Published:Updated:

எப்போது மாறும் இந்த சோகம்?

எப்போது மாறும் இந்த சோகம்?
எப்போது மாறும் இந்த சோகம்?

ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியா உருவாகிறது, புதிய இந்தியா உருவாகிறது என்று மத்திய அரசு தங்களது ஆட்சியை வர்ணித்து வருகின்றது. ஆனால், மருத்துவமனைக்கு சடலத்தை எடுத்துச் செல்லக்கூட உதவிசெய்ய முடியாத சூழல்தான், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் நிலவிவருகிறது.

எப்போது மாறும் இந்த சோகம்?


குறிப்பாக, கடந்த ஆண்டு ஆம்புலன்ஸ் தராததால், ஒடிசாவில், தனது மனைவியின் சடலத்தைத் தோளில் சுமந்துசென்ற சம்பவம், நாடு முழுவதும் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதேபோன்ற சம்பவங்கள், மற்ற சில மாநிலங்களிலும் தொடர்ந்து நடந்தன. இந்த நிலையில், தினசரி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவரும், யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில், தற்போது இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி, தனது 15 வயது மகனுக்கு காலில் ஏற்பட்ட ஒரு பிரச்னையால் அவரை எட்டவா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதற்கிடையே, அவரைப் பார்த்த சில நிமிடங்களிலேயே, 'உங்களது மகன் உடலில் உயிர் இல்லை, எடுத்துச் செல்லுங்கள்' என்று கூறிவிட்டு மருத்துவர்கள் சென்றுவிட்டனர்.


மேலும், அவரது மகனின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்துகொடுக்கப்படவில்லை. இதனால், தனது 15 வயது மகனின் உடலை, தனது தோளிலேயே சுமந்தபடி வீட்டுக்குச் சென்றுள்ளார் அந்த கூலித்தொழிலாளி.