Published:Updated:

''நான் இப்போ துபாயின் மிகச்சிறந்த மாணவி!'' சாதித்த 'தங்கமீன்கள்' சாதனா

''நான் இப்போ துபாயின் மிகச்சிறந்த மாணவி!'' சாதித்த 'தங்கமீன்கள்' சாதனா
''நான் இப்போ துபாயின் மிகச்சிறந்த மாணவி!'' சாதித்த 'தங்கமீன்கள்' சாதனா


'ங்கமீன்கள்' திரைப்படத்தில் செல்லம்மாவாக நடித்து அனைவரின் மனங்களையும் மகிழ்ச்சியில் துள்ளவைத்தவர் சாதனா. அந்தப் படத்துக்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது வென்ற சாதனா, படிப்பிலும் தன் திறமையை நிரூபித்து, தான் வசிக்கும் துபாய் நாட்டின் மிகச்சிறந்த மாணவிக்கான விருதை வென்றுள்ளார். 

ஆண்டு தோறும் துபாய் நாட்டில் வழங்கப்படும், 'Hamdan Bin Rashid Al Maktoum Award for Distinguished Academic Performance (HBRADAP)' என்ற விருதை அந்த நாட்டின் மன்னரிடமிருந்து பெற்றுள்ளார். அந்த விருதை இயக்குநர் ராம் அவர்களுக்குச் சமர்ப்பித்த மகிழ்ச்சியோடு பேசுகிறார் சாதனா. 

"துபாய் நாட்டில்தான் பிறந்து வளர்ந்தேன். நடுவில் கொஞ்ச காலம் பெற்றோர்களுடன் சென்னையில் வசித்தேன். 'தங்கமீன்கள்' படம் ரிலீஸாகறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே மறுபடியும் ஃபேமிலியோட துபாயில் செட்டில் ஆகிட்டோம். இப்போ பத்தாவது படிச்சுட்டு இருக்கேன். சின்ன வயசுல இருந்தே படிப்பு, நடிப்பு, டான்ஸ், மியூசிக்னு எல்லாத்திலும் ஆர்வமா இறங்கிடுவேன். என்னோட பேரண்ட்ஸ், என் ஆர்வங்களைச் சரியா அடையாளம் கண்டுபிடிச்சு, பிரகாசிக்கக் களம் அமைச்சுக் கொடுத்தாங்க. துபாயில் செட்டில் ஆனதும், இருபது வருஷங்களா துபாய் நாட்டு அரசு மாணவர்களுக்கு வழங்கும் 'சிறந்த மாணவருக்கான விருது' பற்றி தெரிஞ்சுகிட்டேன். ''உங்கிட்ட பல திறமைகள் இருக்குது. அவை எல்லாம் வெளியே தெரிய இந்த விருது சிறந்த வாய்ப்பாக இருக்கும்'னு அப்பா வெங்கடேஷூம், அம்மா லட்சுமியும் என்கரேஜ் பண்ணினாங்க. 

இந்த விருதை வாங்குறது அவ்வளவு சுலபம் இல்லை. கடைசி மூணு வருட பள்ளிப் படிப்பில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களை வாங்கணும். அடுத்து, ஏதாவது ஒரு முக்கியமான தனித்திறமை இருக்கணும். குழந்தை நட்சத்திரமாக 'தங்கமீன்கள்' படத்துக்குத் தேசிய விருது வாங்கினதும், இப்போ 'பேரன்பு' படத்தில் நடிக்கிறதும் அந்தத் தகுதிக்கான சிறப்பாக அமைஞ்சது. அதோடு, விருது வாங்க மற்ற மூணு சப் டேலன்ட்ஸ் இருக்கணும். அதுக்கு டான்ஸ், சிங்கிங், டிராயிங்னு என்னோட திறமைகள் கைகொடுத்துச்சு. மூணு பயனுள்ள இதர பொழுதுபோக்குகள் இருக்கணும். அபாகஸ், வீணை வாசிப்பது, புத்தகம் வாசிக்கும் பழக்கம்னு என்னோட பொழுதுபோக்கு விஷயங்களைச் சேர்த்தேன். 

இப்படியான எல்லாத் திறமைகளிலும் மாநில, தேசிய, சர்வதேச அளவில் பரிசுகளையும் விருதுகளையும் வாங்கி இருக்கணும். எல்லாத்துக்குமே முறையான ஆவணங்களைக் காட்டணும். இதை எல்லாம் விருது குழுவினர் கணக்கிட்டு, அதுக்குப் பிறகு பல மணி நேரம் இன்டர்வியூ வைப்பாங்க. நான் குழந்தை நட்சத்திரம் என்பதால், சில விஷயங்களை நடிச்சுக் காட்டச் சொன்னாங்க. சில நோட்ஸ் கொடுத்து வீணை வாசிக்க, பரதநாட்டியம் ஆடவும் சொன்னாங்க. கடைசியில் 1000 மதிப்பெண்களுக்கு 994 வாங்கினேன். 

இவ்வளவு தகுதிகளும் எதுக்குன்னா, 'ஒரு மாணவர் வளரும் பருவத்திலேயே மிகத் திறமையான குடிமக்களாக, ஆல்ரவுண்டரா இருக்கணும்' என துபாய் நாட்டு அரசு நினைக்கிறது. இதன்படி எல்லா நிலைகளையும் கடந்து மிகச்சிறந்த மாணவிக்கான விருதையும், இந்திய மதிப்பில் ஐந்தரை லட்சம் தொகையையும் பரிசா வாங்கினேன். இந்தியாவில் ஜனாதிபதி கையால் தேசிய விருது வாங்கின மாதிரி, இங்கே துபாய் மன்னரிடம் சிறந்த மாணவிக்கான உயரிய விருது வாங்கினது மகிழ்ச்சியா இருக்கு" என உற்சாகமாகச் சொன்னார் சாதனா. 

"இந்த விருது மூலம் தொடர்ந்து படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கும். உயர்கல்வி, வேலைக்குப் போகும்போதும் இந்த விருது எனக்குப் பெரிய தகுதியா இருக்கும். என்னோட திறமைகளுக்கு உயிர்கொடுத்து சாதனையாளரா என்னை மாத்தினது என்னோட அப்பா அம்மா. அவங்களுக்கு ரொம்பவே நன்றி. படிக்கும் 'ஜெம்ஸ் அவர் ஓன் இண்டியன் ஸ்கூல்' நிர்வாகத்துக்கும் நன்றி. யாருக்குமே தெரியாத இந்த சாதனாவை, 'தங்கமீன்கள்' செல்லம்மாவாக மாற்றியது இயக்குநர் ராம் அங்கிள்தான். அவர்தான் என்னோட நடிப்புத் திறமைக்கு அங்கீகாரம் கொடுத்தாரு. இப்போ, 'பேரன்பு' படத்திலும் நடிக்கவெச்சு இருக்கார். என்னோட அப்பாவும் அம்மாவும் என் மேல வெச்சிருக்கும் பாசத்துக்கு இணையாக, ராம் அங்கிளும் என் மேல உயிரையே வெச்சிருக்கார். அதனால், இந்த விருதை ராம் அங்கிளுக்கு டெடிகேட் செய்றேன்'' என்கிறார் புன்னகையுடன். 

பின் செல்ல