்ரில்லிங்காகத் தானே இருக்கும்!

2.1 ) குமுளிக்கு அருகிலேயே சுமார் 40 கிமீ தொலைவில், கவி ஈக்கோ டூரிஸம் செயல்பட்டு வருகிறது. இதற்கு குமுளியிலேயே முன்பதிவு செய்து கொள்ளலாம். அடர் காட்டுக்கு நடுவே தங்கலாம். உணவு கொடுத்து விடுவார்கள். பழங்குடியினர் உடன் வர காட்டுக்குள் நடந்து உலா செல்லலாம். பழங்குடியினர் நலனுக்காக, அவர்கள் ஒத்துழைப்புடன் அரசு செயல்படுத்தும் திட்டம் இது. காட்டின் நடுவேயும் டெண்ட் அடித்து தங்கலாம். ஒரு நபருக்கு 3000 வரை செலவாகும். 

சுற்றுலா

2.2 ) குமுளியில் இருந்து வாகமன் செல்லலாம். இங்கும் வன பங்களாக்கள் இருக்கின்றன. வித்தியாசமான மலை மேடுகளைக் கொண்ட  ஊர் வாகமன். குமுளி முதல் வாகமன் வரை செல்லும் பாதை முழுக்கவே சொர்க்கம் தான். கண்ணுக்கு காட்சிகளை வழிய வழிய வழங்கிக்கொண்டே இருக்கும் இந்த பாதை. 

3) சிம்லா செல்ல வேண்டுமா ? அதற்கு அழகான அற்புதமான வழி ஒன்று இருக்கிறது. டெல்லியில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் மூலம் கல்கா என்னும் சிற்றூரை அடைந்து விடுங்கள். அங்கே அரசு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. அதில் தங்கிக்கொள்ளுங்கள். மறுநாள் காலை 5 மணி முதல் 6 மணி வரை 4 ரயில்கள் கல்காவில் இருந்து சிம்லாவிற்கு செல்லும். இவை நார்மல் ரயில்கள் அல்ல. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் ரயிலைப்போன்றது. ஆனால் அதை விட அற்புதமாக வடிவமைக்கப்பட்டது. அதிலும் ரயில் கார் என்று ஒரே ஒரு பெட்டியுடன் ஓடும் ரயில் ஒன்றும் உள்ளது. விலை மலிவுதான். முன்கூட்டி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். irctc.co.in மூலமே செய்து கொள்ளலாம். மிக வசதியான இந்த ரயில்கள் மூலம் இமயமலையில் 5 மணி நேரம் பயணிப்பதை யோசித்துப் பாருங்கள். அதிலும் அதிகாலை, இமயமலை பயணம் மனதை கொள்ளையடிக்கும். இந்த ரயில் யுனெஸ்கோ அங்கீகரித்த ஹெரிடேஜ்  ரயில். வழியில் சில இடங்களில் நிற்கும். வழியில் பாரோக் என்று ஒரு ஸ்டேஷன் வரும். அங்கே இறங்கி கண்ணை மூடித் திறந்தால் , ஸ்விட்சர்லாந்தில் ஒரு கிராமத்து ஸ்டேஷனில் இருப்பது போல உணருவீர்கள். மற்றபடி இந்தியாதான் என்பதால் ஸ்டேஷனில் பஜ்ஜி விற்பார்கள். வாங்கித் தின்று விட்டு இமயமலையில் நம் பங்குக்கு வாயுவை வெளியேற்றியபடி செல்லலாம்.

3.1) சிம்லாவில்  இருந்து அடுத்து செல்ல இரண்டு வாய்ப்புகள் உள்ளன. கடும் அட்வென்ச்சர் பிரியர் என்றால், சிம்லாவில் இருந்து கல்பா, காசா வழியாக கேலாங் அல்லது ஜிஸ்பா சென்று அடையலாம். அட்வென்ச்சர் என்றால் திட்டமிட்ட அல்லது உருவாக்கும் அட்வென்ச்சர் கிடையாது. நிஜமான உயிருக்கே வேட்டு வைக்கக்கூடிய அட்வென்ச்சர். பாதையே இருக்காது. சமயங்களில் வழியில் பனி உருகி பாதையை பெயர்த்து எடுத்துக்கொண்டு ஆறு ஓடும். உதவிக்கு யாரும் இருக்க மாட்டார்கள். மூச்சுத்திணறல் ஏற்படலாம்.மூக்கில் ரத்தம் வரலாம். ஆனால் சாகசத்தின் உச்சகட்டம் இந்த வழியே பைக்கில் பயணம் செய்வது.

