Published:Updated:

“ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்... கூவத்தூர் கதை... ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!” #NewsChat

“ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்... கூவத்தூர் கதை... ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!” #NewsChat
“ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்... கூவத்தூர் கதை... ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!” #NewsChat

ஜார்ஜ் தூக்கி அடிக்கப்பட்ட மர்மம்!

* ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் சென்னைப் போலீஸ் கமிஷனர் மற்றும் டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த ஜார்ஜ், வட சென்னை கூடுதல் கமிஷனர் சாரங்கன், வட சென்னை இணை கமிஷனர் நிர்மல் குமார் ஜோஷி, புதுவண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார் உள்ளிட்ட 22 அதிகாரிகள் மீது எதிர்க்கட்சியினர் புகார் கிளப்பினர். அதையடுத்து, அவர்களைக் கூண்டோடு மாற்றியது தேர்தல் கமிஷன். கடந்த இரண்டு வாரங்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் நின்றுபோன மறுநாளே இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கியிருக்கவேண்டும். ஆனால், எடப்பாடி அரசு அவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. இந்த நிலையில், தமிழக அளவில் போலீஸ் அதிகாரிகள் மாறுதல் லிஸ்ட் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில், ஜார்ஜை டம்மியான தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநராக நியமித்துள்ளனர். அவர் ஓய்வுபெற நான்கு மாதங்களே உள்ளன. தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பதவியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்துவந்தார். இந்தப் பதவியில் அமர்ந்தால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீடிப்பு பெறலாம் என்பது அவரின் திட்டம்.

இதற்குமுன்பு, ராமானுஜம் மற்றும் அசோக்குமார் அந்தப் பாணியில் பதவிபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜார்ஜுக்கு இனி அதற்கு சான்ஸே இல்லை. சென்னை மாநகர கமிஷனராக ஜார்ஜ் இருந்தபோது, அவருக்கும் தற்போதைய சட்டம் - ஒழுங்குப் பிரிவு (பொறுப்பு) டி.ஜி.பி-யான ராஜேந்திரனுக்கும் பனிப்போர் நிலவியது. இவரும்கூட அடுத்த மாதம் ஓய்வுபெறுகிறார். தற்போதுள்ள பொறுப்பு பதவியில் அப்படியே ரெகுலர் ஆக இரண்டு ஆண்டுகள் தொடர, முயற்சி செய்து வருகிறார். ஜார்ஜுக்கும் ராஜேந்திரனுக்கும் நடந்துவந்த இந்த அதிகாரப் போட்டியில் ஜார்ஜுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், ஓய்வு பெறுகிற நிலையில் உள்ள அதிகாரிகள் யாருக்கும் இரண்டு ஆண்டுகள் பதவி நீடிப்பு வழங்கக்கூடாது என்று மத்திய அரசு கண்டிப்பாகச் சொல்லியிருப்பதால் ராஜேந்திரனுக்கும் சந்தேகம்தான். இருந்தாலும், முதல்வர் எடப்பாடி மூலம் மத்திய அரசை அணுகி மீண்டும் பதவியைப் பெற்றுவிடலாம் என்பது ராஜேந்திரனின் எதிர்பார்ப்பு.

செந்தாமரைக்கண்ணனுக்கு செக்!

* எடப்பாடி கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் 122 பேரைக் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கவைத்திருந்தபோது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவர் சொன்னபடி, அங்கிருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு போலீஸ் டார்ச்சர் கொடுத்ததாகக் குற்றம்சாட்டினர். அந்தநேரத்தில், கூவத்தூரை உள்ளடக்கிய வடக்கு மண்டல ஐ.ஜி-யாக இருந்தவர்தான் செந்தாமரைக்கண்ணன். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி-யாக இருந்தவர் முத்தரசி. இந்த இருவரையும் அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையான வார்த்தைகளால் திட்டியது பற்றியெல்லாம் எடப்பாடியாரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அமைச்சர்கள் சொன்னதைக்கேட்டு, இரண்டு போலீஸ் அதிகாரிகளையும் எடப்பாடியார் முதல்வர் பதவியில் அமர்ந்ததும் மாற்றி உத்தரவு போட்டார். இதுநாள் வரை அவர்களுக்குப் பதவி எதுவும் வழங்காமல் விட்டிருந்தார். தற்போது செந்தாமரைக்கண்ணனை டம்மியான தொழில்நுட்பப் பிரிவு ஐ.ஜி-யாக நியமித்துள்ளனர். மாவட்ட எஸ்.பி பதவியில் இருந்த முத்தரசியை டி.ஜி.பி ஆபீஸில் நிர்வாகப் பிரிவில் ஃபைல் பார்க்கும் வேலையில் உட்காரவைத்துவிட்டனர்.

ஜெயித்த சத்தியமூர்த்தி... தோற்ற தாமரைக்கண்ணன்!