3.2) இவ்ளோ அட்வென்ச்சர் எல்லாம் வேண்டாம். எந்திரன் 2.0 பார்க்க வேண்டும் என்ற லட்சியம் இருந்தாலோ, அடுத்த மாசம் ஆர்டி பணம் முதிர்வு அடைகிறது என்ற நிலையில் இருந்தாலோ, உங்களுக்கு மாற்று ஏற்பாடு உள்ளது. சிம்லாவில் இருந்து மணாலி செல்லலாம். 

மணாலி அருகே நகர் என்ற சிற்றூர் உள்ளது. இங்கே அரசு ஒரு காட்டேஜ் நடத்துகிறது. இது ராஜா தங்கிய விடுமுறை கால பங்களா. இதை அந்த பாழாய்ப்போன ராஜா எதோ வெள்ளைக்காரனுக்கு விற்றுத் தொலைத்து இருக்கிறார். அதில் தங்கலாம். சுற்றிலும் இருக்கும் பனிமலையை ரசிக்கலாம். இந்த அரண்மனை ரோஜா உள்ளிட்ட பல படங்களில் நன்றாக நடித்து பர்ஃபார்மன்ஸ் செய்துள்ளது. 

நிக்கோலஸ் ரோரிச் என்ற ரஷ்ய ஓவியர் இந்த ஊருக்கு இந்தியா சுதந்திரம் அடையும் முன் விசா கிசா ஏதும் இல்லாத காலகட்டத்தில் வந்தவர், ஊர் பிடித்துப்போய் தங்கி விட்டார். இங்கே இருந்து நிறைய ஓவியங்கள் வரைந்து இருக்கிறார். இந்தியா சுதந்திரம் வாங்கிய ஆறு மாதங்களில் இறந்து விட்டார். இவருடைய புதல்வர்களில் ஒருவர் நம்நாட்டு அந்தக்கால சினிமா ஹீரோயின் தேவிகா ராணியை கல்யாணம் செய்து கொண்டார். தேவிகா ராணியின் கணவரும் ஓவியர்தான். இப்போது எந்த ஹீரோயினாவது ஓவியரைக் கல்யாணம் செய்து கொள்வார்களா? இங்கே “நகர்” ல் ரோரிச் மியூசியம் ஒன்றை அமைத்துள்ளனர். அங்கே சென்று அவருடைய ஓவியங்கள் மற்றும் அவருடைய புதல்வரின் ஓவியங்களைக் காணலாம். இந்த ஓவியரை பார்க்க ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி இவரின் இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர். கலைக்கான முக்கியத்துவம் காலாவதியாகிப் போனதை இதைப்போன்ற இடங்களுக்கு வந்தால் உணர முடியும். இப்போது ஒரு ஓவியரையோ, எழுத்தாளரையோ பார்க்க ஒரு எம்பி கூட வர மாட்டார். அதும் இதைபோன்ற சிரமமான மலைவழியில்.

3.3 ) மணாலியில் இருந்து கேலாங், ஜிஸ்பா, சார்ச்சு வழியாக லே சென்று அடையலாம். இதுவும் ரிஸ்க்தான். ஆனால் கல்பா, காசா அளவுக்கு ரிஸ்க் அல்ல. பைக்கில் அல்லது கார் மூலம் செல்ல முடியும். செம அட்வென்ச்சர் செய்யறோம்பா, செம செம என நாம் பைக்கை திருகிக்கொண்டு மலைப்பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கும்போது, அசால்டாக ஒரு அரசுப்பேருந்து நம்மைத் தாண்டி செல்லும். அந்த பேருந்தின் கண்டிஷன் நம்மூர் பழைய பல்லவன் ரேஞ்சிக்குத்தான் இருக்கும். அந்த அரசுப்பேருந்தின் ஓட்டுநர் பீடி குடித்தபடி ஒத்தைக்கையால் பாதையே இல்லாத வழித்தடத்தில் சர்வ சாதாரணமாக ஓட்டிச்செல்வார். நமக்குத்தான் அட்வென்ச்சர். மணாலி முதல் லே வரை 350 கிலோ மீட்டர் இருக்கும். அரசுப்பேருந்தில் கட்டணம் ரூ.300 இருக்கலாம். யோசித்துப்பாருங்கள், 300 ரூபாய் கட்டணத்தில் இமயமலையில் பேருந்து பயணம் !

4) போடி அருகே இருக்கும் மேகமலை 

5) கோவை அருகே இருக்கும் டாப் ஸ்லிப், வனச் சரணாலயம். இங்கேயும் தங்கலாம். சென்னை வனச்சரக அலுவலகத்திலேயே முன் பதிவு செய்துகொள்ளலாம். 

6) சேலம் அருகே இருக்கும் கொல்லிமலை - ஏற்காடு - ஹொக்கேனக்கல் - ஏலகிரி

7) அவுத்து விட்ட கோழி போல, சுதந்திரமாக திரிய வேண்டுமா ? பீச் பீச் பீச் என டால்ஃபின் போல துள்ளிக்குதிக்க வேண்டுமா ? ஹிப்பிக்கள் போல தறிகெட்டுத் திரிய வேண்டுமா ? உலக அழகிகளை ஒரே இடத்தில் சைட் அடிக்க வேண்டுமா ? உங்களுக்கே தெரிந்து இருக்கும். ஆம், கோவாதான்.

ரயிலில் 940  ரூபாய் ஆகும் போய்விட்டு வருவதற்கு. தங்குமிடம் 500 ரூபாய் முதல் கிடைக்கும். வாஸ்கோ எக்ஸ்பிரஸ் என்று ஒரு ரயில் பிரதி வெள்ளிக்கிழமை நாசகார சென்னையில் இருந்து சொர்க்கலோகம் கோவாவிற்கு மதியானம் கிளம்புகிறது. ஒரு பியர் போத்தல் 50 ரூபாய்க்கு கிடைக்கும். உணவு சென்னையை விட மலிவுதான். பீச்சில் நுழைவதற்கு நுழைவு கட்டணம் ஏதுமில்லை. ஃபாரீன் நங்கைகளை சைட் அடிக்கவும் கட்டணம் ஏதுமில்லை. ஊர் முழுக்க பீச் தான். வகதூர் என்ற சிற்றூரில் இருக்கும் பீச், அவ்வளவு அழகானது. ஸ்மால் வகத்தூர் என்று கேட்டுப்போய் பாருங்கள். இயற்கை வடிமைத்த நீச்சல் குளம் கடலுக்குள்ளேயே இருப்பதை காண்பீர்கள்.

டூர்

8) க்ராபி, தாய்லாந்து 

வழக்கமாக எல்லோரும் செல்லும் பேங்காக், பட்டாயா விட்டு விட்டு புக்கட் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள யாவோ நாய், யாவோ யாய் போன்ற தீவுகளுக்குச் செல்லலாம். புக்கட்டில் இருக்கும் பங்க்ளா ஸ்டிரீட் இரவு நேர சொர்க்கம். பார்கள், பப்கள் என உற்சாகம் கொப்பளிக்கும். அங்கே இருக்கும் பதாங்க் பீச், கேஷுவலாக, பல நாட்டைச் சேர்ந்தவர்களை தற்காலிக ஜோடியாக பிடிக்க ஏற்ற இடம்.  

புக்கட்டில் இருந்து ஃபெர்ரி மூலம் க்ராபி செல்லலாம். வேன் மூலமும் செல்லலாம். க்ராபியிலேயே விமான நிலையமும் உள்ளது. சென்னை/ திருச்சியில் இருந்து கனக்டிங்க் விமானம் மூலம் 7000 ரூபாய்க்குள் நேரடியாக கிராபி செல்லலாம். அழகான அமைதியான நகரம் க்ராபி. க்ராபியைச் சுற்றி ஏராளமான தீவுகள் உள்ளன. ப்ரைவேட் லாங் டெயில் போட் வாடைக்கு எடுத்துக்கொண்டு ஒரு நாள் முழுக்க தீவுகளுக்கு இடையில் சுற்றலாம். கடலுக்கு நடு நடுவே எழும்பி நிற்கும் பாறைகள் கடலின் அழகை கூட்டிக்காட்டும். 