சென்னை மாநகர போலீஸில் பவர்ஃபுல் பதவி - உளவுத்துறை ஐ.ஜி. அந்தப் பதவியில் இருந்தவர் தாமரைக்கண்ணன். 'சசிகலா, தினகரனின் உறவுக்காரர் என்பதால், கொங்கு மண்டலத்து கவுண்டர் சமூகப் பிரமுகர்கள், அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடியாரிடம் கோள்மூட்டி மாற்றிவிட்டனர்' என்றே போலீஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். உளவுத்துறையின் ஐ.ஜி-யாக இருக்கும் சத்தியமூர்த்தி, கவுண்டர் சமூகத்தவர். அவர் கன்ட்ரோலில் சென்னை மாநகர போலீஸின் உளவுப்பிரிவு வரவேண்டும் என்பதற்காகவே, இந்த மாறுதல் போட்டிருக்கிறார்கள். சத்தியமூர்த்தியைப் போலவே, ஐ.ஜி. அந்தஸ்தில் இருப்பவர் தாமரைக்கண்ணன். எனவே, சத்தியமூர்த்தியால் தாமரைக்கண்ணனிடம் ரகசிய உத்தரவுகளைப் பிறப்பிக்கமுடியாது. எனவே, தாமரைக்கண்ணனை மாற்றிவிட்டு, எஸ்.பி அந்தஸ்தில் துணை கமிஷனர் பதவியில் திருநாவுக்கரசு என்பவரைப் புதிதாக நியமித்திருக்கிறார்கள். உளவுத்துறையைப் பொறுத்தவரை, இனி திருநாவுக்கரசு, சத்தியமூர்த்தியின் உத்தரவுகளைச் செயல்படுத்துவார். 

சென்னை போலீஸின் உளவுப்பிரிவின் ஐ.ஜி. பதவியை எஸ்.பி. லெவலுக்குப் பதவி இறக்கம் செய்துள்ளது மிகப்பெரிய தவறு. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசின் பேட்ஜை சேர்ந்த விமலா என்பவர் ஏற்கெனவே மாநகர உளவுப்பிரிவு துணை கமிஷனராக இருக்கிறார். இந்த இருவருக்கும் உளவுப்பணியில் என்ன வேலை என்பதை இனிமேல்தான் பிரித்துக்கொடுக்கப் போகிறார்களாம். 

"ஏற்கெனவே சென்னை போலீஸ், மாநகர போலீஸாக இருந்தது. புறநகர் ஏரியாக்களைக் கூடுதலாகச் சேர்த்து பெருநகர போலீஸாக மாற்றினர். அந்த நேரத்தில், உளவுத்துறைக்கு டி.ஐ.ஜி. அந்தஸ்தில் இணை கமிஷனர் பேனரில் அதிகாரியை நியமித்தார்கள். காரணம், 134 காவல் நிலையங்கள், 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களைக் கொண்டது பெருநகர போலீஸ் ஏரியா. இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உளவுப்பிரிவுக்கு உண்டு. இந்த நிலையில், ''தற்போது நியமிக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு, உளவுப்பிரிவுக்குப் புதியவர். அவரால், பெருநகர சென்னை போலீஸ் ஏரியாவை எப்படிக் கண்காணிக்க முடியும்?" என்று சந்தேகம் எழுப்புகிறார்கள் மாநகர போலீஸ் அதிகாரிகள். 

* கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காலியாக இருந்தது மாநில உளவுப்பிரிவின் டி.ஜ.ஜி பதவி. தற்போது அந்தப் பதவியில் நிர்மல் குமார் ஜோஷி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரும் உளவுப்பிரிவுக்குப் புதியவர். இவருக்கு டி.ஜி.பி. ஆபீஸில் அறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அட்வைஸர் பதவியில் இருந்த ராமானுஜம் அமர்ந்திருந்த ஓர் அறை தற்போது காலியாக உள்ளது. அதேபோல், உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி பதவியில் யாரும் நியமிக்கப்படாததால், அந்த அறையும் காலியாக இருக்கிறது. இந்த இரண்டு அறைகளில் ஒன்றை நிர்மல் குமார் ஜோஷிக்கு ஒதுக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், டி.ஜ.ஜி பதவியில் இருப்பவருக்கு உயர் அதிகாரிகளின் அறைகளை வழங்கமாட்டார்கள். எனவே, கூடுதல் டி.ஜி.பி அறைக்குத் தற்போதைய ஐ.ஜி சத்தியமூர்த்தி மாறுவார். இவர் அமர்ந்திருக்கும் அறையை நிர்மல் குமார் ஜோஷிக்கு ஒதுக்குவார்கள் என்று தெரிகிறது. 

யார் இந்த திருநாவுக்கரசு?

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் கிருஷ்ணகிரி எஸ்.பி-யாக இருந்தவர் திருநாவுக்கரசு. அ.தி.மு.க சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கவேண்டிய பலகோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துவிட்டார். தற்போது எடப்பாடி கோஷ்டியில் உள்ள தம்பிதுரை, அந்தச் சமயத்தில் திருநாவுக்கரசிடம் பிரஸர் கொடுத்தும் மறுத்துவிட்டார். அதனால், ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றதும் அவரிடம் சொல்லி திருநாவுக்கரசை சென்னை டி.ஜி.பி ஆபீஸில் டம்மி பதவிக்குத் தூக்கியடித்தார்கள். அவருக்குத் தற்போது சென்னை மாநகர போலீஸின் உளவுப்பிரிவு துணை கமிஷனர் பதவி கிடைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வருகிற சூழ்நிலையில், திருநாவுக்கரசு நியமனம் தம்பிதுரைக்கு இந்த மாறுதல் எரிச்சலை உண்டுபண்ணியுள்ளது.