8.1) ரெய் லே பீச்.

க்ராபியில் இருந்து 30 நிமிட படகு பயணத்தில் இருக்கிறது ரெய்லே பீச். தனிமையான, அழகான பீச். ரொமாண்டிக்காக குளிக்க ஏற்ற இடம். தனியாக சென்றாலும் பெருமூச்செறிந்து கொண்டு கடலில் குளிக்கலாம். காதலன் இடுப்பில் பிகினியோடு எகிறி அமர்ந்து கொண்டு காதல் வசனம் பேசியபடி குளிப்பது இந்த பீச்சின் ஸ்பெஷாலிட்டி.

8.2) டோன்சாய் பீச் 

ரெய்லே பீச்சில் இருந்து நடக்கும் தூரத்தில் இருப்பது டோன்சாய் பீச். ஆனால் ஒரு சிறு குன்றைக் கடக்க வேண்டும். ஏறி இறங்க வேண்டும். இது ஒரு சின்ன இடம்தான். கடலுக்கும் பின்னால் அரண் போல எழும்பி நிற்கும் மலைக்கும் நடுவில் இயற்கையாக உண்டான ஒரு சிறிய ஏரியாதான் டோன்சாய் பீச். அதிக பட்சம் 50 குடும்பங்கள் இங்கே இருக்கலாம். மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டரில்தான் ஓட்ட வேண்டும். இந்த 50 குடும்பங்களே தங்குமிடம் மற்றும் உணவகங்கள் நடத்தி வருகின்றனர். ஏசி காட்டேஜ் ஒன்றும் உள்ளது. இவ்வளவு சிறிய ஒரு தீவு போன்ற இடத்தில் இரவு நேர கேளிக்கைகள் களை கட்டுகின்றன. ஒப்பன் ஏர் டிஸ்கோ, சாகச விளையாட்டுக்கள், விதம் விதமான உணவுகள், பல நாட்டைச் சேர்ந்த பல பின்னணியைக் கொண்ட மனிதர்கள் என ரகளையான வாழ்கை. சின்ன இடம் என்பதால் இரண்டு நாட்கள் தங்கினாலே எல்லோரும் பழக்கமாகி விடுகிறார்கள். யாருடன் வேண்டுமானாலும் ஒரு பியர் அடித்துக்கொண்டு மொக்கை போடலாம், நடனமாடலாம். இங்கே இருந்தால், நேரம் நீண்டு கிடப்பதைப் போலத் தோன்றும், ஆனால் பத்தாது போலவும் தோன்றும்.

9) யோக்யகர்த்தா - இந்தோனேஷியா 

பழமையான இந்தோனேஷிய நகரம். ப்ரம்பனான், போரோபுடூர் என்று இரண்டு தொன்மையான கோவில்கள் இருக்கின்றன. நம்மூர் ராமாயணத்தை அவர்கள் பாணியில் நாட்டிய நாடகமாக ஆடி ஓடி காட்டுவார்கள்.

10) சியாம் ரீப் - கம்போடியா 

உலகப்புகழ்பெற்ற ஆங்கோர் வாட் கோவில்கள் இருக்கும் நகரம். ஈ விசா எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாள் பத்தாது இந்த பிரம்மாண்டமான, பரந்து விரிந்த கோவில்களைப் பார்ப்பதற்கு. உலகின் மிகப்பெரிய கோவில் இதுதான் எனச் சொல்லலாம். இந்துக்கோவிலாக இருந்து புத்தர் கோவிலாக மாற்றப்பட்டது என்ற சர்ச்சையும் இந்தக் கோவிலைச் சுற்றி வந்தாலும், ரசிப்பதற்கும், வியப்பதற்கும் சர்ச்சை தடையாக இருப்பதில்லை. பூஜை புனஸ்காரம் ஏதுமில்லை என்பதால் நிம்மதியாக சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம். 

சுற்றுலா செல்லும் முன் என்னென்ன செய்ய வேண்டும் என்று செக் லிஸ்ட் போட்டு, அவற்றையும் செய்துவிட்டு.. எஞ்சாய் த டூர்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement